Published:Updated:

சாதிப் பஞ்சாயத்துகள்!

காதலின் திகீர் வில்லன்கள்டி.அருள் எழிலன், ஓவியம்: அரஸ்

சாதிப் பஞ்சாயத்துகள்!

காதலின் திகீர் வில்லன்கள்டி.அருள் எழிலன், ஓவியம்: அரஸ்

Published:Updated:
##~##

ளவரசன் - திவ்யா காதலின் துயர முடிவு, தமிழகத்தில் ஆதிக்க சக்திகளுக்குப் புதிய வீரியத்தை அளித் திருக்கிறது. சமீபமாக, நாளிதழ் களில் காவல் நிலையத்தில் தஞ்சம் அடையும் காதல் ஜோடிகள் பற்றிய செய்திகள் ஏகத்துக்கும் அதிகரித்திருக்கின்றன. சாதியை மீறிக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட காதலர்கள், மிரட்டப்படுகிறார்கள்; பிரிக்கப்படுகிறார்கள். சிலர், தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இப்போது குழந்தையுடன் இருக்கும் கலப்புத் திருமணத் தம்பதிகளுக்குக்கூட சாதிச் சங்கங்கள் அச்சுறுத்தல் விடுக்கின்றன! கௌரவக் கொலைகள் மீது அனைவர் பார்வை யும் படர்ந்திருக்கும் இந்தச் சமயத்தில்தான், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக அதிர்ச்சி அளிக்கிறது எவிடென்ஸ் அமைப்பின் அறிக்கை. அந்தக் கொலைகளின் பின்னணிகுறித்து சில பகீர் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் கதிர்.

''கௌரவக் கொலைகளில் மூன்றுவிதம் உள்ளன. தன் பெண்ணைக் காதலிக்கும் தலித் ஆணைக் கொல்வது, தலித் ஆணைக் காதலிக்கும் தன் பெண்ணைக் கொல்வது, சாதி மீறிக் காத லிக்கும் இருவரையுமே கொல்வது. நிகழும் பெரும்பாலான படுகொலைகளில் மிகச் சில சம்பவங்கள் மட்டுமே வெளியுலகின் பார்வைக்குத் தெரிகிறது. பல படுகொலைகள், குடும்பத்தினராலும் கிராம சாதிப் பஞ்சாயத்துகளாலும் மறைக்கப்படுகின்றன. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில் நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வுகள், காதல் திருமணம் தொடர்பான தகராறுகளை சாதிப் பஞ்சாயத்துகளே தீர்மானிக்கின்றன என்பதை உணர்த்தியது. 2012-ம் வருடம் மட்டுமே தமிழகம் முழுக்க 1,949 கௌரவக் கொலைகள் நடந்துள்ளன. அதில் பெரும்பாலானவர்கள் சாதி இந்துப் பெண்கள். இதுபற்றி நேர்மையான போலீஸ் விசாரணை நடத்தப்பட்டால், அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளிவரும்!'' என்றார் கதிர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதிப் பஞ்சாயத்துகள்!

சேத்தியாதோப்புப் பகுதியில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட கவியரசனும் அனிதாவும் தங்கள் உறவினர்களுக்கு பயந்தல்ல; சாதிப் பஞ்சாயத்தாருக்கு பயந்தே தலை மறைவாக இருக்கின்றனர். செய்யாறைச் சார்ந்த  தலித் சமூகத்தைச் சேர்ந்த சீனிவாசனுக்கும் மறவர் சமூகத்தைச் சேர்ந்த பிரதீபாவுக்கும் காதல். பிரதீபாவின் தந்தை, தி.மு.க. வட்டாரத்தில் பெரும்புள்ளி. அந்த அரசியல் அழுத்தம், சீனிவாசனின் தந்தையை வரதட்சணை வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்தது. ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர் ஆன காதலர்களின் திருமணத்தை அங்கீகரித்து அனுப்பியிருக்கிறது நீதிமன்றம். தந்தையும் விடுதலையானார்.    

சாதிப் பஞ்சாயத்துகள்!

''ஐய்யம்பட்டி என்ற ஊரில் சாதி கடந்து காதலித்த பெண்ணை, அவள் முறைப்பையனை ஏவி பாலியல் வன்முறை செய்யத் தூண்டியிருக்கிறார்கள். காதலர்களை மட்டுமல்ல; அந்த இரு குடும்பங்களையுமே ஊரைவிட்டு விலக்கிவைக்கி றார்கள். பெரும்பாலும் போலீஸார், ஆதிக்க சாதிக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள். அதுதான் வேதனையிலும் வேதனை!'' என்கிறார் பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவேடியப்பன்.

சாதிப் பஞ்சாயத்துகள்!

காதல் திருமணம் புரிந்ததற்காக ஊர் விலக்கம் செய்யப்பட்டிருக்கும் சுரேஷிடம் பேசினோம்.

''தருமபுரி பக்கம் வேப்பமரத்தூர் என் சொந்த ஊர். நான் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவன். அரூர் பக்கம் உள்ள பறையப்பட்டியைச் சார்ந்த சுதாவும் நானும் மூன்று ஆண்டுகளாகக் காதலித்து, 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். அப்புறம் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா, இளவரசன் - திவ்யா விவகாரத் துக்குப் பின்னாடி ஊர் பஞ்சாயத்தார், 'உன் சம்சாரத்தை நாங்க தலித்னு சந்தேகப்படுறோம். அவங்க வேற என்ன சாதியாகவும் இருக்கட் டும். ஆனா, தலித்தா மட்டும் இருக்கக் கூடாது. நீ அதை ஊரார் முன்னிலையில் நிரூபிக்க ணும்’னு சொன்னாங்க. என் மனைவியையும் அழைத்துக்கிட்டு, என் பிறந்த நாள் சான்றி தழையும், பள்ளிச் சான்றிதழையும் கொண்டு வந்து கொடுக்கணும்னு உத்தரவு போட்டாங்க. 'இது நான் பிறந்த ஊர். இங்கே நான் வாழ உங்க யார்கிட்டயும் அனுமதி வாங்க வேண் டிய அவசியம் இல்லை’னு சொல்லிட்டேன். இப்போ ஒட்டுமொத்தமா எங்க குடும்பத்தையே ஊர் விலக்கம் பண்ணிட்டாங்க. ஊர்ல யாரும் எங்ககூட பேசக் கூடாது, பழகக் கூடாதுனு கட்டுப்பாடு விதிச்சிருக்காங்க. இப்போ நான் உயிர் பயத்தில் ஊரைவிட்டு மனைவி, குழந்தையைக் கூட்டிட்டு வெளியேறிட்டேன். கடைசில அவங்க நினைச்சதை சாதிச்சுட் டாங்க!'' என்று கலங்கும் சுரேஷ§க்கும் சுதாவுக்கும் ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

இப்படி, சாதி பூதம் தமிழகம் முழுக்க காதலர்கள் மத்தியில் உண்டாக்கும்  பேரச்சத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றக் கோரிக் கதறுகிறது காதல்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism