Published:Updated:

வைகுண்டராஜனின் கிறுகிறு கிராஃப்

பாரதி தம்பி, படம்: ஜெ.வேங்கடராஜ்

வைகுண்டராஜனின் கிறுகிறு கிராஃப்

பாரதி தம்பி, படம்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
##~##

''கர்நாடகாவில் சுரங்கத் தொழில் மூலம் கனிமங்களை வெட்டி எடுக்கும் ரெட்டி சகோதரர்களைப் போல, மதுரையில் கிரானைட் வளத்தைக் அபகரித்த பி.ஆர்.பழனிச்சாமியைப் போல... தென் தமிழகக் கடற்கரையை இந்த வைகுண்டராஜன் முழுமையாக வசப்படுத்திவிட்டார்.

தூத்துக்குடியில் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் 15 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் தனி சாம்ராஜ்யமே நடக்கிறது. கடந்த 14 ஆண்டுகளில் வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தோண்டி எடுத்திருக்கும் கனிம வளங்களின் மதிப்பு, சுமார் 96,120 கோடி ரூபாய். ஆனால், அரசுக்குக் கொடுப்பதோ 100 ஏக்கருக்கு 16 ரூபாய். இதைவிட மோசடி வேறு எங்கேனும் நடக்குமா?'' எனக் கொந்தளிப்புடன் கேட்கிறார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சுந்தரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்க்காரியா கமிஷனில் 'கருணாநிதியை விசாரிக்க வேண்டும்’ என்று குறிப்பு எழுதியவர் இவர். ஜெயலலிதாவுக்கு எதிரான நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கிலும் அரசுத் தரப்பு சாட்சி. கறாரான அரசு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சுந்தரம், 'பொது மக்கள் நலன் மற்றும் குறைதீர்க்கும் அமைப்பின்’ மூலம் தனது சமூக நலச் செயல்பாடுகளை முன்னெடுக்கிறார்.  தூத்துக்குடி ஆட்சியராக இருந்த ஆஷிஸ்குமார், சமீபத்தில் அங்கிருந்து பணிமாறுதல் செய்யப்பட வைகுண்டராஜன்தான் காரணம் என்று பேசப்படும் நிலையில், கனிம மணல் கடத்தல் பிரச்னையில் தீவிரத்துடன் இயங்குகிறார் 72 வயதான சுந்தரம்.

வைகுண்டராஜனின் கிறுகிறு கிராஃப்

''தென் தமிழகக் கடற்கரையில் இயற்கை சேமித்துவைத்துள்ள அரிய வகைக் கனிம வளங்களைத் தோண்டியெடுத்து, கப்பல் கப்பலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார் வைகுண்டராஜன். அவர் எந்தச் சட்டங்களையும் மதிப்பதே இல்லை. வருவாய்த் துறை தொடங்கி காவல் துறை, சுரங்கத் துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அரசியல்வாதிகள் என  எவரும் இதனை இதுவரை தடுக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் இந்த விஷயம் எனக்குத் தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மையை அறிவதற்காக நேரில் சென்றபோது மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எந்தவித அரசு விதிகளையும் மதிக்காமல் அந்தப் பகுதியில் வைகுண்டராஜன் தனி சாம்ராஜ்யமே நடத்திவருகிறார். அவருக்கென்று தனியாக சாலை அமைத்துள்ளார். எந்தப் பக்கம் திரும்பினாலும் கடற்கரையோரம் முழுவதும் வெட்டி எடுக்கப்பட்டு சிதைக்கப்பட்டுக்கிடக்கிறது. கரையோர கடல் நீர் ரத்த சிவப்பில் சிவந்து இருக்கிறது. கோயில் நிலம், தேவாலய நிலம், அரசுப் புறம்போக்கு நிலம் என எதையுமே விட்டுவைக்காமல் அனைத்து நிலங்களையும் வளைத்துப்போட்டுக் கனிம வளங்கள் சூறையாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி வரையிலும் உள்ள மொத்தக் கடற்கரையும் இவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. 1957-ம் ஆண்டின் சுரங்க விதிகளின்படி மனித உழைப்பைப் பயன்படுத்தி மட்டும்தான் இந்தக் கனிமங்களை எடுக்க வேண்டும். ஆனால், கடற்கரையோரம் முழுக்க நவீனரக இயந்திரங்கள் நாள் முழுக்க சுரண்டுகின்றன. இப்படி இன்னும் அடுக்கிக் கொண்டே செல்லலாம்!

