Published:Updated:

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
ஓவியம்:ஹரன்

செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, இப்போது வேட்டி கட்டி இருக்கிறாரா... பேன்ட் அணிந்து இருக்கிறாரா என்பதே ஒரு செய்திதான்!

சில நாட்களுக்கு முன்னால் நடந்த ஒரு விழாவில், முதல்வர் கருணாநிதி வைத்த கோரிக்கை, 'இனிமேல் பரிதி வேட்டி அணிந்து தான் வர வேண்டும். பேன்ட் அணியக் கூடாது' என்பதாக இருந்தது. சுமார் 20 ஆண்டுகளாக மிக மிக முக்கியமான நிகழ்வுகளில்கூட அவர் கறுப்பு - சிவப்புக் கரை வேட்டி அணிந்து வராதது அந்தக் கட்சியின் தலைவருக்கு வேண்டுமானால் வருத்தமாக இருக்கலாம். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள கதை தெரியுமா?

1991 தேர்தலில் தி.மு.க. சார்பில் சட்டசபைக்குள் போனவர்கள் துறைமுகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதியும், எழும்பூரில் இருந்து பரிதி இளம்வழுதியும் மட்டுமே. அ.தி.மு.க. அசுர பலத்துடன் ஆளும் கட்சியாக இருக்கும் சபைக்குள் கருணாநிதி செல்வது விபரீதமானது என்பதால், அவர் பதவி விலகினார். அந்தத் தொகுதியில் செல்வராஜ் என்பவர் வென்று வந்தார். ஆனால், அவரும் ம.தி.மு.க-வில் ஐக்கியமானதால், தி.மு.க-வுக்கு ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணாக இருந்தவர் பரிதி மட்டும்தான்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

'2,000 ரூபாய் சம்பளம் வாங்குறவங்ககூட இந்த விலைவாசியில் சாப்பாட்டுக்குத் திண்டாடுறோம். ஆனா, ஒரு ரூபாய் சம்பளம் வாங்குற முதலமைச்சரால் எப்படிக் கஷ்டப்படாம வாழ முடியுது?' என்று கிண்டலடித்தால், யார்தான் சும்மா இருப்பார்கள்?

அன்றைய சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, 'இதுபோன்ற மரியாதை தெரியாத மனிதரை நான் பார்த்தது இல்லை' என்று சொன்னார்.

'உங்களைப்போல மரியாதையுடன் முதல்அமைச்சர் காலில் விழுந்த பேரவைத் தலைவரையும் நான் பார்த்தது இல்லை' என்று பரிதி பதில் சொன்னார்.

இப்படி நித்தமும் ஏதாவது ஒரு சிக்கல் வந்தது. பல முறை பரிதிக்கு அடி விழுந்தது. ஒருநாள் வேட்டியை உருவிவிட்டார்கள். சாதியைச் சொல்லித் திட்டினார்கள். அவர் ராஜினாமா செய்து ஓட வேண்டும் என்பதற்கான எல்லா வேலைகளையும் பார்த்தார்கள். கூட்டத்தொடர் முழுவதும் நீக்கப்பட்டார். ஒரு தனிப்பட்ட எம்.எல்.ஏ. குறித்து இத்தனை சர்ச்சைகள் நடந்தது இல்லை என்ற அளவுக்கு, சபை விவாதங்களில் இவை இடம்பெற்று உள்ளன. அதனால்தான் கருணாநிதி, 'ராமாயணத்து இந்திரஜித், மகாபாரதத்து அபிமன்யூ... என் தம்பி பரிதி இளம்வழுதி' என்று பாராட்டினார்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

பரம்பரை தி.மு.க-காரர் இவர். இவரது அப்பா இளம்பரிதி சென்னை தி.மு.க-வின் அசைக்க முடியாத தூணாக இருந்தவர். அந்தக் காலத்து ஸ்டார் பேச்சாளர். தனது மகனையும் பேச்சாளராக்க, வில்லிவாக்கத்தில் மேடை ஏற்றினார். இளைஞர் என்பதால், மு.க.ஸ்டாலின் அறிமுகம் எளிதில் கிடைத்தது. அழகாகப் பேசும் இவரின் பெயரைக் கேட்டார் கருணாநிதி. 'காந்தி' என்பதுதான் வீட்டில்வைத்த பெயர். ஆனால், திராவிட இயக்கத்துக்கு ஈர்ப்பாக பரிதி இளம்வழுதி என்று பெயர் மாற்றம் செய்தார் கருணாநிதி. 1984 தேர்தலில், பெரம்பூர் தொகுதியில் வேட்பாளராக பரிதி நிறுத்தப்பட்டபோது, அவருக்கு வயது 25 முடிந்து ஒரு மாதம்தான் ஆகி இருந்தது. எம்.எல்.ஏ-வாகப் போட்டியிட 25 வயது முடிந்து இருக்க வேண்டும் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் விதி. அதைத் தாண்டி ஒரு மாதம் ஆன நிலையில் நிறுத்தப்பட்ட மிக இளம் வேட்பாளர் என்ற பெருமையுடன் சபைக்குள் போனார். இவரைத் தன்னுடைய காரில் கொண்டுபோய் சபைக்குள்விட்டார் ஸ்டாலின். தி.மு.க-வில் இளைஞர் அணியை உருவாக்கி, அதற்குத் தலைவராக ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று சொன்னவரும் இவரே. அதற்காக உருவாக்கப்பட்ட ஐவர் குழுவில் இவரும் இடம் பெற்றார்.

ஸ்டாலினுக்கு இடது கரம் அன்பில் பொய்யாமொழி என்றால், வலது கரமாக வலம் வந்தவர் பரிதி. நிறையப் படிப்பது, அரசியல், சமூகக் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் போய்க் கேட்பது, நல்ல புத்தகங்கள் எழுதியவர்களைத் தேடிப் பிடித்துச் சந்திப்பது, இதை எல்லாம் சென்னை மொழியில் மேடைகளில் முழங்குவது... இந்தக் காரணங்களால், பரிதி இளம்வழுதி தி.மு.க. தலைமை வரிசையால் கவனிக்கப்பட்டார்.

முன்னர் சொன்னது மாதிரி, 1991-96 ஆகிய ஐந்து ஆண்டு காலம் பரிதியை சென்னை எல்லையைத் தாண்டிக் கவனிக்கவைத்தது. 'பரிதி இளம்வழுதி என்னும் பயமறியா சிங்கக் குட்டி' என்று கருணாநிதி பாராட்டுப் பத்திரம் படித்தார். 'தி.மு.க. இருக்கிறது என்று காட்ட இருப்பது இவர் ஒருவர்தான்' என்று பேராசிரியர் உள்ளிட்டவர்களே சொல்ல ஆரம்பித்தார்கள். பரிதி பேரைச் சொன்னால், தொண்டன் விசில் அடிக்க ஆரம்பித்தான். அவரது கூட்டத்துக்குப் பெரும்பாலானவர்கள் திரள ஆரம்பித்தார்கள். அரசியலை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள், 'பரிதிக்கு வினை ஆரம்பமாயிடுச்சு' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஸ்டாலின் வளையத்தில் இருந்து பரிதி கொஞ்சம் கொஞ்சமாகக் கழற்றிவிடப்பட்டார். அவராகவே கழன்றுகொண்டார் என்று சிலர் சொல்வது பொய்யானது. இளைஞர் அணி வட்டாரத்தினர் இவரை அந்நியப்படுத்த ஆரம்பித்தார்கள். அடுத்த சில மாதங்களில் முரசொலி மாறனின் செல்லப் பிள்ளையாக மாறத் தொடங்கினார் பரிதி. அதுவே பலருக்கு எரிச்சலைக் கிளப்பியது. 96 தேர்தலில் வென்ற இவருக்கு அமைச்சர் பதவி தருவதற்குக்கூட முட்டுக்கட்டை போட்டார்கள். ஆனால், துணை சபாநாயகர் நாற்காலியைப் போட்டார் கருணாநிதி. அடுத்த தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவைத் தயவு தாட்சண்யம் இல்லாமல் எதிர்த்த இரண்டு பேரில் இவரும் ஒருவர். (மற்றொருவர் பொன்முடி.) இம்முறை செய்தித் துறை அமைச்சர் ஆக்கப்பட்டார். கொஞ்சம் பசையான சென்னை மாநகர வளர்ச்சிக் குழுமமும் அவருக்குத் தரப்பட்டது. பரிதியிடம் இருந்து சி.எம்.டி.ஏ-வைக் கைப்பற்றிவிடப் பலரும் பகீரதப்பிரயத்தனங்கள் செய்து பார்த்தனர். ஆனாலும், அசைந்துகொடுக்கவில்லை கருணாநிதி.

சென்னையில் எழும்பும் முறையற்ற கட்டடங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு, இந்த அமைப்புக்குத்தான் இருக்கிறது. ஆனால், சி.எம்.டி.ஏ. என்பது 'அள்ளிக் கொடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு வசதியாக' இருப்பதைப் பொது நல அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. வேறு ஒருவர் கையில் இருந்தால், முறைகேடுகள் இன்னும் அதிகமாக இருந்து இருக்கும் என்று சொல்லலாமே தவிர, குற்றமற்றதாக அது இன்றும் இல்லை. எவை எல்லாம் விதியோ, அவை அனைத்துக்கும் விதிவிலக்குகளும் இருக்கவே செய்கின்றன. இதற்கு சென்னை தியாகராயர் நகர் ஒன்றே உதாரணம். முன்னே இடம், பின்னே இடம், கார் பார்க்கிங்... என்ற எந்த விதிகளும் அங்கு உள்ள கடைகளுக்குக் கிடையாது. சி.எம்.டி.ஏ-வுக்குக் கொடுத்த ப்ளான் வேறாகவும், கட்டடம் வேறாகவும் இருக்கும். அதை அதிகாரிகள் கண்டுகொள்வதும் இல்லை. இதை டிராஃபிக் ராமசாமி வழக்கு போட்டால் மட்டும்தான், நீதிமன்றமும் அரசாங் கமும் கவனிக்கும் என்றால், இவர்கள் எதற்கு? விதிமுறை மீறும் இடங்களுக்குக்கூட நோட்டீஸ்கள் மட்டுமே அனுப்பப்படுகிறது, மேல் நடவடிக்கை இல்லை என்ற குறை உள்ளது. ஒரு சில கடைகளுக்கு வருபவர்களின் கார் பார்க்கிங்காக தியாகராயர் நகர் மாறி... அங்கு இருந்தவர்கள் எல்லாம் புறநகருக்கு ஓடிக்கொண்டு இருப்பதுதான் சென்னையின் வளர்ச்சி!

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

அடுத்ததாக, செய்தித் துறை! எப்போதும் செய்தியின் நாயகன் முதல்வர் கருணாநிதிதான். அவரே இந்த ஆட்சிக்கான தலைமை பி.ஆர்.ஓ. அரசாங்கத்தைப்பற்றிய செய்திகளை அவரே முன்னணிப் பத்திரிகைகளில் வரவைத்துவிடுவதால், பரிதிக்கு பாதி வேலை குறைவு. 'செய்திகளின் எண்ணிக்கை குறையும்போது, விளம்பரங்களின் எண்ணிக்கையும் குறையும்' என்ற சூத்திரம் இந்த ஆட்சிக்கு மட்டும் அல்ல; எல்லா ஆட்சிக்கும் பொருந்துவதுதான். மணிமண்டபங்கள் அமைப்பது, நினைவகங்கள் கட்டுவது, சிலைகள் வைப்பது, நூற்றாண்டு விழாக்கள் நடத்துவது, சினிமா விழாக்கள் மற்றும் விருதுகள் கொடுப்பது எல்லாமே கருணாநிதிக்குப் பிடித்தமானவை. சொல்லப்போனால், முதல்வர்தான் இந்தத் துறையின் அமைச்சர். பரிதியைத் துணை அமைச்சர் என்றுதான் சொல்ல வேண்டும். இம்மாதிரி அமைக்கப்படும் மண்டபங்கள், திறப்பு விழாவுடன் களை இழந்துவிடுகின்றன. அவை ஒழுங்காகப் பராமரிக்கப் படுவது இல்லை. சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் நெல்கட்டான்செவல் பூலித்தேவன் மணி மண்டபம் வரை இதுதான் நிலைமை. முக்கியஸ்தர்களுக்காக இதுபோல் நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் அமைக்கப்படும் நினைவகங்கள், அந்தப் பகுதி உள்ளாட்சி அமைப்புகள் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அவர்கள் பணம் இருந்தால் மட்டும்தான் பராமரிக்கிறார்கள். அதற்கான ஆர்வம் இல்லை என்றால், அப்படியே விட்டுவிடுகிறார்கள்.

மேலும், தமிழக செய்தித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பி.ஆர்.ஓ-க்கள் ஒவ்வொருவருமே குட்டி மந்திரிகளாக வலம் வருகிறார்கள். ஆட்சிகள் மாறும்போது தங்கள் கட்சி அபிமானிகளை இந்தப் பதவிகளில் உட்காரவைப்பது வழக்கமானதுதான்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

அதற்காக அவர்கள் அடிக்கும் கூத்தும் கும்மாளமும், பரிதி நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாதவை. சிலர் பரிதி பேரைவைத்தே ஆடவும் செய்கிறார்கள். ஆட்சியைக் காப்பாற்றுவதாக நினைத்து, இந்த ஆட்கள் செய்யும் காரியங்கள், ஆட்சிக்கு வேட்டுவைக்கும் அளவுக்கு விவகாரமானவை. இவர்களே தனித் தனி கோஷ்டிகளாக மாறிக் கழுத்தறுப்பு வேலைகள் பார்ப்பதை மட்டுமே தனியே ஒரு தொடர் எழுதலாம்.

அதிகாரம் பொருந்திய ஜெயலலிதாவையே எதிர்க்கத் துணிந்த பரிதியால், இம்மாதிரியான ஆட்களின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்போவது விநோதம்தான்!