Published:Updated:

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

புரோ பென்சிலால் மீசை வரைந்து வலம் வருபவர், தமிழக கேபினெட்டில் சுப.தங்கவேலன் மட்டும்தான்!

கருணாநிதியின் நடு உச்சி... நெடுஞ்செழியனின் அரும்பு மீசை... இவைதான் அந்தக் காலத்துத் திராவிட இயக்கத்தவர்களின் அடையாளம். அந்த சாயலில் இன்னும் இருக்கிற சிலரில் இவரும் ஒருவர். அரும்பு மீசையை வரையவே தினமும் பிரத்யேகமாக நேரம் ஒதுக்குபவர்!

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க-வின் ஆரம்ப காலத் தொண்டர்களில் ஒருவர், சுப.தங்கவேலன். பரமக்குடி அருகே உள்ள பி.கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர். அந்தப் பகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. ராமநாதபுரம் மன்னர் குடும்பமே அதற்குக் காரணம். அப்போது, தி.மு.க-வினால் களம் இறக்கப்பட்டார் முன்னாள் எம்.எல்.ஏ., தங்கப்பன். இந்த தங்கப்பனுடன் வலம் வர ஆரம்பித்த தங்கவேலனும் முக்கியமானவராக ஆக்கப்பட்டார். தங்கப்பனுக்கு ஆதரவாகத் தேர்தல் வேலைகளில் ஆர்வமுடன் பங்கேற்று அரசியலில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்.

பழைய ஆட்களைக் கேட்டால், தங்கவேலன் விளம்பர தட்டி போர்டுகள் எழுதினால், கண்ணில் ஒத்திக்கொள்வது மாதிரி இருக்கும் என்கிறார்கள். இன்றுபோல ஸ்கார்பியோக்கள் இல்லாத காலத்தில், கிராமம் கிராமமாக சைக்கிள்களில் பெடல் போட்டுப் போய், சளைக்காமல் பிரசாரம் செய்தவரும் இவரே!

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

இந்த உழைப்பின் பயனாக, கொடிக்குளம் பஞ்சாயத்துத் தலைவர் பதவி கிடைத்தது. 1962-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பரமக்குடி தொகுதியில், காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிட தி.மு.க. வேட்பாளராகப் பேரறிஞர் அண்ணாவால் அறிவிக்கப்பட்டவர். தோல்வியே கிடைத்தது. அதன் பின்னர், பரமக்குடி தனி தொகுதியாக மாற்றப்பட்டது. ராமநாதபுரம் எம்.எல்.ஏ-வாக இருந்த தங்கப்பனின் மறைவுக்குப் பிறகு, ராமநாதபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தொடர்ந்து போகலூர் ஒன்றிய சேர்மனாகவும் தேர்வானார் சுப.தங்கவேலன்.

ஒன்றுபட்ட மாவட்டமாக இருந்த ராமநாதபுரம், 85-ல் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக எம்.எஸ்.கே.சத்தியேந்திரன் இருந்து வந்தார். 86-ல் நிகழ்ந்த சத்தியேந்திரனின் திடீர் மறைவால், அந்தப் பதவி தங்கவேலன் கைக்கு வந்து சேர்ந்தது. அன்று முதல் இன்று வரை கட்சிக்குள் தன்னை மீறி யாரும் வளர்ந்துவிடாதபடி தெளிவாக அரசியல் செய்து வருகிறார். எம்.பி. தேர்தல், எம்.எல்.ஏ தேர்தல் எனப் பல முறை போட்டியிட்டும், கடலாடி தொகுதியில் 96 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் மட்டுமே வெற்றி பெற்றார். 96-ல் ராமநாதபுரம் தொகுதியில் வென்ற ரகுமான்கான் அமைச்சரானார். அதனால், அப்போது அமைச்சராக வேண்டிய சுப.தங்கவேலனின் கனவு கலைந்தது. 2006 தேர்தலில் அந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ராமநாதபுரம் தொகுதியை காங்கிரஸுக்கு தங்கவேலன் தள்ளிவிட்டார் என்ற பேச்சும் உண்டு. 96-ல் எட்டாக்கனியாகிப் போன அமைச்சர் பதவி, 2006-ல் தங்கவேலனைத் தேடி வந்தது.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

வீட்டு வசதித் துறையும் குடிசை மாற்று வாரியத் துறையும் சுப.தங்கவேலன் வசம் ஒப்படைக்கப்பட்டன. பொதுவாக, ஒரு கேபினெட்டில் பொதுப் பணி, கூட்டுறவு, சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, சமூகநலன் ஆகிய ஆறு துறைகள் யாருக்கு வருகின்றன என்பதை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். மற்றவர்களுக்கு ஏக்கத்தை அதிகமாகக் கிளப்பும் துறைகள் இவை. அப்படிப்பட்ட வீட்டு வசதித் துறையை சுப.தங்கவேலனுக்கு முதல்வர் கருணாநிதி கொடுத்ததே, அவரது அரசியல் அனுபவத்துக்குத் தரப்பட்ட மரியாதைதான். ஆனால், இந்தத் துறையைச் சமாளிக்க தங்கவேலன் கஷ்டப்பட்டார். அரசியல் அனுபவம் என்பது வேறு, நிர்வாகத் திறமை என்பது வேறு என்பதைச் சில நாட்களில் புரிந்துகொண்டார். மேலும், 'கை அரிப்பெடுத்த சில சக்திகள்', தங்களது பைக்குள் இந்த வாரியத்தைக் கொண்டுபோகத் துடித்தபோதும், அமைச்சரால் எதுவும் செய்ய முடியவில்லை. தன் பங்குக்கு போர்டு மீட்டிங்குகளை மட்டுமே நடத்த முடிந்தது. சின்ன அஜெண்டாவாக இருந்தாலும், மூன்று மணி நேரத்துக்குக் குறையாமல், மீட்டிங் நடத்தி நோகடிக்க ஆரம்பித்தார் என்று அதிகாரிகள் மட்டத்தில் வருத்தங்கள். 'ஐயையோ! மந்திரி ரூமுக்குள்ள போயிடாதீங்க. அறுத்திடுவாரு' என்று கிண்டல்கள் கிளம்பின. பத்திரிகையாளர்கள் போன் செய்தால் 'அஞ்சு நிமிஷம் கழிச்சுக் கூப்பிடுங்க' என்றுசொல்லி விட்டு, அடுத்து அந்த நம்பரைப் பார்த்து எடுக்காதவர்கள் அதிகம் இருக்கும் நேரத்தில், எப்போது தொடர்புகொண்டாலும் போனில் விளக்கம் சொல்லக்கூடிய மனிதராக தங்கவேலன் இருந்தார்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

இப்படிப்பட்ட சூழலில் தனியாருக்கும் வீட்டு வசதி வாரியத்துக்கும் நிலம் தொடர்பான வழக்கு ஒன்று வந்தது. இதில் வாரியத்துக்குப் பாதகமாகத் தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அமைச்சர் முடிவெடுத்தார். ஆனால், தனியாருக்கு விட்டுத்தர அதிகாரம் பொருந்திய தரப்பில் இருந்து இவருக்கு நெருக்கடி கிளம்பியது. அதைத் திட்டவட்டமாக மறுத்தார் அமைச்சர். 'இந்த மாதிரி முடிவெடுத்து, வருங்காலத்தில் நான் கோர்ட்டுக்கு அலைய முடியாது' என்று கமென்ட் அடித்தார். அடுத்த நாளே வீட்டு வசதித் துறை இவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, குடிசை மாற்று வாரியத் துறை மட்டுமே மிஞ்சியது. அதிகார எல்லை மிகமிகக் குறைந்த பதவி என்பதால், தான் உண்டு, தனது வேலைகள் உண்டு என்று தங்கவேலன் இருக்கிறார். அவரை யாரும் கண்டுகொள்வது இல்லை, அவரும் யாரையும் கண்டுகொள்வது இல்லை!

ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று வரை தங்கவேலன் அசைக்க முடியாத சிங்கம்தான். அழகிரி அணி கட்சிக்குள் உருவானபோது, ராமநாதபுரத்திலும் அழகிரி ஆதரவாளர்கள் உருவானார்கள். அவர்கள், மாவட்டச் செயலாளர் பதவிக்கு சுப.தங்கவேலனை எதிர்த்துக் களம் இறங்கினர். ஆனாலும், தனது முரட்டுத்தனத்தைப் பயன்படுத்தி, அழகிரி ஆட்களை விரட்டியடித்து தானே மாவட்டச் செயலாளராகத் தேர்வானார். தனக்கு எதிராக யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாகக் கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார். சமீபத்தில் நடந்த எம்.ஏ.சேக் இல்லத் திருமணம் இதற்கு ஓர் உதாரணம். கட்சியில் முக்கியமானவராக இருந்தாலும், சேக் முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது என்பதில் தங்கவேலன் குறியாக இருப்பார். இதனால், அழகிரி பக்கம் தாவினார் சேக். அவரது இல்லத் திருமணத்துக்கு அழகிரி வந்தார். இதைத் தெரிந்துகொண்ட தங்கவேலன், தஞ்சை விழாவுக்குப் போய்விட்டார். அது மட்டும் அல்ல; 'வேறு யாரும் அங்கு போகக் கூடாது' என்று நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டதாகவும் தகவல். அழகிரியாகவே ஆனாலும் தனது எல்லையில் தன்னிடம் முன்னரே சொல்லிக்கொள்ளாமல் வரக் கூடாது என்பதில் இவர் காட்டிய முரட்டுத்தனத்தைப் பலரும் மெச்சுகிறார்கள்.

'கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் மனிதருக்கு உதாரணமாகத் திகழ்பவர் சுப.தங்கவேலன்' என்பது தொகுதிவாசிகள் கொடுக்கும் சான்றிதழ்! தேர்தல் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடன், பசையுள்ள பார்ட்டியைத் தனது ஏ.டி.எம்-ஆக வைத்துக்கொள்வாராம். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, பொறியியல் கல்லூரி தாளாளர் ஒருவருக்கு ராமநாதபுரம் தொகுதியில் ஸீட் வாங்கித் தருவதாக உறுதி அளித்திருந்தார். இதனை நம்பிய அந்த நபரும், கட்சியின் மாவட்ட அலுவலகத்துக்கான வாடகை, தனது கல்லூரியில் ஆண்டு தோறும் சில இடங்கள் ஒதுக்கீடு, சொகுசு கார் என எக்கச்சக்கமாக செலவழித்தார். ஆனால், அதற்குப் பயன் இல்லாமல், தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இன்னொரு ஏ.டி.எம். ஆகச் சிக்கினார் தற்போதைய எம்.பி-யான ரித்தீஷ். மாவட்டத்தில் கூட்டங்கள் நடத்துவது, அமைச்சர்களை வரவேற்று போர்டுகள், போஸ்டர்கள்வைப்பது, நலத் திட்ட உதவிகள் வழங்குவது என அனைத்துக்குமான தொகையும் ரித்தீஷிடம் இருந்தே எடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், தங்கவேலன் மீது நம்பிக்கை இழந்த ரித்தீஷ், அழகிரியை நாடினார். அவரது உதவியால் ஸீட் வாங்கினார். இதனால், தேர்தல் நேரங்களில் தனக்கு சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று இவர் மீதே ரித்தீஷ் புகார் சொன்னார். ஆனால், அழகிரியின் எச்சரிக்கைக்குப் பின்னரே, முழுதாக தங்கவேலன் வேண்டா வெறுப்பாகக் களம் இறங்கினார். தேர்தல் வெற்றிக்குப் பின்னரும், இவர்கள் இருவருக்குமான ஊடல் இருந்து வந்தது. ஆனால், சமீப காலமாக இருவரும் இணைந்து வலம் வருவதற்கான காரணம் புரியவில்லை. ஆனால், ராமநாதபுரத்தில் புதிதாக ஒரு ஏ.டி.எம்-மை உருவாக்கிவிட்டாராம். அவர்தான் சமீபத்திய கட்சி விழாக்களுக்கான கஜானா!

