புகைப்படம் எடுப்பதற்காக வாலியின் இருபுறமும் யுகபாரதியும், இளையகம்பனும் அமர, "இந்தப் பக்கம் கம்பன், இந்தப் பக்கம் பாரதி. இதைவிட வேற என்னய்யா வேணும்!" என வாலி அடித்தார் டைமிங் கமென்ட்.
"எனக்கு எப்போதும் ஆச்சர்யமா இருப்பது வாலி சாரின் சிலேடை. அப்புறம் தயக்கமே இல்லாமல் இளம் கவிஞர் களை அழைத்துப் பாராட்டுவார். 'அன்னக் கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க, நெல்லுக்குப் பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க' என்று நான் எழுதிய பல்லவிக்கு, அவர் அழைத்துப் பாராட்டியதை என்னால் மறக்கவே முடியாது. தமிழ்த் திரை இசைப் பாடல்களின் மூத்த குடிமகன் வாலி!" என்ற பழநிபாரதியின் சொற்களில் உண்மை.
" 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா' பாட்டுக்கு எதுக்கு நீ மன்னிப்பு கேக்கணும்? அதுல என்ன தப்பு? கிராமத்துல லவ்வர்ஸ் இருக்காங்க. கல்யாணத்துக்கு யாரும் சம்மதிக்கலை. 'இங்கேயே கோயில்ல கல்யாணம் பண்ணிக்கலாமா, இல்லை, வேற ஊருக்கு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?'ன்னு கேக்குறது என்ன தப்பு? ஓடிப் போயி குழந்தை பெத்துக்க லாமான்னு கேக்கலையே!" என்று சினேகனிடம் கேட்கும் போது, வாலியின் தாடிக்குள் குறும்புச் சிரிப்பு.
தாமரை, வாலியிடம் சொன்ன ஃப்ளாஷ்பேக் ரொம்பவே சுவாரஸ்யம். "நீங்க எழுதிய 'உன்னை நான் சந்தித்தேன், நீ ஆயிரத்தில் ஒருவன்' பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் கணவர் தியாகுவிடம் அப்போ என் விருப்பத்தை எப்படிச் சொல்றதுன்னு புரியாம இருந்த சமயத்தில், ஒரு கேசட் வாங்கி, ரெண்டு பக்கமும் இந்தப் பாட்டை மட்டும் திரும்பத் திரும்பப் பதிஞ்சு 'இதைக் கேளுங்க'ன்னு கொடுத் தேன். என் காதலுக்கு உங்க பாடல்தான் தூது!" என்றதும் ஆச்சர்ய பூரிப்பு வாலிபக் கவிஞர் முகத்தில்!
"இசைக்கு ஏற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துறதுல இன்னிக்கும் வாலி சார்தான் கில்லி. 'தாமரைக் கன்னங்கள்' பாடலில் 'மாலையில் சந்தித்தேன், மையலில் சிந்தித்தேன், மங்கை நான் கன்னித் தேன், காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்' என்ற பாட்டு எப்பவும் நான் முணுமுணுக்குற பாட்டு. அவரைப் பார்த்து, வளர்ந்து, இன்னிக்கு அவர்கூட நிற்கிறோம் என்பதே பெருமைதான்!" என்று பூரிப்புடன் பேசுகிறார் விவேகா.
|