Published:Updated:

ரோச்சல் ராக்கெட்... ஒலிம்பிக் தங்கம் டார்கெட்!

ஆ.அலெக்ஸ் பாண்டியன், படம்: ப.சரவணகுமார்

ரோச்சல் ராக்கெட்... ஒலிம்பிக் தங்கம் டார்கெட்!

ஆ.அலெக்ஸ் பாண்டியன், படம்: ப.சரவணகுமார்

Published:Updated:
##~##

ந்து அடி உயரம், துறுதுறு பார்வை, துள்ளல் சிரிப்பு... இன்னமும் குழந்தைத்தனம் விலகாத ரோச்சல், ஒரு சாதனை நாயகி!

கடந்த மாதம் சீனாவில் நடந்த ஆசிய அளவிலான இளையோர் விளையாட்டுத் தொடரின் ட்ரிப்பிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் ரோச்சல், சென்னை கொலம்ன்ஸ் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. துப்பாக்கி வெடித்ததும் திடுக்கென உயிர்ப்பித்து ராக்கெட் வேகத்தில் ஓடி அபார நீளத்தைத் தாண்ட வேண்டிய ட்ரிப்பிள் ஜம்ப் விளையாட்டின் வீரர்கள் சராசரியாக ஆறடி உயரத்துக்கு மேல்தான் இருப்பார்கள். ஆனால், 17 வயதுடைய ரோச்சலின் உயரமோ ஐந்தடிதான்.    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான்தான் ஷார்ட். ஆனா, என் பேர் ரொம்பப் பெருசு... ரோச்சல் மரியா மக்ஃபர்லேன்!'' என்று சிரிக்கிறார் ரோச்சல்.

''சீனாவில் நடந்த போட்டியில் தங்கம் ஜெயிச்ச சீனா ப்ளேயர் தாண்டியது 12.55 மீட்டர். நான் தாண்டியது 12.38 மீட்டர். ஆனா, என் பெர்சனல் பெஸ்ட் 12.83 மீட்டர். திரும்ப இங்கே வந்து நீளம் தாண்டினேன். ரீடிங் 12.75 மீட்டர் காட்டுச்சு. முதல் தடவை வெளிநாடு போனது, வித்தியாசமான சாப்பாடு, மழை, க்ளைமேட்னு எல்லாம் சேர்ந்து என்னை அரெஸ்ட் பண்ணிருச்சு. இல்லைன்னா தங்கம் தட்டிருப்பேன். அடுத்து மலேசியாவுல நடக்கிற சர்வதேச மீட் ஒண்ணு இருக்கு. இப்போ வெளிநாட்டுப் பயணமும் நமக்குப் பழக்கமாயிருச்சு. அதனால தங்கம் நிச்சயம்!'' தங்கம் மிஸ்ஸானதை  'ஜஸ்ட் லைக் தட்’ மறைத்துக் கொண்டு பேசுகிறார் ரோச்சல்.  

ரோச்சல் ராக்கெட்... ஒலிம்பிக் தங்கம் டார்கெட்!

''என் அக்கா டான்யா என் ஸ்கூல்ல பி.டி. டீச்சர். அவங்களைப் பார்த்துப் பார்த்து எனக்கும் இயல்பாவே அத்லெட் மேல ஆர்வம் வந்திருச்சு. நாலாவது படிக்கும்போதே என் வயசுப் பசங்ககூட ஓடுவேன். ஆனா, தோத்துடுவேன். ரெண்டு வருஷமா போட்டிகள்ல ஓடினாலும் நான் ஜெயிக்கவே இல்லை. அப்புறம் ஆசை போய் வெறி வந்திருச்சு. ஆறாவது படிக்கும்போது தீவிரமா ஓட ஆரம்பிச்சேன். அப்புறம் வெற்றிகள் குவிய ஆரம்பித்தன. 160 பதக்கங்கள் ஜெயிச்சுட்டேன்!

முதல்ல 100 மீ., 200 மீ., உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல்னு எல்லா போட்டிகளிலும் கலந்துப்பேன். நாளாக நாளாக ட்ரிப்பிள் ஜம்ப் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ஆனா, நான்  குதிச்சா ஃபவுல்தான் வரும். ஏன்னா, எனக்கு வயசுக்கு ஏத்த உயரம் இல்லை. 'ட்ரிப்பிள் ஜம்ப்புக்கு உயரம்தான் முக்கியம்’னு சொன்னாங்க. ஆனா, எனக்கு ட்ரிப்பிள் ஜம்ப் அவ்வளவு பிடிச்சிருச்சு. அதை விட மனசே இல்லை. தொடர்ந்து பயிற்சி எடுத்துட்டே இருந்தேன். அதுக்கு நடுவுல உயரமா வளர்றதுக்காக சிகிச்சைலாம் எடுத்துக்க வெச்சாங்க. அதெல்லாம் வொர்க்-அவுட் ஆகலை. ஆனா, தீவிரப் பயிற்சி காரணமாவே நான் போட்டிகள்ல ஜெயிக்க ஆரம்பிச்சேன். 'விளையாட்டுல அர்ப்பணிப்பு இருந்தா போதும். எதையும் சாதிக்கலாம்’னு புரிஞ்சுக்கிட்டேன். அதுதான் சீனா, மலேசியானு என்னை உலகம் முழுக்கக் கூட்டிட்டுப் போயிருக்கு!''

''உங்க கேம் ப்ளான் என்ன?''

''காலைல அஞ்சு மணிக்கு எழுந்து  ரெண்டு மணி நேரம் பயிற்சி. சாயந்தரம் மூணு மணி நேரம் பயிற்சி. இடையில் டயட். கிடைக்கிற சின்ன கேப்லகூட பயிற்சி எடுக்குறதால, நண்பர்களுடன் நேரம் செலவழிக்க முடியாது. சினிமா, ஷாப்பிங்லாம் போக முடியாது. அதனால என்ன? ஒவ்வொரு பதக்கமும் அந்த வருத்தத்தைப் போக்கிரும். ஜூனியர் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணிக்குத் தேர்வாகி இருக்கேன். கண்டிப்பா இந்தப் போட்டியில் தங்கம் ஜெயிக்கணும்!'' -’ உற்சாகமாகச் சொல்கிறார் ரோச்சல்.

அந்த வார்த்தைகளில்தான் அத்தனை தீவிரம்... அத்தனை உற்சாகம்!