Published:Updated:

அன்பு கேவலமானதா சார்?

அன்பு கேவலமானதா சார்?

அன்பு கேவலமானதா சார்?
அன்பு கேவலமானதா சார்?
அன்பு கேவலமானதா சார்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ந.வினோத்குமார்
படம்:என்.விவேக்
அன்பு கேவலமானதா சார்?

"எ... என்ன வியாதின்னுலாம் தெர்யாது சார். ச்சின்ன்...ன வயசுலயே என்னை இங்கே

கொண்டாந்துட்டாங்களாம். அப்பா, அம்மா முகம்கூடத் தெரியாது. இப்போ எனக்கு 32 வயசு. மீசைவெச்ச குழந்தை சார் நானு!" - வேதனை மறைத்துச் சிரிக்கிறார் நரசிம்மலு. மாற்றுத் திறன்கொண்ட படைப்பாளி!

'என் ஊனத்தைப்பற்றி நான் கோபப்படுவதோ, இல்லே வருத்தப்படுவதோ... தேவை இல்லாத விஷயம். நேரத்தை வீணாக்கும் செயல். இந்த ஊனத்துடன் நான் வாழ்க்கையைக் கடந்தாக வேண்டும். உலகிலேயே மிகக் கொடிதான விஷயம், மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பரிதாபப்படும் நிலைதான்!' - உடலின் அனைத்து பாகங்களும் முடக்கப்பட்ட பின்னும் விண்வெளி ஆய்வில் பல சாதனைகள் புரிந்த ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வார்த்தைகள்தான் என் நினைவுக்கு வந்தன, நரசிம்மலுவைப் பார்த்தபோது!

'செரிபரல் பால்ஸி' என்ற நோயால் பாதிக்கப்பட்டவர் இவர். உடலின் சின்னச் சின்ன அசைவுக்கும் பகீரதப் பிரயத்னப்பட வேண்டும். வாய் குழறும். நடக்க முடியாது. தவழ்ந்தே செல்ல வேண்டும். உயிர் பிழைத்திருப்பதற்கே தடைகள் ஆயிரம் இருந்தாலும், ஒரு படைப்பாளியாகத் தன் இருப்பை உணர்த்த, விடாது போராடுகிறார் நரசிம்மலு.

அன்பு கேவலமானதா சார்?

"என்னால பேனா புடிச்சு எழ்ழ்ழுத முடியாது. ஒரு இடத்துல ரொ...ம்ப நேரம் உட்கார முடியாது. ஆனா... ஆனா... படிக்கணும்னு ஆசையா இர்ந்துச்சு" - மூச்சு வாங்குகிறது அவருக்கு. இடையிடையே ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்கிறார். "க்க்கை... கையால தானே எழுத முடியாது. கால்ல எழுதலாம்னு ட்ரை பண்ணேன். ஆரம்பத்துல பேனா புடிக்கவே முடி...ல்லை. புட்ச்சு எழ்துனாலும் ஒரு எழுத்து எழுத ரெண்டு நிமிஷம் ஆகும். ஆனா, விடாம... தொடர்ந்து எழுதிட்டே இருந்தனா, அதுனால இப்ப பரவாயில்ல. தெளிவா, கொஞ்சம் வேகமா எழ்ழுத முடியுது!" என்பவர் இப்போது +2 படித்திருக்கிறார்.

நரசிம்மலுவின் அறையெங்கும் ஓவியங்கள், நூல் வேலைப்பாடுகள், கணினி என ஒரு மினி அலுவலகத் தோற்றம். "பெயின்டிங்லாம் பண்ணுவீங்களா?" என்று கேட்டதும், "எனக்கு இப்போ அதுதான் ஃப்ப்...பிரெண்ட்ஸ்!" என்கிறார்.

"எப்படியாவது படிச்சுரணும்னு இவனுக்கு ரொம்பவே ஆர்வம். யாரையும் உதவிக்கு எதிர்பார்க்க மாட்டான். 'என்னப்பா... பாடம் கஷ்டமா இருக்கா?'ன்னு கேட்டா, 'என் கஷ்டத்தைவிட பாடம் ஒண்ணும் அவ்வளவு கஷ்டம் இல்லை'ன்னு சொல்லிச் சிரிப்பான். அந்த நம்பிக்கைதான் அவனை ஒவ்வொரு படிக்கட்டா மேல ஏறவெச்சுட்டு இருக்கு!" என்கிறார் நரசிம்மலுவின் ஆசிரியர் எல்வின்.

நரசிம்மலுவின் தலை கோதியபடியே பேசுகிறார் அவரது பாதுகாவலர் அக்கம்மா கிருஷ்ணமூர்த்தி. "சித்தூர்ல ஒரு அநாதை விடுதில இவனை விட்டுட்டுப் போயிட்டாங்க இவனோட அப்பாவும் அம்மாவும். தகவல் தெரிஞ்சு சிகிச்சைக்காக இவனை இங்கே அழைச்சிட்டு வந்தோம். மத்த குழந்தைங்க மாதிரிதான் இவனும் இருப்பான்னு நினைச்சோம். ஆனா, 'நான் படிக்கணும்'னு இவன் மல்லுக்கு நின்னப்பவே, இவன் மத்தவங்களைப்போல இல்லைன்னு தெரிஞ்சது. படிக்கவெச்சோம். அதோட, ஓவியம், கம்ப்யூட்டர்னு புதுசு புதுசா கத்துக்கிட்டே இருந்தான். நடுநடுவே உடற்பயிற்சி, பிசியோதெரபின்னு சிகிச்சைகள் கொடுத்ததால், இப்போ அவனோட வேலைகளை அவனே செஞ்சுக்கிற அளவுக்கு வந்திருக்கான். ஒருநாள் மல்ட்டி மீடியா கத்துக்கணும்னு சொன்னான். தினமும் ஆட்டோவுல வடபழனி அரீனா கம்ப்யூட்டர் சென்டருக்குக் கூட்டிட்டுப் போவேன். அங்கே இவனோட ஆர்வத்தையும் முயற்சியையும் பார்த்துட்டு, இலவசமாவே அந்த கோர்ஸ் கத்துக் கொடுத்தாங்க. இப்படி ஆங்காங்கே கிடைக்குற மழைத் துளிகளில் தன் பசியடக்கி ஓடிட்டு இருக்கான்!"

அதுவரை ஓவியம் வரைவதில் மும்முரமாக இருந்த நரசிம்மலு சட்டெனத் தலை உயர்த்து கிறார். "எம்புளாய்ம்ம்ம்...மென்ட் ஆபீஸ்ல ரெஜி...ரெஜிஸ்டர் ப...ப...ண்ணிருக்கேன். 10 வருஷம் ஆச்சு. நான் யார்கிட்டயும் இதுவரை பணம் கேட்கலை. எனக்குத் தேவை கொஞ்சம் ஃப்...ரீடம். அப்புறம் வேலை. வேலை கிடைச் சுட்டா, நான் என்னை நம்பிப் பொழச்சுக்குவேன். அப்புறம்... அப்புறம் எனக்கு ஒரு லைஃப் பார்ட்னர் இருந்தா நல்லா இருக்கும். ஃப்ப்...ப்ரெண்ட்ஸோ... ஹா...ஸ்ஸ்டல்ல இருக்குறவங் களோ எல்லா நேரமும் என்கூடவே இருக்க முடியாது. அதனால லைஃப் பார்ட்னர் கிடைச்சா, ரொம்ப உதவியா இருக்கும். என் பெயின்டிங்ஸை வித்தாவது அவங்களைக் காப்பாத்துவேன். எனக்கு அவங்ககிட்ட தேவை அன்பு மட்டும்தான். பலருக்கு இது கேவலமா தெரியலாம். ஆனா, அன்பு கேவலமானதா சார்?" - நரசிம்மலுவின் கண்களில் நீரும் கேள்வியில் ஆதங்கமும் தொக்கி நிற்கிறது!

அன்பு கேவலமானதா சார்?
அன்பு கேவலமானதா சார்?