Published:Updated:

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

'படுகர் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி தர வேண்டும்' என்று முதல்வர் கருணாநிதி நினைத்தபோது, அவர் முன்னால் நிறுத்தப்பட்டவர் கா.ராமச்சந்திரன். 'பார்த்தா, அப்பாவியான ஆளா இருக்காரே!' என்று தலைமையே கமென்ட் அடித்ததாகத் தகவல் உண்டு. ஆனால், இன்று படா மனிதராகத் தன்னை வளப்படுத்திக்கொண்டார் ராமச்சந்திரன்!

குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் வழியில் உள்ள சின்ன கிராம மான 'இளித்துறை'க்காரர். ராமச்சந்திரனின் அப்பா காரி கவுடர். தனியார் பஸ் டிரைவராக இருந்தார். சொந்தமாக சின்ன தேயிலைத் தோட்டம் வைத்திருந்த சாதாரண விவசாயக் குடும்பம். அரசியலுக்கு வரும் முன் கட்டபெட்டு அருகே ஒரு ஏக்கர் நிலத்தை லீஸுக்கு எடுத்தார் ராமச் சந்திரன். விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுப்பதற்காக தோட்டக் கலைத் துறைக்கு தேயிலை நாற்றுகளை சப்ளை செய்தவர்களில் இவரும் ஒருவர். இப்படியாகத்தான் அரசுத் துறையுடன் அறிமுகம் கிடைத்தது.

குன்னூர் பகுதியில் முக்கியமான தி.மு.க. புள்ளி முபாரக். கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் சட்டசபைக் கொறடாவாக இருந்தவர் இந்த முபாரக். அவரது நட்பு ராமச்சந்திரனுக்குக் கிடைத்தது. 1990-ல் முபாரக் நீலகிரி மாவட்டச் செயலாளரானபோது, குன்னூர் ஒன்றியச் செயலாளராக ராமச் சந்திரனைப் போட்டியின்றி அமர்த்தினார். ராஜீவ் காந்தி கொலையாகி, அதன் பிறகு நடந்த தேர்தலில் தி.மு.க. பெரும் தோல்வியைச் சந்திக்க, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஒதுங்கி நின்றாராம் ராமச் சந்திரன்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

அ.தி.மு.க. ஆட்சியில் அமைதியாக அடைகாத்துவிட்டு, பிறகு 1997-ல் மாவட்டப் பஞ்சாயத்து உறுப்பினராகி, துணைத் தலைவர் பதவியையும் எட்டிப் பிடித்தார் ராமச்சந்திரன். 'கண்ணம்மா' திரைப்படத்துக்குக் கதை வசனம் எழுத, கோத்தகிரிக்கு கருணாநிதி வந்து குண்டனின் வீட்டில் தங்கி இருந்தபோது, தலைவரின் குடும்பத்தோடு அறிமுகம். குண்டனும் ராமச்சந்திரனும் ஒரே படுகர் இனம். 2006-ல் தேர்தல் ஜுரம் நெருங்கியபோது, குண்டன் மூலமாகவே ஸீட் வாங்கினார் ராமச்சந்திரன். நீலகிரி மாவட்டத்தின் மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி வென்றது. 'படுகர் இனத்தைக் கௌரவிக்கும் விதமாக ஓர் அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும்' என்ற அலை கிளம்ப, ராமச்சந்திரனுக்கு அமைச்சர் பதவி தேடி வந்தது. அதில் இருந்து எல்லாம் ஏறுமுகம்தான்!

பதவியை அடைந்ததும் பார்க்க வேண்டிய காரியங்கள் என்று இரண்டைச் சொல்வார்கள். ஒன்று, தன்னைத் தூக்கிவிட்டவரைத் தூர எறிவது. இரண்டாவது, பதவியைப் பயன்படுத்தி தன்னை வளப்படுத்திக் கொள்வது. அந்தப் பட்டியலில், இவரது பெயரையும் நிச்சயம் சேர்த்தாக வேண்டும் என்று கோவை வட்டாரத்து தி.மு.க-வினர் சொல்கிறார்கள். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கிக் குவித்திருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட உளவுத் துறை ரிப்போர்ட் சொல்கிறதாம். சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவருக்கு சொந்தமான நில சர்ச்சையிலும் மந்திரியின் தலை உருள்கிறது.

பழைய நண்பரான முபாரக்கை இப்போது பரம எதிரியாகப் பார்க்கிறார் ராமச்சந்திரன். மினிஸ்டர் கம் மாவட்டச் செயலாளராக இருந்தும்கூட, சொந்த மாவட்டத் தில் ராமச்சந்திரனுக்கு சொல்லிக்கொள்ளும் அளவு செல்வாக்கு இல்லை. சமீபத்தில் தி.மு.க. இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை துவக்க விழாவுக்காக துணை முதல்வர் ஊட்டி வந்தபோது, ராமச்சந்திரனின் பெயர் போட்ட ஒரு போஸ்டர்கூட ஒட்டப்படவில்லை. முழுக்க முழுக்க முபாரக்கின் கொடிதான் பறந்தது. நீலகிரி மாவட்டத்தில் கணிசமான ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்களைத் தன் கஸ்டடிக்குள் கொண்டுவந்து, ராமச்சந்திரனுக்குக் கடும் நெருக்கடியைத் தருகிறார் முபாரக். மாவட்டக் கழகத்தின் சக நிர்வாகிகளுக்கு போன் செய்துகூடப் பேசுவது இல்லை. தொண்டர்களோடுநெருங் கிப் பழகுவதும் இல்லை. தலித் கிளைச் செயலாளர் ஒருவரை அடித்தார் என்று தொடங்கி கட்சிக்குள்ளேயே ஏராளமான புகார்கள். ராமச்சந்திரன் மீது இருக்கும் அதிருப்தியால், படுகர் சமுதாயத்தின் மிகப் பெரிய வாக்கு வங்கி தி.மு.க-வுக்கு எதிராக இருப்பதாக தலைமைக்கு ஒரு தாக்கல் அனுப்பி இருக்கிறது முபாரக் டீம். சமீபத்தில் ஊட்டிக்கு ஸ்டாலின் வந்தபோது, வரவேற்புக்கு அந்தச் சமுதாயத்தினர் திரளாததை ஓர் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். படுகர் சமுதாயத் தலைவரான பீமா கவுடர் என்பவரின் கைது விவகாரம் ராமச்சந்திரனுக்கு மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தியது. ராமச்சந்திரனுக்கு எதிராக அந்த சமுதாயத்தினர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க சென்னைக்கே செல்லும் அளவுக்கு மோசமான நிலைமை.

ஊட்டி பகுதியில் அ.தி.மு.க-வினரின் செல்வாக்கு அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. அதைத் தடுக்க அமைச்சர் தரப்பு உருப்படியான காரியங்கள் எதையும் செய்யவில்லை என்ற குறை சொல்லப்படுகிறது. கொடநாட்டில் ஜெ. செய்து வரும் அரசியல் அசைவுகளும் ஆளும் மேலிடத்துக்குச் சரியாக வந்து சேர்வது இல்லையாம். கொடநாடு வீட்டில் ஜெ. செய்த கட்டு மான மாறுதல்களையே கடைசி நேரத்தில்தான் கண்டு பிடித்தனர்.

ராமச்சந்திரனின் மகள் வீடு இருக்கும் மேடநாடு பகுதியில் இருந்து கொடநாட்டில் நடக்கும் விஷயங்களை எளிதாகக் கண்காணிக்க முடியுமாம். அங்கே தேயிலை ஃபேக்டரி கட்டப்படும் விஷயம் ராமச்சந்திரனுக்குத் தொடக்கத்திலேயே தெரியாமல் போயிருக்க வாய்ப்பே இல்லை என்று எதிர்த் தரப்பு போட்டுக் கொடுத்தது. இப்படி சொந்தக் கட்சியில் சிக்கலில் மாட்டித் தவிக்கும் ராமச்சந்திரன், தனது துறையை எப்படி வைத்திருக்கிறார்?

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

கண்ணியத்தின் அடையாளமாகக் கருதப்படுவது... கதர். ஆனால், அந்தப் பெயரை இந்தத் துறை பெற வில்லை. கதர் துணி, தோல் பொருட்கள், சோப்பு ஆகியவை இதன் மிக முக்கியமான தயாரிப்புகள். கதர் துணியை, பழைய காங்கிரஸ்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் பொருளாக காதி கிராமோத்யோ பவன்களுக்குள் முடக்கிவிட்டார்கள். இங்கு தயாரிக்கப்படும் ஷூ, பெல்ட் போன்ற தோல் பொருட்களின் தரம் முன்பைப்போல் இல்லை. குறிஞ்சி சந்தன சோப், மூலிகா ஹெர்பல் சோப், ஹெர்பல் கை கழுவும் சோப், எழில் ஷாம்பு போன்ற பெயர்களை எங்காவது கேள்விப்பட்டது உண்டா? கெமிக்கல் அதிகம் இல்லாத இந்த ஆரோக்கியமான வகைகளை காதி தயாரிக்கிறது. ஆனால், அதைப் பொதுமக்களுக்குத் தெரிந்துவிடாமல் ரகசியமாக விற்பனை செய்தால், துறையை எப்படி மேம்படுத்த முடியும்? கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை லாபத்தில் இருந்த சில விஷயங்கள்கூட, இப்போது நஷ்டக் கணக்கைக் காட்டுகின்றன. அதற்குக் காரணம், காதித் தயாரிப்புப் பொருட்களின் தரக் குறைவே என்று விற்பனையாளர்கள் சொல்கிறார்கள். இந்தப் பொருட்களைத் தயாரிக்க முன்பு இருந்த காதி யூனிட்டுகளைப் பயன்படுத்தாமல், தனியாரிடம் வாங்கிக் காதியில் விற்பனை செய்யும் கொடுமையும் ஆரம்பித்திருக்கிறது சமீப காலமாக!

ராமச்சந்திரனை மிஞ்சிய அளவில் 'பதவிப் பிரமாணம்' எடுத்துக்கொள்ளாத மந்திரி ஒருவர் இந்தத் துறைக்குள் வலம் வருகிறார். ஊட்டியில் இருந்து கிளம்பிய மனிதரை, திருவள்ளூர் வட்டாரத்து ஆசாமி எப்படி வளைத்தார் என்பது புரியாத புதிர்தான். அவருக்கும் நம்முடைய கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தி.மு.க. நகரக் கழகச் செயலாளர் கடிதம் கொடுத்தும், கருணாநிதியே ராமச்சந்திரனை அழைத்துக் கண்டித்த பிறகும், அந்த நபர் சொல்லும் இடத்தில் மந்திரி கையெழுத்து இடுவதை ஆச்சர்யமாகச் சொல்கிறார்கள். அந்த நபர் சொன்ன காரணத்துக்காக, டெண்டர்களுக்கான விதிமுறைகளை மீறிச் செயல்பட்டு சிக்கி, சில அதிகாரிகள்

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

சஸ்பெண்ட் ஆனார்கள். அதன் பிறகும், அந்த நபரின் ஆட்டம் தாங்கவில்லையாம். தோல் தொழிற்சாலையே வைத்திருக்காத டெக்ஸ்டைல் கம்பெனிக்கு ஷூ தயாரிக்கும் உரிமையைக் கொடுப்பதும், அம்பத்தூர் மற்றும் பெரம்பூரில் இருக்கும் அரசு யூனிட்டுகளைக் காயப் போட்டுவிட்டு, தனியார் கம்பெனிக்கு ஆர்டர்களை வாரி வழங்குவதுமாக, கமிஷன் மண்டியாக கதர் வாரியம்மாறிப் போனதாகவே வருத்த அலைகள்.

மந்திரிக்கு இதைப்பற்றிய கவலையும் இல்லை. அடுத்து மந்திரியாக வேண்டிய ஆசையும் இல்லை. சிவப்பு விளக்குவைத்த காரில் தான் வலம் வரும் தற்காலத்தையே வாழ்நாள் பெருமையாக எடுத்துக்கொள்ளும் ராமச்சந்திரன், 'இதுக்கு மேலே என்ன வேணும்? சி.எம். பதவியா எனக்குக் கிடைக்கப்போகுது? தலைவர் எனக்கு ரொம்பப் பெரிய அங்கீகாரம் கொடுத்துட்டாருய்யா. இதுவே போதும்" என்று நெருங்கிய உள்ளங்களிடம் மருகி மகிழ்கிறார்!