அதன் பிறகு, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் 1,800 மனுக்கள் போட்டு, மேலும் அதிர்ச்சிகரமான பல உண்மைகளை தெரிந்துகொண்டேன். 'இருக்கன்துறை’ என்ற கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் அரசு நிலம், ஆண்டுக்கு வெறும் 16 ரூபாய்க்கு வைகுண்டராஜனுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மற்றொரு 40 ஏக்கர் நிலம் ஆண்டுக்கு ஒன்பது ரூபாய்க்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இவை இரண்டும் உதாரணங்கள்தான்... இதுபோல அந்தப் பகுதி முழுக்க வெவ்வேறு விலைகளில் சுமார் 260 ஹெக்டேர் நிலம் குத்தகைக்குப் பெறப்பட்டுள்ளது. இதுபோக, விவசாயிகளிடம் இருந்து குறைந்த தொகையில் விலைக்கு வாங்குவது, அரசு, கோயில், தேவாலயப் புறம்போக்கு நிலங்கள் என சுமார் 2,000 ஏக்கர் நிலத்தை அவர்கள் வைத்துள்ளனர்.

வைகுண்டராஜனின் கிறுகிறு கிராஃப்

இந்த நிலங்களில் உள்ள மணலை சலித்துப் பிரித்து ஆண்டுக்கு 1.5 லட்சம் டன் கார்னெட், 2.25 லட்சம் டன் இல்மனைட், 1,200 டன் சிர்கான், 5,000 டன் ரூடைல் கனிமங்கள் உலகின் பல நாடுகளுக்கும் கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1999-ம் ஆண்டில் இருந்து இவர்கள் ஏற்றுமதி செய்த கனிமங்களின் சந்தை விலையைக் கணக்கிட்டால், இப்போது வரை மொத்தம் 96,120 கோடி ரூபாய் மதிப்புக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. 99-ம் ஆண்டுக்கு முந்தைய வியாபாரக் கணக்கு எங்களிடம் இல்லை.

''தமிழக கடலோரத்தில் வைகுண்டராஜன் மட்டும்தான் சுரங்க உரிமம் பெற்றுள்ளாரா?''

''கிட்டத்தட்ட அப்படித்தான். கடந்த ஆண்டு வரை தமிழ்நாட்டில் மொத்தம் 45 சுரங்க லீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 31, கார்னெட் லீஸ்கள். இதில் 24 லீஸ்கள் வைகுண்டராஜனின் நிறுவனங்களுக்கு சொந்தமானவை. இல்மனைட் லீஸ் மொத்தம் 14 உள்ளது. இந்த 14-லும் வி.வி-யுடையது. சுரங்க லீஸுக்கு வேறு யார் விண்ணப்பித்தாலும் தரப்படுவது இல்லை.

கடந்த எட்டு ஆண்டுகளாக, தமிழ்நாட்டின் 86 சதவிகித சுரங்க லீஸ்களை ஒரே நபருக்கு வழங்குவதன் மர்மம் என்ன? அவர் என்ன, தமிழக அரசுக்குச் செல்லப்பிள்ளையா? தூத்துக்குடி மாவட்டக் கடலோரத்தில் நடப்பது வெறும் 15 சதவிகித சுரங்க வேலைகள்தான். திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் 65 சதவிகித வேலைகளும், கன்னியாகுமரி கடற்கரையில் 20 சதவிகித வேலைகளும் நடைபெறுகின்றன. அந்த 85 சதவிகித சுரங்கப் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் எனவும், அதைப்பற்றி விசாரிக்க வேண்டும் எனவும் அங்குள்ள மீனவர்களும் மற்றவர்களும் போராடுகிறார்கள். அதைப்பற்றி கண்டுகொள்ளாமல், தூத்துக்குடியின் 15 சதவிகித சுரங்கக் குத்தகை பணிகளில் உள்ள முறைகேட்டை மட்டுமே விசாரிப்பதன் மூலம், மொத்த சூறையாடலின் அளவு குறைத்து மதிப்பிடப்படுகிறது. இது ஒரு நாடகம்!''

''இந்தக் கனிமங்களை எடுப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?''

''கடற்கரையில் குவிக்கப்பட்டிருந்த மணல் குன்றுகளை இவர்கள் தோண்டி எடுத்துவிட்டதால், அந்த மூன்று மாவட்டங்களிலும் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் படகு நிறுத்தவும், வலைகளைக் காயப்போடவும் பயன்படுத்திய இடங்கள் இன்று சுரங்கப் பணிகளுக்குப் போய்விட்டன. கடற்கரை ஓரத்தில் உள்ள நீர் முழுவதும் செந்நிறத்தில் ரத்தம் போல காட்சியளிக்கிறது. இதனால், மீன்வளம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பிரித்து எடுக்கும் கனிமங்களில் கதிரியக்கத்தன்மை கொண்ட கனிமங்களும் உண்டு. அவற்றை, எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் வெட்டவெளியில் கொட்டுவதால், அந்தப் பகுதியில் உள்ள ஏராளமானோரை புற்றுநோய் தாக்குகிறது. கடல் நீர் ஊருக்குள் புகுந்துவிட்டதால், நிலத்தடி நீர் உப்புநீராக மாறிவிட்டது. குடிநீருக்கு, பல கிலோமீட்டர்கள் அலைய வேண்டிய நிலை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்''

வைகுண்டராஜனின் கிறுகிறு கிராஃப்

''இனி என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?''

''தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆறு மற்றும் கடலோர மணல் வளத்தை அள்ளுவதை தடை செய்து கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது. இது வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கும் பொருந்தும். ஆகவே, அவர்களும் உடனடியாக நிறுத்தியாக வேண்டும். இதற்கு முன்பு வைகுண்டராஜனுக்கு அஞ்சிப் பேசவே பயந்த மக்கள், இப்போது துணிச்சலுடன் பேசுகின்றனர். இது ஒரு நல்ல அறிகுறி. இப்போது அரசு உடனடியாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுரங்க லீஸ் உரிமங்களை முடக்க வேண்டும். அதைத் தொடர்ந்து பல்வேறு நிபுணர்களைக்கொண்ட குழுக்களை அமைத்து, நேரில் ஆய்வுசெய்து மதிப்பீடு செய்ய வேண்டும். சட்டத்தை மீறி இயற்கையைச் சுரண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக, இதற்கு உதவிய அரசு அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவதுடன் அவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும். இப்படி நடந்த தவறுக்கு நடவடிக்கை எடுப்பது ஒருபக்கம் என்றால், உரிய நிபுணர்களைக்கொண்டு ஆய்வுசெய்து, சீரழிந்த அந்தப் பகுதியின் மீன்பிடி வளம், விவசாயம் போன்றவற்றை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!''

வி.வி.மினரல்ஸ் இயந்திரங்கள் சுரண்டும் இயற்கை வளங்களைக் காக்க உடனடியாகச் செயல்பட வேண்டும் அரசு இயந்திரம்!

வைகுண்டராஜனின் கிறுகிறு கிராஃப்

''சட்டப்படியே செயல்படுகிறோம்.!''

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் மீதான சுந்தரத்தின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்க, அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமியைத் தொடர்புகொண்டோம்.

''அரிய வகை மணல் தாதுக்களை எடுக்கும் அரசுப் பொதுத்துறை நிறுவனமான மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ-யிடம் இல்லாத உரிமம்கூட எங்களிடம் இருக்கிறது. எங்களின் 95 சதவிகித நிலங்கள் பட்டா நிலங்கள்; அவை யாரிடமும் மிரட்டி வாங்கப்பட்டவை அல்ல. புறம்போக்கு நிலம் என்றாலும்கூட, அதை சட்டப்படிதான் வாங்கித் தொழில் செய்கிறோம். எங்கள் தொழில் போட்டியாளர்கள், சமூகரீதியிலான எதிரிகள், பத்திரிகைத் துறையில் உள்ள எங்கள் எதிரிகள் போன்றோர் ஒன்றுசேர்ந்து, எங்களுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரத்தைப் பொறுத்தவரை, அவர் எங்கள் தொழில் போட்டியாளர் தயா தேவதாஸின் ஏஜென்ட். இதற்கு மேல் அவரைப் பொருட்படுத்துவதற்கு ஒன்றுமில்லை. அனைத்து விதங்களிலும் நாங்கள் சட்டப்படி செயல்படுவதால், யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை!'' என்று ஒரே மூச்சில் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பளித்தார்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism