Published:Updated:

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

செக்யூரிட்டிகள், பி.ஏ-க்கள் இல்லாமல் மைதீன்கான் நடந்துபோனால்... அவரை யாரும் அமைச்சர் என்று சொல்ல முடியாது. அந்த அளவுக்கு பவ்யமான அமைச்சர்!

உயரம் குறைவான, உருண்டு திரண்ட உருவம், இறுக்கமாகமடக்கி விடப்பட்ட சட்டை, எப்போதும் கையில் எரியும் சிகரெட்... இவை மட்டுமே மைதீன் கானின் அடையாளங்களாக நெல்லை தி.மு.க-வில் பல ஆண்டுகளாக இருந்தது. தான் மந்திரி ஆவோம் என்ற நினைப்பெல்லாம் இல்லாமல்தான் மைதீன்கானும் இருந்தார். அவரே சொல்லிக்கொள்வது மாதிரி, 'அமைதிக்குக் கிடைத்த பரிசு' இது!

நெல்லையில் இருந்து சங்கரன்கோயில் செல்லும் பாதையில் இருக்கிறது மானூர். அதற்குப் பக்கத்தில் உள்ள அயூப்கான்புரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் மைதீன்கான். அவரது வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது மிளகாய். சுற்றுவட்டாரத்தில் விளையும் மிளகாய் வத்தலை வாங்கி, ஏற்றுமதி செய்ததில் கையில் காசு புழங்கியது. அப்போது அவருக்கு மஸ்தான் அறிமுகம் ஆனார். அந்தக் காலத்து நெல்லை தி.மு.க-வின் அசைக்க முடியாத மாவட்டச் செயலாளராக இருந்தவர். மஸ்தானுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார் மைதீன்கான்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

தென் மாவட்டத்து அரசியலில் வைகோ அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தபோது, அவருக்கும் இவர் அறிமுகம்ஆனார். நெல்லை சாப்டர் மைதானம் கருணாநிதியின் கரகரக் குரலை அடிக்கடி அனுபவிக்கும். அந்தக் கூட்டங்கள் நடத்த தன்னு டைய சொந்தப் பணத்தை எடுத்து வந்து செலவு செய்வார். இன்று ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சிக்குச் செலவழிக்க எத்த னையோ பேர் வரலாம். ஆனால், தி.மு.க. எதிர்க் கட்சியாக இருந்து, முக்கியஸ்தர்கள் சம்பாத்தியங்கள் இல்லாமல் இருந்த காலத் தில் இவர் ஸ்பான்சர். இதனாலேயே தி.மு.க-வில் முக்கியஸ்தராக மாறினார். அதைவிட முக்கியமான விஷயம், நெல்லைக்குள் பிரமாண்டமான ஃப்ளெக்ஸ் பேனர்களைவைத்து கவனம் ஈர்த்தது.

வைகோவின் பிரிவு மைதீன் கானையும் ம.தி.மு.க-வில் சேர்த்தது. நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆனார். ஆனால், அன்றைய ம.தி.மு.க-வில் முக்கியப் புள்ளியாக இருந்த டி.ஏ.கே.லக்கு மணனுக்கும் இவருக்கும் சரிவரவில்லை. எனவே, கருப்பசாமி பாண்டியனுடன் இணைந்து அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். அங்கே இருந்து கருப்பசாமி பாண்டியன் விலக, அவருடன் இவரும் தி.மு.க-வுக்கு வந்து சேர்ந்தார். கொஞ்சம் பெரிய சுத்துதான்!

பாளையங்கோட்டை முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் தொகுதி என்பதால், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவரே வேட்பாளராக ஆவார். மைதீன்கானுக்கு அது 2001 தேர்தலில் தரப்பட்டது. வெற்றி பெற்றார். தி.மு.க. எதிர்க் கட்சி நாற்காலியில் உட்கார்ந்தது. சட்டசபையில் பேச மாட்டார், ஓங்கிக் குதிக்க மாட்டார் என்றாலும், தினமும் ஆஜராவார். இவருக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் உரையாடல்பற்றி ஒரு ஜோக் உண்டு. மைதீன்கானைப் பார்த்ததும், 'எப்ப அண்ணே வந்தீங்க?' என்று ஸ்டாலின் கேட்பாராம். 'காலையிலதான் வந்தேன்' என்று இவர் பதில் சொல்வாராம். 'எப்ப அண்ணே ஊருக்கு?' என்று ஸ்டாலின் கேட்டதும், 'மாலையில போறேன்' என்பாராம் இவர். அதாவது, இதற்கு மேல் மைதீன்கானிடம் கேட்க வேறு எந்த விஷயமும் இருக்காதாம்!

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

2006 தேர்தல் வந்தது. கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக், தனக்கு பாளையங்கோட்டையைக் கேட்க, விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது. அன்றைய தினம் எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் தங்கியிருந்தார். நெல்லையில் இருந்து இவரைப் பார்க்க வந்த உடன்பிறப்பு ஒன்று அல்வா கொண்டுவந்திருந்தது. சுற்றிலும் உள்ளவர்களுக்கு அல்வாவைப் பகிர்ந்துகொடுத்தார். ஆனால், தலைமை தனக்கே 'அல்வா' கொடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வருத்தத்துடன் நெல்லை எக்ஸ்பிரஸில் ஏறி ஊர் போய்ச் சேர்ந்தார். பாளை இல்லையென்றால், வேறு தொகுதியும் தனக்கு இல்லாததால் கோபித்துக்கொண்டு வீட்டுக்குள் முடங்கிக்கொண்டார் மைதீன்கான். மிளகாய் ஏற்றுமதியை ஒழுங்காகப் பார்ப்போம் என்று அமைதியானவருக்குத் திடீரென்று ஒருநாள் டி.வி. செய்தி, 'பாளையங்கோட்டை தி.மு.க. வேட்பாளர் டி.பி.எம். மைதீன்கான்' என்று ஓடியது. தொகுதியை வாங்கிய கூட்டணிக் கட்சிக்கு வேட் பாளர் கிடைக்காததால், ரிட்டர்ன் பண்ண, மைதீன்கான் காட்டில் மழை. தேர்தலில் குதித்தார். வென்றார். இஸ்லாமிய சமுதாயத்துக்குப் பிரதிநிதித்துவம் தர ரகுமான்கான், சல்மா போன்றவர்களால் சபைக்குள் வர முடியாத நிலையில், இவரது தலை கருணாநிதி பார்வையில்பட்டது. அமைச்சராகவும் ஆனார்.

"டேய்! ஊருக்குள் வர்றேன்டா... சைரன் சுத்துது... துப்பாக்கி ஏந்திய போலீஸ் இருக்குது... என்னாலயே நம்ப முடியல!" என்று போனைப் போட்டு சொல்லிக்கொண்டே நெல்லைக்குள் நுழைந்தார். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கட்சிக்குள் நுழைந்து, செலவழித்து, அடுத்து செலவழிக்கப் பணம் இல்லாத நிலையில் மாற்றுக் கட்சிக்குத் தாவி, அதிர்ஷ்டத்தின் காரணமாக மந்திரியாகி இருப்பவர் என்றால் இவர்தான்.

ஆனால்... இளைஞர் நலன், விளையாட்டு, சுற்றுச்சூழல் போன்ற துறைகளுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் இவருக்கும், எவருக்கும் தெரியவில்லை. ஆக்டிவ் ஆக இருக்க இவரது உடலே இடம் கொடுக்காது. மந்திரிக்கு விளையாட்டு ஆர்வமும் குறைவு. அதுபற்றிய அனுபவமும் கிடையாது. இன்று உலகத்தில் அதிக அக்கறையுடன் பல நாடு கள் கவனிக்கும் துறை சுற்றுச்சூழல். ஆனால், அது பற்றிய இவரது ஆர்வமும் குறைவு. 'ஏதாவது ஒரு துறையைக் கொடுக்க வேண்டும், அதுக்காகக் கொடுக்கப்பட்டது இது' என்று மட்டும்தான் சொல்ல முடியும்.

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் கெட்டுப் போய் எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அது மேலும் மேலும் கெட்டுக்கொண்டே போவதைத் தடுக்க எந்தக் காரியமும் செய்யப்படவில்லை. மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், இந்திய நகரங்களின் சுற்றுப்புறச் சீர்கேடுகள் குறித்து எடுத்த சர்வேயில் முதல் 10 நகரங்களுக்குள் வந்த நகரம் தூத்துக்குடி. தொழில் நகரங்களின் மாசுப் பட்டியலில், இந்திய நகரங்களில் 8-வது இடத்தைப் பெற்றது வேலூர். ஆனால், இதை எல்லாம் உணர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 'என்னதான் செய்வது?' என்று நினைத்தாரோ என்னவோ, சுற்றுச்சூழலுக்கு நாம் மாசு ஏற்படுத்துவதையாவது தவிர்ப்போம் என்று இந்தத் துறைக்கு அமைச்சரானதும் சிகரெட் பிடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

விளையாட்டுத் துறையில் அரசாங்கம் செய்வதைவிட, தனி மனிதர்கள், தனியார் நிறுவனங்கள் செய்து வரும் காரியங்கள் அபரிமிதமானவை. தடகள வீராங்கனை சாந்திக்கு, உலக அளவில் ஓர் அவமானம் ஏற்பட்டபோது, முதல்வர் கருணாநிதி அவரை அரவணைத்து 15 லட்சம் ரூபாயைக் கொடுத்து, தொகுப்பூதிய அடிப்படையில் பயிற்சியாளர் வேலையும் போட்டுக்கொடுத்தார். ஆனால், அந்தப் பணியை நிரந்தரமாக்க எத்தனையோ முறை அவர் முயற்சித்தும் முடியவில்லை. இது பத்திரிகைகளிலும் வந்தது. அதன் பிறகாவது, விளையாட் டுத் துறைக்கு மந்திரியாக இருப்பவர் கவனித்து இருக்க வேண்டும். வெளிநாடுகளில் இது மாதிரியான திறமைசாலியை அந்த நாட்டு அரசாங்கம் தாங்கும். தத்து எடுத்துக் காப்பாற்றும். ஆனால், இங்கு ஜால்ராக்களுக்குத் தானே மவுசு அதிகம்!

இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் வக்ஃபு போர்டும் இவரது கட்டுப்பாட்டில் வருகிறது. வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான சொத்துக்கள் ஏராளமான அளவில் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. அதை மீட்பதற்கும் பெரிய அளவிலான நடவடிக்கை இல்லை. இந்த சொத்துக்களை மீட்க மைதீன்கான் போன்ற அப்பாவிகளால், ரிஸ்க் எடுக்கப் பயப்படும் மனிதர்களால் முடியவே முடியாது. மதுரையில் வக்ஃபு வாரிய நியமனங்கள் தொடர்பாக ஒரு பெரிய சர்ச்சை கிளம்பி, இவர் பயந்து அலறிப் பல மாதங்கள் பதுங்கிக்கொண்டு இருந்தார் என்றும் சொல்கிறார்கள். பொதுவாக, ஹஜ் பயணிகளை வழியனுப்புவது, வரவேற்பது போன்ற காரியங்களை மட்டுமே பார்த்தால் போதும் என்று அமைச்சரும் அமைதியாகிவிடுகிறார்.

