Published:Updated:

நெக்ஸ்ட்... கஸ்தூரிக்குக் கல்யாணம்!

ஆதீனத்தின் அடுத்த ஆபரேஷன்சண்.சரவணக்குமார், படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

நெக்ஸ்ட்... கஸ்தூரிக்குக் கல்யாணம்!

ஆதீனத்தின் அடுத்த ஆபரேஷன்சண்.சரவணக்குமார், படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Published:Updated:
##~##

துரை ஆதீனத்தைச் சந்திப்பது என்றால் விசேஷம்தான். அதுவும் கொலை மிரட்டல், போலீஸ் பாது காப்பு என்று மீண்டும் பரபர வளையத்துக்குள் வந்திருப்பவரைச்  சந்திப்பது என்றால், பழம் - நழுவி- பால் கதைதான். (ஆதீனம் என்பதால் 'ஞானப்பால்’!)

''சிவன், கனவில் வந்து அருள்பாலிக்கும் ஆதீனத்துக்கே கொலை மிரட்டலா? அதுவும் போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு...''  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அது ஒரு சதிகாரக் கும்பல். தமிழகம் அமைதியாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இந்த அரசுக்குத் தொடர்ந்து கெட்ட பெயரை உண்டாக்கத் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள்.. இது நல்லதல்ல!''

''இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்களே. என்ன காரணம் ஸ்வாமி?''  

''அதுவும் ஒரு கொலைகார, சதிகாரக் கும்பல்தான். அவர்கள் யார் என்று காவல்துறைதான் கண்டுபிடிக்க வேண்டும்.என்னை யும் மிரட்டுகிறார்கள். யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக் கரம்கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழ்நாடு போன்ற 'ஞானபூமியில்’ இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது நல்லதல்ல.  அம்மாவுக்குக் கெட்ட பெயர் உண்டாக்கவே இப்படியெல்லாம் செய்கிறார்கள்!'

நெக்ஸ்ட்... கஸ்தூரிக்குக் கல்யாணம்!

''போனில் மிரட்டியவரின் குரல், உங்களுக்குப் பரிச்சயமான குரலாக இருந்ததா?''

''இன்வெஸ்டிகேஷன் இஸ் கோயிங் ஆன். ஒன் டே போலீஸ் வில் அரெஸ்ட் தெம்!''

''ஒருவேளை, நித்தியானந்தா தரப்பில் இருந்து  யாரேனும் உங்களை மிரட்டியிருப்பார்களா?''

(நித்தியானந்தா என்றதும் முகத்தில் கவலை ரேகை படர்கிறது)  ''நித்தியானந்தா, மடத்தைவிட்டுப் போய்விட்டார். அவ ரோட சேப்ட்டர் ஓவர். அவருக்கும் நமக் கும் இப்போது எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரிடம் இருந்து அச்சுறுத்தல் வந்திருக்க வாய்ப்பே இல்லை!''

''மதுரையில் இப்போது யார் பவர் சென்டர்... மதுரை ஆதீனமா... அழகிரியா?''

('எதுக்குயா இந்தக் கேள்வி’ என்பதுபோல பார்க்கிறார்!) ''எங்கள் பணி வேறு; அவர்கள் பணி வேறு. எங்கள் பணி சைவமும் தமிழும் கலந்த ஆன்மிகப் பணி. அவர்கள் அரசியல் செய்கிறார்கள். உண்மையில், மதுரையின் பவர் சென்டர், மதுரை மீனாட்சிதான்!''

''காதலுக்குத் தீவிர ஆதரவாளர் நீங்கள். தற்போது நடக்கும் காதலுக்கு எதிரான சம்பவங்கள் பற்றி..?''

''காதல் பற்றி பேசினாலே வில்லங்கம் வந்திருது தம்பி. அதனால 'நோ கமென்ட்ஸ்’னு எழுதிவிட்ருங்க!''

''இளமைக் காலத்தில் காதலித்த அனுபவம் உண்டா..?''

''நான் கல்லூரியில் மனோதத்துவப் பாடம் படித்தேன். படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால், காதலிக்க நேரம் கிடைக்கவில்லை. காதலிக்கவும் இல்லை!''

''சமீப காலமாக மதுரை ஆதீனத்துக்கு வருகைதரும் இளைஞர்கள்... குறிப்பாக, பெண் பக்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதே!''

(உற்சாகமான குரலில்) ''ஆமா, உண்மைதான்! சமீபமாக நிறைய இளைஞர்களும்  இளம் பெண்களும் ஆதீனத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆன்மிகம் கற்றுத் தருவதன் முதல்படியாக  'திருக்குறள்’ படிக்க அறிவுறுத்துகிறோம். தாய், தந்தை, ஆசான், ஆதீனம் அனைவரையும் மதிக்கச் சொல்லித்தருகிறோம். நவீன உலக மாற்றத்துக்கு ஏற்ப, அவர்களை நல்வழிப்படுத்துகிறோம்!''

''அவர்களுடன் இயல்பாகப் பழக நீங்களும் டி-ஷர்ட், ஜீன்ஸ்  என ஆடைக் கலாசாரத்தை மாற்றிக்கொள்வீர்களா?''

(திடுக்கிட்டுப் பார்க்கிறார்) ''இது ஆதீனத்தின் பாரம்பரிய உடை. இதுவே எனக்கு வசதியாக இருக்கிறது!''

நெக்ஸ்ட்... கஸ்தூரிக்குக் கல்யாணம்!

''தனித் தெலுங்கானாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டையும் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்திருக்கிறதே!''

''அந்த மாதிரி சூழல் ஒருபோதும் ஏற்படாது. அப்படிப்பட்ட நிலையும் இங்கு இல்லை. அப்படி தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று யாரேனும் கோரிக்கைவைத் தால், அதை எதிர்க்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப் பேன். தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்பதை உணர்வுள்ள எந்தத் தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்!''  

''உங்கள் பரம சிஷ்யை வைஷ்ணவி...'' (கேள்வியை முடிக்கவிடாமல் பதில் சொல்கிறார்.)

''அவர் இங்குதான் இருக்கிறார். அவரும் அவருடைய கணவரும் இங்குதான்  பணிபுரிகிறார்கள். ஆன்மிகப் பணியில் தன்னார்வத்துடன் ஈடுபட்டுவருகிறார்கள். திருமண பந்தம்வைஷ்ணவியின் ஆதீனப் பணிகளில் எந்தச் சோர்வையும் உண்டாக்கவில்லை!''

''ஆனால், தன் தங்கை கஸ்தூரி ஆதீனத்தில் பெரும் பொறுப்புகளுக்கு வருவது பிடிக்காமல்தான் வைஷ்ணவி ஆதீனத்திலேயே தங்கிவிட்டார். இருவரையும் சமாதானப்படுத்த, நீங்கள் பெரும்பாடுபடுவதாகச் சொல்கிறார்களே..?''    

''இது அவதூறு. வைஷ்ணவியின் தங்கை கஸ்தூரியும் இங்குதான் இருக்கிறார். சகோதரிகளுக்குள் எந்தச் சச்சரவும் இல்லை. கஸ்தூரிக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது. மாப்பிள்ளை அர்ஜுன், மதுரைக்காரர். சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருக்கிறார். செப்டம்பர் 16-ம் தேதி  என் தலைமையில் கஸ்தூரியின் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்தத் திருமணம் கஸ்தூரியின் ஆன்மிகப் பணிகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது!'' என்றவர் என்ன நினைத்தாரோ, ''அவசியம் நீங்கள் கல்யாணத்துக்கு வரணும்'' என்று இப்போதே அட்வான்ஸ் அழைப்பும் விடுத்தார்!