Published:Updated:

“இது மேதைகளை திருத்தும் சமூகம்!”

தமிழ்மகன்

“இது மேதைகளை திருத்தும் சமூகம்!”

தமிழ்மகன்

Published:Updated:
##~##

''ஒருவன் மேதையாக இருந்தால் முதல் வேலையாக அவனை சராசரி மனிதனாக்குவதில்தான் அனைவரும் ஈடுபடுகிறோம். பெற்றோரும், ஆசிரியரும், நண்பர்களும், சமூகமும் அவனை உடனே 'திருத்துகிற’ பணியில் தீவிரமாகிறது. 'அவனுக்கு ஒரு கால்கட்டுப் போட்டால் எல்லாம் சரியாகிவிடும்’ என்று பிரச்னையைப் பெரிதாக்குகிறது. ராமானுஜன் வாழ்க்கையில் நடந்ததும் இதுதான்!'' -  'பாரதி’, 'பெரியார்’ படங்களுக்குப் பிறகு கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கையை செல்லுலாய்டில் வடிக்கும் இயக்குநர் ஞான.ராஜசேகரன், ஒரு வரியில் ராமானுஜனின் வாழ்க்கைக்கான அறிமுகத்தை அளிக்கிறார்.    

''பாரதிக்கு தேசியமும் பெரியாருக்கு திராவிடமும் அரசியல் பின்னணி. அவர்களின் வாழ்க்கைப் படிப்பினைகளுக்கு இன்றும் 'தேவை’ இருப்பது உண்மைதான். 'ராமானுஜன்’ படத்தின் தேவையை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இது மேதைகளை திருத்தும் சமூகம்!”

''அவரை நாம் 'கணிதமேதை’ என்று பாடங்களில் படித்துவந்தோம். ஆனால், அந்த மேதையை அவருடைய வாழ்நாளில் கொண்டாடினோமா? இசை மேதை ஒருவரை டாக்டர் படிப்பு படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தும், ஓர் ஓவியனை இன்ஜினீயர் ஆக்கி அழகு பார்க்கும், ஓர் எழுத்தாளனை பல் வைத்தியனாக்க நினைக்கும் சமூக அமைப்புதான் அப்போதும் நிலவியது!

நான் பார்த்த அமெரிக்க சீரியல் ஒன்றில் ஒரு காட்சி. புத்திசாலித்தனமாகப் பேசும் ஒருவனைப் பார்த்து ஒரு பெண், 'நீ என்ன பெரிய ராமானுஜனா?’ என்று கேட்டாள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நம் நாட்டு சீரியலில் இப்படியரு வசனம் வைக்கும் அளவுக்கு ராமானுஜனை நாம் புரிந்துவைத்திருக்கிறோமா? என்ற கேள்வியே, என்னை ராமானுஜனைத் தேடி ஓடவைத்தது!''

''ராமானுஜன் வாழ்வில் இருந்து, ஒரு திரைப்படத்துக்கான சம்பவங்கள் திரட்ட முடிந்ததா?''

''ராமானுஜனை உருவகப்படுத்த நமக்குக் கிடைப்பது அவருடைய அரிதான ஒரே ஒரு புகைப்படம் மட்டும்தான். அவர் லண்டன் செல்லும்போது எடுத்த படம். மற்றபடி அவருடைய மனைவி ஜானகி, 1994 வரை உயிருடன் இருந்தார். எழுத்தாளர் ரகமி, அவரைச் சந்தித்து பல அரிய தகவல்களைத் திரட்டி அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அது எனக்குப் பல தகவல்களைத் தந்தது. ராமானுஜனுக்கு அவருடைய தந்தையின் ஆதரவு இல்லை. பையனின் கணித மோகத்தை அவர் வெறுத்தார். ஆனால், அவருடைய அம்மா அதீதப் பாசம் காட்டினார்.

ராபர்ட் கனிகல் எழுதிய, The Man Who Knew Infinity' என்ற வாழ்க்கைச் சரித்திரமும் முக்கியமான நூல். 'பூஜ்ஜியத்தை பூஜ்ஜியத்தால் வகுத்தால் என்ன வரும்?’ என்று பள்ளிப் பருவத்தில் ஆசிரியரைப் பார்த்துக் கேட்ட ராமானுஜன், கணிதத்தில் மட்டும் அதிபுத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியவர். கணக்கில் மட்டும் 100-க்கு 100 வாங்கும் அவரால், மற்ற பாடங்களில் குறைந்த மதிப்பெண்களையே பெற முடிந்தது. இதன் காரணமாக, அவரால் இன்டர்மீடியட் படிப்பில்கூட தேர்ச்சிபெற முடியவில்லை!''  

“இது மேதைகளை திருத்தும் சமூகம்!”

''பிறகு லண்டன் வரை அவரது புகழ் பரவியது எப்படி?''

''போர்ட் ட்ரஸ்ட்டில் வேலைக்குச் சேர்ந்தார் ராமானுஜன். அப்போது தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைத்தார். அங்கு கணிதத் துறையில் பணியாற்றிய ஜி.ஹெச்.ஹார்டி அவருடைய மேதமையைப் புரிந்துகொண்டு லண்டனுக்கு அழைத்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு பி.ஏ., பட்டமும் ஃபெலோஷிப் ஆஃப் ராயல் சொஸைட்டி அங்கீகாரமும் அளித்தது. இது, அந்த சமயம் உலகில் வேறு யாருக்கும் கிடைக்காத அங்கீகாரம். ஆனால், அவர் லண்டனில் போய் இறங்கியதுமே முதல் உலகப் போர் ஆரம்பித்துவிட்டது. அவர் அங்கிருந்து திரும்பும் வரை போர்ச்சூழல் மாறவே இல்லை. கேம்பிரிட்ஜ் வளாகமே ராணுவக் கூடாரமாக மாறியது. லண்டன் உணவு அவருக்குப் பிடிக்கவில்லை. பருவநிலையும் அவர் உடல்நிலைக்கு இசைவாக இல்லை. லண்டன் குளிர் அவரை உருக்குலைத்தது. ஒரு மேதையை இதற்கு மேல் யாரலும் வதைக்க முடியாது என்றளவுக்கு பெரும்பாடு பட்டார்!

'ராமானுஜன்’ திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் பேரன் அபிநய், ராமானுஜனாக நடிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த பாமா, நாயகி. படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. எந்த ஓர் இடத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல், 100 வருடங்களை ரீவைண்ட் செய்திருக்கிறேன்!''

“இது மேதைகளை திருத்தும் சமூகம்!”

''ராமானுஜன் வாழ்வை, கும்பகோணம், சென்னை, இங்கிலாந்து என்று மூன்று காலகட்டமாகப் பிரிக்கலாம். நூறு ஆண்டு களுக்கு முந்தைய கும்பகோணத்தையும் சென்னையையும் நாம் ஓரளவுக்கு உருவாக்க முடியும். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முந்தைய லண்டன்?''

“இது மேதைகளை திருத்தும் சமூகம்!”

''சொல்லப்போனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய லண்டன்தான் சுலபமாக இருந்தது. அங்கே 100 ஆண்டுகளுக்கு முந்தைய கேம்பிரிட்ஜ் கட்டடம் அப்படியே இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முந்தைய பிரிட்டன் ராணுவ உடை, மக்கள் பயன்படுத்திய உடை, மேசை நாற்காலிகள் எல்லாம் கேட்ட கணத்தில் வந்து இறங்கின. அப்போதிருந்த மருத்துவமனை, ரயில், பஸ்... என்று எதைக் கேட்டாலும் உடனடியாகக் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். ஆனால், இங்கேதான் அப்படி எதுவுமே கிடைப்பது கடினமாக இருந்தது!''

''கணிதத்தைத் தாண்டி ராமானுஜனிடம் நீங்கள் வியந்த குணம் என்ன?''

“இது மேதைகளை திருத்தும் சமூகம்!”

''அவருடைய கிண்டல். உடல்நிலை முடியாமல் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர் அவரை தஞ்சாவூருக்கு வந்துவிடும்படி அழைக்கிறார். 'தன் சாவூரு’க்கு எதுக்கு? 'சட்புட்’னு முடிக்கிறதுக்கு இங்க 'சேட்பட்’லயே ஒரு செட்டியார் இருக்காரு. அதுபோதும்’ என்கிறார் ராமானுஜன். இயல்பான கும்பகோணத்து குசும்பு அவரிடம் இருந்தது. லண்டனில் இருந்தபோது மனைவி மீது  கொண்ட காதலால் உருகியிருக்கிறார். பூக்களைப் பார்த்து காதல் வசனம் பேசியிருக்கிறார். அத்தனை இலகுவான ஒரு மேதையின் ஆளுமை, இப்போது வரை நம்மவர்களுக்குப் புரியவில்லை. நாம் தவறவிட்ட ஒரு மேதையை 'பயோபிக்’ செய்ததில் பிராயச்சித்தம் தேடிக்கொண்ட மன நிறைவு ஏற்பட்டிருக்கிறது எனக்கு!''