Published:Updated:

எட்எட்டு!

எட்எட்டு!

எட்எட்டு!
எட்எட்டு!
எட்எட்டு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விகடன் டீம்
எட்எட்டு!

வாங்கிய பொருள்
டி.இமான், இசையமைப்பாளர்.

எட்எட்டு!

"நான் என் ஸ்டுடியோவை லேட்டஸ்ட் இசைக் கருவிகளோடு அப்டேட் செய்துகொண்டு இருக்கி றேன். பிரமாதமாக சவுண்ட் மிக்ஸிங் செய்யும் நவீன விணீநீ கம்ப்யூட்டர்கள் வாங்கினேன். ஜெர்மனி, அமெரிக்கா எனப் பல தேசங்களில் இருந்து சில இசைக் கருவிகளை வரவழைத்து இருக்கிறேன். ஸ்டுடியோ முழுமையாகத் தயாராகும் நாளுக்காகக் காத்து இருக்கிறேன்!"

பார்த்த படம்
சுசீந்திரன், இயக்குநர்.

எட்எட்டு!

"சர்வதேச விருதுகள் பல வென்ற The Hurt Locker படத்தைச் சமீபத்தில்தான் பார்த்தேன். இராக் நாட்டில், கண்ணி வெடிகளை அகற்றச் செல்லும் மூன்று அமெரிக்க ராணுவ இளைஞர்களைச் சுற்றும் கதை. தனது 'பெரியண்ணன்' தோரணைக்காக இளைஞர்கள் உயிரைப் பணயம்வைக்கும் அமெரிக்காவின் கொடூர முகத்தைத் தோல் உரித்துக் காட்டுகிறார் இயக்குநர் Kathryn Bigelow. படத்தின் திரைக்கதையை எழுதிய மார்க் பால், அமெரிக்காவின் பாம் ஸ்குவாடு பிரிவில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தவர். அதனாலேயே ஒரு சினிமாவாக இல்லாமல், உண்மைச் சம்பவமாக சுவாரஸ்யப்படுத்தும் படம். 'அவதார்' இயக்குநர் ஜேம்ஸ் கேமரூ னின் முன்னாள் மனைவி கேத்ரின். 2009 சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இவர்கள் இருவர் பெயர்களும் இருந்தன. இறுதியில் 'அவதார்' நாயகனை வென்றார் கேத்ரின்!"

படித்த புத்தகம்
'காலச் சுவடு' கண்ணன், பதிப்பாளர்.

எட்எட்டு!

"நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு இருக்கும் அற்புதமான தொகுப்பு The mahatma and the poet நூல். 1915 முதல் 1941-ல் தாகூர் மறையும் வரை அவருக்கும் காந்திக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றங்கள் (தந்தி வாசகங்களும் உண்டு), பத்திரிகை விவாதங்கள் ஆகியவற்றின் தொகுப்பு. தேசிய இயக்கம்பற்றிய தாகூரின் கேள்விகள், சந்தேகங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றைப் புறக்க ணிக்காமல், சிறுமைப்படுத் தாமல் காந்தி தொடர்ந்து பதில் அளிக்கிறார். காந்தி யின் பல வரிகள் கூரிய சிந்தனைகளைக் கவித்துவத்துடன் வெளிப்படுத்து வதாக இருப்பது வியப்பு அளிக்கிறது!"

பாதித்த செய்தி
இந்திரா சௌந்தர்ராஜன், எழுத்தாளர்.

எட்எட்டு!

"ஆற்று மணல் திருட்டுபற்றிய செய்தியைப் படிக்கும்போது எல்லாம் மனதுக்கு வேதனையாக இருக்கிறது. நமக்குச் சோறு போடும் ஆற்றைச் சூறையாடுவது நியாயமா? தாமிரபரணி ஆற்றை பணத்தாசை பிடித்த சிலர் அளவுக்கு அதிகமாகச் சுரண்டிக்கொண்டே இருப்பதால், அந்த ஆற்றின் இயல்பே கெட்டுவிட்டதாம். மணல் அள்ளியதால் உருவான பெரும் பள்ளங்களில் விழுந்து தண்ணீருக்குள் மூழ்கி ஒருவர் இறந்துபோன நிலையிலும்கூட, யாரும் திருந்திய மாதிரி தெரியவில்லை. ஆறு நமக் குச் சோறு போடும் தெய்வம். அந்த தெய்வத்தின் தோலை சட்டவிரோதமாகப் பிய்த்து எடுத்துக்கொண்டு இருக்கிறோம். அரசு தடுக்கக் காத்திருக்காமல், மக்களே தட்டிக் கேட்க வேண்டும்!"

