Published:Updated:

சங்கீத கலாநிதி சுதா!

வீயெஸ்வி

சங்கீத கலாநிதி சுதா!

வீயெஸ்வி

Published:Updated:
##~##

ருமுறை பலமாக கைத்தட்டிப் பாராட்டுவோம். இந்த வருஷம் மியூஸிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி விருது’-க்குத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் சுதா ரகுநாதன்.

புதிய தலைமுறைக்குக் கதவு திறந்துவிட்டிருக்கிறது அகாடமி. இதுவரை, 70 வயது நிரம்பிய கலைஞர்களுக்கே அகாடமி விருது வழங்கு வது மரபு. விருது வாங்க மேடை ஏறி வருபவர்கள் தடுமாறாமல் இருக்க, இரண்டு பேர் கைத்தாங் கலாக அழைத்துவரும் நிகழ்வும் உண்டு. இனிமேல் புது ஜெனரேஷன். சுதா ரகுநாதன், இதில் ஆரம்பப் புள்ளி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டு வருடங்களாகவே, சுதா ரகுநாதனின் பெயர் தேர்வு கமிட்டியின் பார்வையில் கடைசிச் சுற்று வரை வந்துள்ளது. இப்போது, இரண்டு மாதங்களுக்கு முன்பு மறுபடியும், 'இந்த வருடம் கலாநிதி சுதாவாமே?’ என்று கர்னாடக இசை வட்டத்தில் பேச்சுக் கிளம்பியது. ''இருக்காது... போன வருடம்தான் ஜி.என்.பி. ஸ்கூலைச் சேர்ந்த திருச்சூர் ராமச்சந்திரனுக்குக் கொடுத்தாங்க. உடனே அதே ஸ்கூலைச் சேர்ந்த எம்.எல்.வி. - மாணவிக்குத் தர மாட்டாங்க...''

என்று மறுப்புக் குரல்களும் ('சுதாவுக்கு விருது கிடைத்துவிடக் கூடாதே’ என்று பிள்ளையாரி டம் தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண் டவர்கள்) ஒலித்தன.

சங்கீத கலாநிதி சுதா!

''எனக்கு போன் செய்து தகவல் சொன்ன அகாடமியின் தலைவர் என்.முரளி, ஏகமனதாகவே என் பெயர் தேர்வு பெற்றதாகச் சொன்னார்'' என்ற சுதாவின் குரலில் ஆயிரம் வாட்ஸ் மகிழ்ச்சித் துள்ளல்!

டாக்டராக விரும்பியவர் சுதா ரகுநாதன்; ஆனால், எத்திராஜ் கல்லூரியில் படித்து, பொருளாதாரம் பட்டம் பெற்றவர். கூடவே கர்னாடக இசையிலும் ஆர்வம். டெல்லியிலிருந்து மியூஸிக் ஸ்காலர்ஷிப்பும் கிடைத்தது. எம்.எல்.வசந்தகுமாரியிடம் மாணவியாகச் சேர்ந்தார். அவருடன் 12 வருடங்கள் இருந்து தன்னைப் பட்டைத் தீட்டிக்கொண்டார். இறுதியில், முழுநேரப் பாடகி!

இனிமையான தனது குரலை மூலதனமாகக்கொண்டுக் கடுமையாக உழைத்து, தான் செய்யும் கச்சேரிகளை ஜனரஞ்சகமாக்கி, தன்னுடைய பாப்புலாரிட்டியைப் பெருக்கிக்கொண்டவர் சுதா. 'உலகம் சுற்றும் வாலிபி’ஆக அயல்நாட்டு மேடைகளை அலங்கரித்துவருபவர். 'கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி...’ போன்ற பாடல்களால் பலரையும் வசீகரித்தவர்.

''உங்கள் லேட்டஸ்ட் போட்டோ ஏதாவது இருக்கா?'' - கடந்த ஞாயிறு அன்று சுதாவிடம் பேசும்போது கேட்டேன்.

''இருபது வருஷமா... நாங்க ஒரே மாதிரிதானே இருக்கோம்!'' - பட்டென்று வந்தது பதில்.

பின்குறிப்பு: 'அடுத்த வருடம் சங்கீத கலாநிதி விருது யாருக்கு?’ அநேகமாக 'சித்திர வீணை’ ரவிகிரணாக இருக்கும். இந்த வருடம் இவர் பெயர் இரண்டாவது இடத்தில் இருந்ததாகத் தகவல்.

பார்ப்போம்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism