Published:Updated:

"என் குழந்தையைக் கொன்னுடுங்க... ப்ளீஸ்!”

ஒரு தாயின் வேதனைக் குரல்டி.அருள் எழிலன், படங்கள்: ரா.ராம்குமார்

"என் குழந்தையைக் கொன்னுடுங்க... ப்ளீஸ்!”

ஒரு தாயின் வேதனைக் குரல்டி.அருள் எழிலன், படங்கள்: ரா.ராம்குமார்

Published:Updated:
##~##

ங்கள் குடும்பத்தில் முதல் வாரிசாக ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆசை ஆசையாக வளர்க்க ஆரம்பிக்கிறீர்கள். சில நாட்களிலேயே அந்தக் குழந்தைக்கு தினமும் 20 முறைக்கு மேல் வலிப்பு வருகிறது. மழலைச் சிணுங்கலோ, உடல் அசைவுகளோ, மன வளர்ச்சியோ, உணர்வுகளோ இல்லாமல், அந்தக் குழந்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே மட்டும் இருந்தால் என்ன செய்வீர்கள்?

இப்படி ஒரு சூழலில் அழுதழுதே கடந்த ஒரு வருடத்தைக் கடத்தியிருக்கும் சுஜா, இப்போது தன் மகனைக் கருணைக்கொலை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கர்ப்ப காலத்திலும், பிரசவ காலத்திலும் பெற்றோரும் மருத்துவர்களும் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது சுஜாவின் கதை.

"என் குழந்தையைக் கொன்னுடுங்க... ப்ளீஸ்!”

பேட்டியளிக்கும் மனநிலையில் இல்லாத சுஜாவிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசியதின் தொகுப்பு இங்கே...

''மார்த்தாண்டம் பக்கம் நட்டாலம் கிராமம்தான் எனக்குச் சொந்த ஊர். பி.எஸ்சி., நர்ஸிங் முடிச்சுட்டு பி.எட்., படிச்சேன். என் கணவர் டென்னிஸ் குமார் கேரளாவில் கூலி வேலைக்குப் போயிட்டு இருக்கார். நாங்க ரெண்டு பேருமே ரொம்ப சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. தான் படிக்காததனாலதான் கஷ்டப்படுறோம்கிற வருத்தம் என் கணவருக்கு உண்டு. 'நமக்குப் பிறக்கும் குழந்தையை நல்லாப் படிக்கவெச்சு பெரிய ஆளா ஆக்கணும். நம்ம கஷ்டம் நம்மளோட போகட்டும்’னு அடிக்கடி சொல்வார்.

"என் குழந்தையைக் கொன்னுடுங்க... ப்ளீஸ்!”

எங்களை சந்தோஷப்படுத்துற மாதிரி இவன் பிறந்தப்ப அவ்வளவு பூரிச்சுப் போனோம். ஏன்னா, என் கணவரோட வீட்டுல இவன்தான் முதல் வாரிசு. அதனால எல்லாருக்கும் செல்லக் குழந்தையாப் பிறந்தான். குழந்தைக்கு 'டேனி ஸ்டெனோ’னு பேர் வைச்சோம். ரெண்டாவது நாள்ல திடீர்னு மயக்கமாகிட்டான். பதறிப்போய் டாக்டரிடம் ஓடினோம். அப்போதைக்கு மருந்து மாத்திரை கொடுத்து சரி பண்ணாரு. அப்புறம் ஒரு வாரத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.  

பத்தாவது நாள் டேனிக்குக் கடுமையா ஜுரம் அடிக்க ஆரம்பிச்சது. ஒரு நாள், ரெண்டு நாள்ல சரியாகிடும்னு நினைச்சேன். ஆனா, மாசக்கணக்குல ஜுரம் விடலை. நடுநடுவுல திடீர் திடீர்னு வலிப்பும் வர ஆரம்பிச்சுது. அதுவும் ஒரே நாள்ல பத்து, இருபது முறை வலிப்பு வரும். குழந்தையைப் பார்க்க வந்த யாரும் அவனை எடுத்துக் கொஞ்சாம, ஆளாளுக்கு எனக்கு அறிவுரை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

நான் நர்ஸிங் படிச்சிருக்கேன். அதனால எனக்கு ஓரளவு மருத்துவம் தெரியும். குழந்தைக்கு என்னதான் பிரச்னைனு தெரிஞ்சுக்க, எனக்குப் பிரசவம் பார்த்த மருத்துவமனையில் என் 'டிஸ்சார்ஜ் சம்மரி’ கேட்டேன். அவங்க கொடுக்கலை. அப்புறம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி அதை வாங்கினோம். அதைப் படிச்சுப் பார்த்தப்போதுதான், குழந்தை ஏன் அவ்வளவு சிரமப்படுறான்னு புரிஞ்சது. எனக்கு பிரசவ வலி வர்றதுக்கு முன்னாடியே தொப்புள் கொடி பிரிஞ்சிருச்சு. அதனால குழந்தை கர்ப்பப் பையில சுவாசம், உணவு இல்லாம சிரமப்பட்டிருக்கான். அதனால அவன் ரத்தத்துல சர்க்கரை அளவு குறைஞ்சிருக்கு. பிரசவம் பார்த்த சமயம் இதையெல்லாம் கவனிச்சாங்களானு தெரியலை. அப்போ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால, குழந்தையின் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கு. அது படிப்படியா இவனோட வளர்ச்சியைப் பாதிச்சு, இப்போ பார்வையையும் பறிச்சிருச்சு. மூளை வளர்ச்சியும் இல்லாமப்போயிருச்சு. கழுத்து நரம்புகள் வலு இழந்து கழுத்து இன்னும் நிக்கவே இல்லை.  

"என் குழந்தையைக் கொன்னுடுங்க... ப்ளீஸ்!”

இப்பவும் அவனுக்கு வலிப்பு வந்துட்டே இருக்கு. ஆனா, அழ முடியாம அவன் வலியில துடிக்கிறதைப் பார்க்க எனக்கு நரக வேதனையா இருக்கும். அவன் கையைப் பிடிச்சுட்டு அழுதுட்டே இருக்கிறதைத் தவிர, ஒரு அம்மாவா என்னால ஒண்ணும் செய்ய முடியலை. சில நேரம் குழந்தையைக் கொன்னுட்டு நாமளும் செத்துப் போயிடலா மானுகூடத் தோணும்.

என் பையனை பல மருத்துவமனைகளுக்கு அழைச்சுட்டுப் போயிட்டேன். அஞ்சு லட்ச ரூபாய் வரை செலவு பண்ணிட்டேன். ஆனா, ஒன்றரை வருஷமா ஒரு சின்ன முன்னேற்றம்கூட இல்லை.

மத்தவங்க அவங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுறதைப் பார்க்கிறப்ப, எனக்கு என் மகனை நினைச்சு வேதனையா இருக்கும். என் குழந்தைக்கு ஒவ்வொரு வேளையும் ஏழு விதமான மருந்து, மாத்திரைகள் கொடுக்கிறேன். அதுலேயே அவன் வயிறு நிறைஞ்சிரும். வலுக்கட்டாயமா கொஞ்சம் சாப்பாடு கொடுத்தா, அதைச் சாப்பிட முடியாம கக்கிருவான். பத்து நிமிஷம்கூட இவனை தனியா விட்டுட்டு எங்கேயும் போக முடியாது. பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கணும்.  

இதுக்கு மேல குழந்தைக்கு சிகிச்சை கொடுக்க என்கிட்ட பணமும் இல்லை; உடம்புல தெம்பும் இல்லை. அதான், 'என் குழந்தையைக் கருணைக் கொலை செய்ய அனுமதி கொடுங்க’னு கலெக்டர் கிட்ட மனு கொடுத்தேன். உடனே எல்லாரும் என்னை ஏதோ கொலைகாரி மாதிரி பார்க்கிறாங்க. ஆனா, என் பையனுக்கு சிகிச்சை கொடுத்து சரிபண்ண முடியாம நானே

"என் குழந்தையைக் கொன்னுடுங்க... ப்ளீஸ்!”

நாள்தோறும் செத்துட்டிருக்கேன். இவனைப் பேச, சிரிக்கச் செய்யணும்னாக்கூட பெரிய மருத்துவ சிகிச்சைகள் வேணும். அதுக்கு வாய்ப்பு இல்லைன்னா, கருணைக் கொலை செய்யவாவது அனுமதி கொடுங்க. ஏன்னா, பெத்தவள், குழந்தையைக் கொல்ல நினைப்பாளா? என் வேண்டுகோள் இதுதான்... என் குழந்தைக்கு உயர் சிகிச்சை வேணும். அல்லது கருணைக் கொலைக்கு அனுமதிக்கணும்!''

''மருத்துவரீதியாக டேனிஸ்டெனோவை இயல்பு நிலைக்குத் திரும்பச்செய்ய முடியுமா?'' என்று  குழந்தைகள் நல மருத்துவரிடம் கேட்டோம்...

''தொப்புள் கொடி அறுந்ததால் மட்டுமே இவ்வளவு பிரச்னை வரும்னு சொல்ல முடியாது. ஏன்னா, தொப்புள் கொடி அறுந்திருந்தா, குழந்தை கருவிலேயே இறந்திருக்க வாய்ப்பு உண்டு. ஒருவேளை, கருவில் இருக்கும்போதே ஏதாவது பிரச்னை இருந்திருக்கலாம். இனி இந்தக் குழந்தையை இயல்பு நிலைக்குத் திரும்பச்செய்ய முடியுமானு பல பரிசோதனைகள் மூலம்தான் ஊர்ஜிதப்படுத்த முடியும்!'' என்றார்.