கேட்ட இசை
சௌம்யா, கர்னாடக இசைப் பாடகி.

எட்எட்டு!

"இசைக்கு மொழி முக்கியம் இல்லை என எனக்குச் சமீபத்தில் உணர்த்தியது 'மாங்கனியார்' ஆல்பம். ராஜஸ்தானி நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கிய தொகுப்பு இது. மொழி புரியாதவர்களையும் ஆடவைக்கும் பிரமாதமான இசை. 'மாங்கனியார்' என்ற இசைக் குழுவினர் ஒன்றாகச் சேர்ந்து, வெறும் சப்ளாக் கட்டையில் ஒலி எழுப்பிப் பாடி இருக்கிறார்கள். வசீகரக் குரலுடன் ராஜஸ்தான் சூஃபி இசை இணையும்போது, உற்சாகமும் ஆனந்தமுமாக உள்ளுக்குள் பிரவகிக் கிறது!"

கலந்துகொண்ட நிகழ்ச்சி
பூர்ணிமா பாக்யராஜ், நடிகை.

எட்எட்டு!

"சும்மா பொழுதுபோக்காக நான் ஆரம்பித்த அலங்காரப் பொருட்கள் கடையில், இன்று செழிப்பான வியாபாரம். புடவை வேலைப்பாடுகள், சுவர் அலங்காரம் என இயங்கிக்கொண்டு இருந்த என் கடையை என் மகளின் கை வேலைப்பாட்டில் தயாராகும் நகைகளும் அலங்கரிக்கின்றன. அந்த நகைகளைவைத்து சமீபத்தில் 'கடம்பா கேலரியா'வில் கண்காட்சி நடத்தினோம். அங்கு நான் எதிர் பாராத பல பிரபலங்கள் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். இப்போது அவர்கள் எல்லாம் என் மகளின் கை வண்ணத்துக்கு வாடிக்கையாளர்கள்!"

சந்தித்த நபர்
ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர்.

எட்எட்டு!

"சமீபத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தபோது, தனது வெளிநாட்டுப் பயண அனுபவங்களை உற்சாகமாக விவரித்தார். எனது கவிதைகள்பற்றிகூட ஆர்வமாகப் பேசினார். எப்போது எந்தக் கூட்டத்தில் பார்த்தாலும், அடையாளம் கண்டு அவர் தரும் மரியாதை நெகிழ்ச்சியானது. எத்தனை கிரீடங்கள் சுமந்தாலும், மனசில் எளிமை சுமப்பது அவசியம் என்பதை ஒவ்வொரு முறை அவரைச் சந்திக்கும்போதும் உணர்கிறேன்!"

சென்ற இடம்
பார்த்திபன், நடிகர்.

எட்எட்டு!

"பி.சி.ஸ்ரீராம் சார் மகள் இறந்த சமயம், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குச் சென்று இருந்தேன். பிரபலங்கள் என சொல்லப்படும் எத்தனையோ பேர் அங்கு இருந்தோம். ஆனால், தேவையான எந்த ஒரு வேலையும் அங்கு நடக்கவில்லை. செய்யவும் ஆள் இல்லை. மருத்துவர் எங்கோ ஒரு கண்காணாத திசையில் இருக்கிறார். காவல் நிலையம் சென்றால், 'பார்க்கணும் சார்' என்று விட்டேத்தியான பதில். பிறகு, ஏதேதோ செய்து மருத்துவர்களை வரவழைத்தோம். மருத்துவமனையில் இருந்த சில மணி நேரங்களில், அங்கு பரிதாப முகங்களுடன் அமர்ந்து இருந்த பல நூறு ஏழை மக்களின் முகங்களைப் பார்த்தேன். மனதில் பிரார்த்தனையுடன் அமர்ந்திருக்கும் அவர்கள் யாரிடம் போய் சிபாரிசு வைப்பார்கள்? அரசு மருத்துவமனை மாதிரியான உயிர் காக்கும் இடங்களில் அதிகப்படி கருணையோடு நடந்துகொள்ள வேண்டும்!"

எட்எட்டு!
எட்எட்டு!