Published:Updated:

“நெக்ஸ்ட்... மின்சாரம்!”

ரகளை ராமர் பிள்ளைடி.அருள் எழிலன், படம்: ஆ.முத்துக்குமார்

“நெக்ஸ்ட்... மின்சாரம்!”

ரகளை ராமர் பிள்ளைடி.அருள் எழிலன், படம்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
##~##

 மெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிய, கச்சா எண்ணை கொள்முதலிலேயே பெரும்பாலான அந்நிய செலவாணியை இந்தியா இழக்க... என்ன செய்கிறார் நம் 'மூலிகை பெட்ரோல்’ ராமர் பிள்ளை? விசாரித்தால், விருதுநகரிலிருந்து ஊரைக் காலி செய்துவிட்டு சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டாராம்! சந்தித்தேன்...

  ''விருதுநகர்ல என்னை யாரும் நிம்மதியா இருக்கவிட மாட்டேங்குறாங்க. சும்மா விட்டத்தைப் பார்த்துக்கிட்டு உட்காந்து இருப்பேன். திடுதிப்புனு யாராவது வந்து, 'சாருக்கு அல்பேனியாவுல இருந்து  50 லட்சம் வந்திருக்கு’, 'மலேசியாவுல இருந்து பெட்ரோல் அட்வான்ஸா 10 லட்சம் வந்திருக்கு’னு புகையைப் போட்டுப் போய்ருவாங்க... உடனே, 'அம்புட்டுப் பணத்தை என்ன பண்ண?’னு வீட்ல சாம்பிராணி அடிக்க ஆரம்பிச்சுருவாங்க. நான் கோபத்துல டென்ஷனாகி, என் லேப்ல இருக்குற சாமான் செட்டுகளை அடிச்சு நொறுக்க ஆரம்பிச்சுடுறேன். இப்படி என் வெட்டி கோபத்துக்குப் பலியான சாமான்களின் மதிப்பு பல லட்சத்தைத் தாண்டும். அப்புறம்தான் தியானம் பண்ண ஆரம்பிச்சேன். மனசு கொஞ்சம் போல சாந்தமாச்சு. ஆனாலும், என் தியானத்தைக் குலைக்கிற பல வேலைகள் நடந்தன. அங்கே இருந்தா எனக்குள்ள இருக்குற மிருகத்தை திரும்ப உசுப்பிவிட்ருவாங்கன்னுதான் சென்னைக்கு வந்துட்டேன். வெற்றியோடத்தான்  ஊருக்குத் திரும்புவேன். இனி இந்த ராமர் பிள்ளைக்கு எல்லாமே ஏறுமுகம்தான்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நெக்ஸ்ட்... மின்சாரம்!”

''தியானம், ஏறுமுகமா? நித்யானந்தா பயிற்சி வகுப்புல சேர்ந்துட்டீங்களா?''  

''ஓ... நீங்க அந்த தியானத்தை நினைச்சுட்டீங்களா? இது, அது கிடையாது. உண்மை அறியும் தியானம். அதாவது, நான் தயாரிச்ச எரிபொருளை 'மூலிகை பெட்ரோல்’னு சொன்னதுதான் தப்பு. நான் பெட்ரோல் தயாரிச்ச முறை தப்பில்லைனு சொல்லிட்டாங்க. அதனால இப்போ உலக விஞ்ஞானிகளுக்கு என்னோட செய்முறை தியரியை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்துல இருக்கேன். உலகம் முழுக்க இருக்கும் விஞ்ஞானிகளோட ஆய்வுகளைப் படிச்சு, கரைச்சுக் குடிச்சு என் தியரியையும் உருவாக்கிட்டேன். அந்த வேலையைத்தான் 'தியானம்’னு சொன்னேன். இப்போ தியானம் கலையும் நாளும் நெருங்கிருச்சு!''

''உங்க வளர்ச்சியைத் தடுக்கும் சக்தி எது?''

''கண்ணுக்குத் தெரியாத அரசியல் சக்திதான் என் வளர்ச்சியைத் தடுக்குது. ஆனா, அது யாருன்னு தெரியலை. அந்தச் சக்திதான் சி.பி.ஐ. மூலமா என் மேல வழக்குப்போட்டது. தேவையில்லாம கைதுசெய்து அலைக்கழிச்சாங்க. உண்மையை ஒருநாள்  இந்தியா உணர்றப்போ, அது தேசத்துக்கு இன்னொரு நல்லவனை அடையாளம் காட்டும்!''

''அப்போ கருணாநிதி ஆதரவுகூட உங்களுக்கு இருந்ததே!''

''அவர், ராஜாவா இருந்தப்போ ஆதரிச்சார்; தங்கப் பேனாவும் நிலமும் கொடுத்தார். ஆனா, விஞ்ஞானிகள் வந்து தியரி கேட்டப்போ  எனக்கு உதவலையே!''

“நெக்ஸ்ட்... மின்சாரம்!”

''இந்தியாவில் பெட்ரோல் விலை எக்குதப்பா எகிறிடுச்சு. அப்போ உங்க பெட்ரோலும் விலையும் அதிகமாகி இருக்குமா?''

''இப்போ என்னை தயாரிக்கச் சொன்னாக்கூட லிட்டர் அஞ்சு ரூபாய்க்கு பெட்ரோல் தயாரிப்பேன். ஆனா, அரசாங்க வரி எல்லாம் சேர்த்தா அது எட்டு ரூபாய்க்கு வந்திடும். முறையான அனுமதி இல்லாம இதுவரை நாலு லட்சம் லிட்டர் பெட்ரோல் வித்ததா அரசாங்கம் என் மேல குற்றம்சாட்டுச்சு. ஆனா, நான் இப்ப சொல்றேன், அதையெல்லாம்விட அதிகமாவே பெட்ரோல் வித்திருக்கேன்!''

''சரி... பெட்ரோல் மட்டும்தான் தயாரிப்பீங்களா?''

''நான் பெட்ரோல் தயாரிக்கிறதைத் தடுக்காம இருந்திருந்தா, இந்நேரம் அடுத்த புராஜெக்ட்டா கரன்ட்டை கையில் எடுத்திருப்பேன். ஒரு யூனிட் மின்சாரத்தை ஒரு ரூபாய்க்கு என்னால் கொடுக்க முடியும். ஆனா, இப்பவே இதைச் சொன்னா என்னைப் பைத்தியக்காரன்னு சொல்வாங்க. அதனால, நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி, என் தொழிற்சாலையை இயக்கி பெட்ரோல் தயாரிச்சு, அதுல இருந்து கரன்ட்டும் தயாரிச்சு காட்டுறேன்!''  

''உங்க வண்டிக்கு எங்கே பெட்ரோல் போடுவீங்க?''

''நான் வண்டி ஓட்டுறதில்லை. எங்க குடும்பத்துல எல்லாருமே நான் தயாரிக்கிற பெட்ரோலைத்தான் அவங்கவங்க பைக்குக்குப் போட்டுக்குவாங்க. லேப்ல ஸ்டாக் இருந்தா எடுத்துப்பாங்க. இல்லாட்டி வெளில போட்டுக்குவாங்க. அட, நீங்களும் டூ-வீலர்லதான் வந்துருக்கீங்க போல. உங்க வண்டி எத்தனை லிட்டர் பிடிக்கும்?'' என்று கேட்டார்.

''அஞ்சு லிட்டர் சார்''  

''அடுத்து வர்றப்போ அஞ்சு லிட்டர் தண்ணி கொண்டு வாங்க. அதையே பெட்ரோலாக்கி உங்க வண்டில ஊத்திருவோம். சரிதானே!'' என்று சிரித்தார்.

அடுத்து நான் ஏன் அந்தப் பக்கம் போகிறேன்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism