மும்பையில் `45 ஆயிரம் கோடி மதிப்புள்ள அமெரிக்க விமானங்களையும், மின் உற்பத்தி சாதனங்களையும் இந்தியாவுக்கு விற்பதில் கணவர் மும்முரமாக இருக்க... மிஷேல், ஆதரவற்ற சிறுவர்களோடு பாண்டி விளையாடினார். விடுகதைகள் போட்டு பதில் கேட்டார். அனைத்துக்கும் மேலாக, அவர்களோடு கை கோத்துக்கொண்டு 'ரங் தே பஸந்தி' சினிமா பாடலுக்கு நளினமாக நடனம்ஆடினார். மறுநாள், கல்லூரியின் திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில், சுட்டெரிக்கும் வெயிலில் ஒபாமா தம்பதியர் இளைஞர்களைச் சந்தித்தனர். அங்கும் சிக்ஸர், ஃபோர் என்று ஸ்கோர் செய்யத் தவறவில்லை மிஷேல். 'சிகாகோவின் சாதாரண குடியிருப்பில் வளர்ந்தவள் நான். எனக்கும் என் சகோதரனுக்கும் கார், பங்களா என்று என் பெற்றோர்களால் எதையும் வழங்க முடியவில்லை. ஆனால் உழைப்பு, படிப்பு ஆகியவற்றின் மதிப்பைக் கற்றுக்கொடுத்தார்கள்!' என்று நெகிழ்ச்சியாகப் பேசிவிட்டு, 'ஆகவே இளைஞர்களே... நீங்கள் உங்களுக்காக மட்டும் கனவு காணாதீர்கள். உங்கள் நாட்டுக்காக மட்டும் கனவு காணாதீர்கள். மொத்த உலகத்துக்காகவும் கனவு காணுங் கள். உலகம் எதிர்நோக்கி இருக்கும் பிரச்னை களை உங்களால்தான் தீர்க்க முடியும். அதனால்தான் என்னுடைய கணவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்நாட்டின் தலைவர்களை மட்டும் சந்திக்காமல் உங்களைப் போன்ற இளைஞர்களைச் சந்திப்பதிலும் உறுதியாக இருக்கிறார்!' என்று உணர்ச்சிகரமாக முடித்தார் மிஷேல்.
மனைவிக்குச் சற்றும் சளைக்காமல் ஒபாமாவும் தன் இமேஜை ஏகத்துக்கும் உயர்த்திக்கொண்டார், இந்திய சுற்றுப் பயணத்தில். மன்மோகன் சிங்குடன் இணக்கமாக மணிக்கணக்கில் பேச்சு வார்த்தை நடத்தியதாகட்டும், மாணவர்கள், சிறுவர்களிடம் நேரம் காலம் பார்க்காமல் சரளமாக உரையாடியதாகட்டும்... 'மிஸ்டர். ஃப்ரெண்ட்லி' பிம்பத்தை அழுத்தமாகப் பதித்துக்கொண்டார். இதற்கும் பின்னணி காரணம் இல்லாமல் இல்லை. ஒபாமா இந்தியா கிளம்பிய சமயம்தான், அமெரிக்க காங்கிரஸ் தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில், ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும் பான்மை ஆட்டம் கண்டுவிட்டது. இப்போது பெரும்பான்மை பலம், எதிரணியான குடியரசுக் கட்சிப் பக்கம். அந்தக் காயத்துக்கு மருந்து போடுவதாக இந்தியப் பயணத்தை அமைத்துக்கொண்டார் ஒபாமா. அமெரிக்கா வுக்கு லாபகரமான பயணமாக இந்தப் பயணத்தை அமைத்துக்கொள்ள இந்தியர்களை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார். இந்திய நாடாளுமன்றத்தில் ஒபாமா நிகழ்த்திய உரையில் அத்தனை தாஜா.
|