ஸ்பெஷல் -1
சினிமா
Published:Updated:

ஏழ்மையை ஒழிக்க அல்ல... ஏழைகளை ஒழிக்க!

டி.அருள் எழிலன், ஓவியம்: ஹாசிப்கான்

##~##

காஷ்மீர் பதற்றம் நாடாளுமன்றத்தை முடக்கினாலும், மழைக் காலத் கூட்டத்தொடர் முடிவதற்குள், உணவு மசோதாவை நிறைவேற்றிவிட துடியாகத் துடிக்கிறது காங்கிரஸ் அரசு.

'நாட்டின் 80 கோடி ஏழைகளுக்கு மாதந் தோறும் குறைந்த விலையில் கோதுமை அல்லது அரிசி கிடைப்பதை, இந்த மசோதா உறுதிசெய்கிறது’ என்கிறார் உணவு அமைச்சர் கே.வி.தாமஸ். 'மாநிலங்களில் நடைமுறைகளில் இருக்கும் ரேஷன் கடைகளை ஒழித்துக்கட்டத்தான் உணவு பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டுவருகிறது’ என்கிறார்கள் பல மாநில முதல்வர்கள்.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை பல மாநிலங்களில் நேரடியாகக் கொண்டுவர முடியாத மத்திய அரசு, தலையைச் சுற்றி மூக் கைத் தொடுவதைப் போல இந்த உணவு பாது காப்பு மசோதாவைக் கொண்டுவருவதாகச் சொல்கின்றனர். அப்படி என்னதான் இருக்கி றது இந்த உணவு பாதுகாப்பு மசோதாவில்?

வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்கள் அனைவருக்கும் உணவுக்கான உத்தரவாதத்தை வழங்குவதுதான் இந்த மசோதாவின் நோக்கம். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழைக்குடும் பங்கள் ஒவ்வொன்றுக்கும், மாதம் 25 கிலோ அரிசி அல்லது கோதுமையை கிலோ மூன்று ரூபாய் விலையில் கொடுக்க, இந்த மசோதா வழிசெய்கிறது. இதில், 'ஏழைகள்’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லப்பட்டாலும், யார் ஏழை என்பதை வரையறுப்பதில்தான் பிரச்னை. இங்கே, திட்ட கமிஷன் சொல்வதைதான் நாம் அரசின் குரலாக புரிந்துகொள்ள வேண்டும் எனில், முந்தைய திட்ட கமிஷனின் அறிக்கை, 'ஒரு நாளைக்கு 32 ரூபாய் செலவு செய்கிறவர்கள் ஏழைகள் அல்ல’ என்றது. இந்த வருடமோ, 'நாள் ஒன்றுக்கு 28 ரூபாய் செலவு செய்கிறவர்கள் ஏழைகள் அல்ல’ என்கிறது.இந்த வரையறையை வைத்து திட்ட கமிஷனை ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் விமர் சித்துவரும் நிலையில், அதே வரையரையை வைத்து, உணவு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இதன்படி பார்த்தால், 120 கோடியைக் கடந்த இந்திய மக்கள்தொகையில் சுமார் 11 கோடி மக்களே வறுமையில் வாழ்வதாகக்கொள்ள வேண்டும். இவர்களுக்கே தற்போதையத் திட்டம் பயன் தரும். நாட்டின் பெரும்பகுதி மக்கள் ஒருவேளை உணவுக்கே வழியின்றி வாட, காங்கிரஸ் அரசோ, 'கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது’என்று பொய் சொல்கிறது. இதற்குப் பின்னால் உள்ள நலன்கள் யாருக்குச் சாதகமானவை?  

ஏழ்மையை ஒழிக்க அல்ல... ஏழைகளை ஒழிக்க!

உலகமயக் கொள்கையின் கீழ் இந்தியா பய ணிக்கத் தொடங்கியபோது, உலக வங்கிஇந்தியா வின் ரேஷன் முறையை ஊழல்மயப்பட்டது எனச் சாடியது. ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக பணத்தைக் கொடுத்து மக்களையே வெளி மார்க் கெட்டில் பொருட்களை வாங்கவைக்கலாம் எனவும் பரிந்துரைத்தது. பணத்தைப் பெற்றுக் கொள்ளும் ஏழைகள் சாதாரண மளிகைக் கடை களிலோ, பெட்டிக் கடைகளிலோ தங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ளலாம் என்று கற்பனை செய்துவிடாதீர்கள். ரேஷன் முறையை ஒழிப்ப தற்கு முன் உள்ளூர் சில்லறை வர்த்தகத்தை ஒழித்து, அதை வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டுத்தான், ரேஷன் முறையையே ஒழிக்கச் சொன்னது உலக வங்கி. இது ஒரே நேரத்தில் மொத்தமாக நிறைவேறவில்லை என்றாலும், படிப்படியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழக அரசைப் பொறுத்தவரை சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்ததைப் போலவே, உணவு பாதுகாப்பு மசோதாவையும் எதிர்க்கிறது. கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களும் இந்த மசோதாவில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியிருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 33 ஆயிரத்து 222 ரேஷன் கடைகள் உள்ளன. அரிசி அட்டைகள், அந்தியோதயா அன்னயோஜனா அட்டைகள், சர்க்கரை அட்டைகள், எந்தப் பொருளும் வேண்டாதோர் அட்டைகள், காவலர் அட்டைகள், திருநங்கையர் அட்டைகள் என சுமார் 1 கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றின் வழியேதான் மானிய விலை உணவுப் பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

இந்த இலவசத் திட்டங்களும் வழங்கல்முறைகளும், மத்திய அரசின் தனியார், தாராளமயக் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதால், இந்தப் பொது விநியோகத் திட்டங்களை மத்திய அரசு, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நினைக்கிறது. ஏற்கெனவே பல்வேறு துறைகளில் வழங்கப்பட்டுவந்த மானியங்களை ரத்துசெய்துகொண்டிருக்கும்  மத்திய அரசு, பொது விநியோகத் திட்டத்தையும் தன் வசப்படுத்தி, உணவுப் பொருட்கள் மீதான மானியத்தையும் ரத்துசெய்யத் துடிக்கிறது. 'உணவு மசோதா’ என்னும் பெயரிலும், சுகாதாரமான உணவு என்னும் பெயரிலும் தெருவோரக் கடைகள் தொடங்கி, சில்லறை உணவு வணிகத்தையும் ஒழித்து, மக்களை பன்னாட்டு தனியார் நிறுவனங்களிடம் பிடித்துக்கொடுக்கத் துடிக்கிறது.

வருங்காலத்தில் ஏழைகளுக்குக் குறைந்த விலையில் உணவு வழங்குவதாகச் சொல்லும் மத்திய அரசின் தானியக் கிடங்குகளில் இப்போது 6 கோடியே 67 லட்சம் டன் உணவுப் பொருட்கள் யாருக்கும் பயன்படாமல் குவிந்துகிடக்கின்றன. இவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோதிலும், வறுமை என்பதற்கான அளவுகோல் எது என்கிற முடிவுக்கு அரசால் வர முடியவில்லை. இதனால், அந்த உணவுகள் எலிகளுக்கும் பெருச்சாளிகளுக்கும் பயன்படுகிறதே தவிர, ஏழைகளின் பசியைப் போக்கப் பயன்படவில்லை.

ஆக இந்த உணவு மசோதா ஏழ்மையை அல்ல; ஏழைகளை ஒழித்துக்கட்டுவதற்குத்தான் பயன்படும்!