ஆனால், சில நேரங்களில் மைக் கிடைத்தால் 'தேவை இல்லாமல்' பேசிவிடுவதாகவும் மைதீன்கான் மீது குற்றச்சாட்டு உண்டு. 'அரிசி கடத்துவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். கடத்தினால் என்ன தப்பு?' என்ற அர்த்தத்தில் இவர் பேசியதாக ஜெயா டி.வி-யில் ஒரு வீடியோ காட்சி திரும்பத் திரும்ப ஒளிபரப்பினார்கள். ஜெயலலிதாவும் இதைக் குற்றம்சாட்டி அறிக்கையாக வெளியிட்டார். 'மந்திரி ஒருவரே அரிசி கடத்தலுக்கு ஆதரவாகப் பேசலாமா?' என்று அவர் கேள்வி எழுப்பினார். பதவி விலகவும் வலியுறுத்தினார். 'நான் அப்படிப் பேசவே இல்லை' என்று மைதீன்கான் மறுத்தார்.

ஏதோ ஒரு விஷயத்துக்காக மனு கொடுக்க வந்தவர்களிடம் தேவை இல்லாமல் மேலிடத்து மன வருத்தக் கதைகளையும் வெள்ளந்தியாக இவர் சொல்ல, அவர்கள் அதை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். 'அண்ணன் பேசவே மாட்டாரு. ஆனா, பேசினா வாயை மூடவே மாட்டாரு' என்பார்கள்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

அதைவிடப் பெரிய சர்ச்சையாக இருந்தது, வெற்றிவேல் என்ற போலீஸ் அதிகாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் நடுரோட்டில் போராடிக்கொண்டு இருந்தபோது வேடிக்கை பார்த்த மந்திரிகளில் இவரும் ஒருவர் என்பதுதான். வெடிகுண்டு வீசப்பட்டும் அரிவாளால் வெட்டப்பட்டும் ஒரு மனிதன் துடித்துக்கொண்டு இருக்கும்போது, மைதீன்கான் அதைப் பார்த்துக்கொண்டு இருப்பதாக வெளியான காட்சி மீடியாக்களில் வெளியாகி, அனைவரையும் தலைகுனியவைத்தது.

மைதீன்கானுக்கு ஒரு சிக்கல் என்னவென்றால், அவருக்கு பக்கத்துத் தொகுதிகள் அனைத்தும் வி.ஐ.பி-க்களால் நிரம்பி வழிகிறது. அம்பாசமுத்திரம் சபாநாயகர் ஆவுடையப்பன், ஆலங்குளம் அமைச்சர் பூங்கோதை, தென்காசி கருப்பசாமி பாண்டியன், கடையநல்லூர் பீட்டர் அல்போன்ஸ் என்று இருப்பதால், அந்தத் தொகுதிகளுக்குள் அநாவசியமாக இவரால் நுழைய முடியாது. எனவே, பக்கத்தில்

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

இருக்கிற சங்கரன்கோயில் தொகுதியில் மட்டும் டி.வி. கொடுப்பது, விழாக்களில் பங்கேற்பது என அடிக்கடி தென்படுவார். அப்போதும் செக்யூரிட்டி கள் தவிர, வேறு யாரும் இவருடன் செல்வது இல்லை. 'தனக்கென கோஷ்டி வேண்டாம். ஆனா, தனக்கான தொண்டர்களாவது வேண்டாமா?' என்று மற்ற கோஷ்டிகள் கேட்கின்றன. யாரும் தன்னைச் சந்திக்க வேண்டாம், தன்னிடம் எதையும் கேட்க வேண்டாம் என்று அமைச்சர் நினைப்பதாகச் சொல்கிறார்கள். அமைச்சரின் கூச்சம் எந்த அளவுக்குப் போயிருக்கிறது என்றால், நெல்லையில் இருந்து சென்னை வர, நெல்லை ஜங்ஷனில் ரயில் ஏறாமல், அடுத்த நிலையங் களான கோவில்பட்டி அல்லது சாத்தூரில்தான் வண்டி ஏறுகிறாராம்.

'மந்திரியாகவே இருந்தாலும் மைதீன் மாமா அப்பாவி' என்பார்கள் தொகுதிவாசிகள். ஆனால், அது நிஜமா... நடிப்பா?

                            
        
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு