Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்

இந்தியர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

நானே கேள்வி... நானே பதில்

இந்தியர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

Published:Updated:
##~##

• ''புத்தர், புத்தகயாவில் பயன்படுத்திய 'பிச்சைப் பாத்திரம்’ இப்போது ஆஃப்கானிஸ்தான் அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும், அதை இந்தியாவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் விவாதித்திருக்கிறார்களே!''

''அதைவிட 'மணிமேகலை’ பயன்படுத்திய 'அட்சயப் பாத்திரம்’ எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்கணும். இன்னைக்கு நாடு இருக்கிற நிலைக்கு, அதுதான் ரொம்பத் தேவை!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- எஸ்.விவேக், அம்பத்தூர். 

• ''ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு அடுத்து அதிக முறை சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றிய பெருமைக்குரியவர் பிரதமர் மன்மோகன் சிங் என்றாலும், அந்தப் பெருமையோ, மகிழ்ச்சியோ அவர் முகத்தில் தெரியவில்லையே?''

''ஒருவேளை இந்திய தேசியக் கொடிக்குப் பதில் அமெரிக்கக் கொடியை ஏற்றச் சொல்லியிருந்தால், மகிழ்ந்திருப்பாரோ!''

- எஸ்.இராஜேந்திரன், கபிஸ்தலம்.

• '' 'தமிழ்நாட்டில் போலீஸ் செயலிழந்து விட்டது’ என்கிறாரே ராமதாஸ்?''

''அப்படி போலீஸ் செயலிழந்திருக்கும்போதே ராமதாஸ் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருக்கின்றன என்றால், போலீஸ் செயல்பட ஆரம்பித்தால் என்ன ஆகும்?''

- சம்பத்குமாரி, திருச்சி.

நானே கேள்வி... நானே பதில்

• ''அன்றைய, இன்றைய அரசியல்வாதிகளுக்கு என்ன வித்தியாசம்?''

''முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர். பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டு  இருந்தபோது, 'நான் ஆண்களிடம் தனியாகப் பேச வேண்டும். ஆகவே, பெண்கள் எல்லோரும் சென்று விடுங்கள்’ என்றாராம். பெண்கள் சென்றவுடன் எம்.ஜி.ஆர். ஆண்களிடம், 'விஷயம் ஒன்றுமில்லை. இங்கு கூட்டம் அதிகம். எல்லோரும் ஒரே நேரத்தில் கலைந்து சென்றால் நெரிசல் அதிகம் இருக்கும். அதனால்தான் முதலில் பெண்களை போகச் சொன்னேன். இனி நீங்களும் செல்லலாம்’ என்றாராம்!''

- விக்னேஷ், மதுரை.

• ''நம் நாடு கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது, இந்தியர்களாகிய நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?''

''இது நடந்தது தென் கொரியாவில். 1997-98களில் உலகம் முழுக்க பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயம் தென் கொரிய அரசு ஊழியர்கள், சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் பணியாற்றினார்கள். தங்களுடைய சேமிப்பை, அரசுக்குக் கொடுத்து உதவினார்கள். இறக்குமதிப் பொருட் களை வாங்குவதைத் தவிர்த்தார்கள். 'இறக்குமதிப் பொருட்களைப் புறக்கணிக்கும் அளவுக்கு நிலைமை வரவில்லை’ என அரசு அறிவித்தும்கூட அதைச் செய்தார்கள். அப்போது 'டைட்டானிக்’ திரைப்படம் அங்கு திரையிடப்பட்டது. அது வெளிநாட்டுப் படம் என்பதால் அதைப் பார்க்க பணம் செலவழிக்க வேண்டாம் என்றும், அதனால் நமது பணம் வேறு நாட்டுக்கு உதவுகிறது என்றும் ஓர் இயக்கமாகவே செயல்பட்டார்கள். அரசுக்குத் தோள் கொடுத்து உதவுவ தாக அவர்கள் கருதவில்லை. தங்களையே அரசாங்கமாகக் கருதிச் செயல்பட்டார்கள். தேசப்பற்றின் மூலம் நெருக்கடியை அவர்கள் எதிர்கொண்ட விதம் பிரமிக்கவைக்கிறது!''

- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.

• ''பிரதமரின் 'காணோம்’ பதிலைத் தொடர்ந்து என்னென்ன நிகழும்?''

''அலுவலகங்களில் முக்கியமான கோப்புகள் மாயமாகிவிடும். எந்த அதிகாரிக்கும், அவர் கீழ் வேலை பார்க்கும் எந்த ஊழியரும் பயப்பட வேண்டியது இல்லை. இருக்கவே இருக்கிறது 'காணோம்’ காரணம்! அடுத்து மீண்டும் மன்மோகன் பிரதமரானால், 'இந்தியாவைக் காணோம்’ என்று சொல்லவும் அவர் தயங்க மாட்டார்!''

- தெ.சுந்தரமகாலிங்கம், வத்திராயிருப்பு.

• ''அரசியல்வாதிகள் புகழ்ச்சிக்கு மயங்குவதை ஒழிக்க முடியாதா?''

'' 'ஒருவனிடம் இல்லாத குணங்களை அவனிடம் இருப்பதாகச் சொல்லி அவனைப் புகழாதீர்கள். அப்படிச் செய்வது அவனைக் கேலி செய்வது போன்றதாகும்’ என்று நபிகள் நாயகம் கூறியதை அரசியல்வாதிகளின் காதுகளில் போட்டுப் பார்க்க வேண்டும்!''

- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

• '' 'பசியைப் போக்கும் மணிமேகலை’ என்று சோனியாவைப் பாராட்டியுள்ளாரே கலைஞர்?''

''தொகுதி பங்கீடு விஷயத்தில் 'வாரி வழங்கும் கர்ணன்’ என்று சோனியா பதிலுக்குப் பாராட்டிவிட்டால், கலைஞரின் நிலை தர்மசங்கடமாகிவிடுமே!''

- டி.செல்வன், நெல்லையபுரம்.

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம் அல்லது செல்போனில் QA (space) விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்யுங்கள்!