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

'தலைமை பீடத்தில்... குடும்ப அரசியல்' என்று விமர்சிப்பவர்கள், தங்கவேலனின் அரசியலைப் பாருங்கள்... சுப.தங்கவேலன் அமைச்சராகவும் மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். அவரது இரண்டாவது மகன் சுப.த.சம்பத், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர். அடுத்த மகன் இளமாறன், மாவட்டப் பிரதிநிதி (இவரது மனைவி மேகலா கடந்த முறை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்), அடுத்த மகன் திவாகர், நயினார் கோயில் ஒன்றிய சேர்மன் மற்றும் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். இளைய மகன் செந்தில், பரமக்குடி நகர் இளைஞர் அணிச் செயலாளர் பதவியை அலங்கரிக்கிறார். மகன்களில் ஒருவர், சென்னையில் ஒரு புரோக்கரிடம் சிக்கிக்கொண்டார். அந்த புரோக்கரோ அமைச்சரின் லெட்டர் பேடை மொத்தமாகப் பறித்துச் சென்று, தன்னுடைய இஷ்டத்துக்குப் பறக்கவிட... பல மாதங்களுக்குப் பின்புதான் இது அமைச்சருக்கே தெரிய வந்தது. கடைசியில் ஆளைத் தூக்கி விட்டாலும், அந்த லெட்டர் பேடைவைத்து அந்த புரோக்கர் சம்பாதித்த தொகை அதிகம். ராமநாதபுரம் மாவட்டக் கூட்டுறவு வங்கிக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று மதுரையில் இருக்கிறது. பல கோடி மதிப்புடைய இதனை அ.தி.மு.க. ஆட்சியின்போது, அந்தக் கட்சியினர் குறைந்த விலை கொடுத்து அபகரிக்க நினைத்தனர். இதனை நீதிமன்றத் துக்குச் சென்று தடுத்து நிறுத்திய பெருமையும், காலங்காலமாக தண்ணி இல்லாக் காடாக இருந்த ராமநாதபுரத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கருணாநிதி கொண்டு வரத் துணை இருந்த பெருமையும் தங்கவேலனுக்கு உண்டு.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

தங்கவேலனைப்பற்றி ஒரு கதை உண்டு. உண்மையோ, பொய்யோ கேட்க சுவாரஸ்யமாக இருந்தது. 'கட்சிக்குள் ஒவ்வொரு முறையும் எழும் பிரச்னைகள் குறித்து தலைமைக்குப் புகார் போகும். தலைமையும் தங்கவேலனை விசாரணைக்கு அழைக்கும். விசாரணைக்குச் செல்லும்போதே கையில் மூக்குப்பொடியை வைத்திருப்பார். அறைக்குள் நுழையும் முன் அதில் சிறிது எடுத்து கண்களுக்குள் செலுத்திக்கொள்வார். விசாரணை நடக்கும்போதே தங்கவேலனின் கண்களில் கண்ணீர் பெருக் கெடுக்கும். தலைமையும் சீனியரின் கண்ணீருக் குக் கரிசனம் காட்டிவிடும். இப்படியேதான் போய்க்கொண்டு இருக்கிறது தங்கவேலன் நிலை' என்று சொல்கிறார்கள்.

இதைப் படிக்கும்போது உங்களுக்கு அழுகை வருகிறதா... சிரிப்பு வருகிறதா?

                            
        
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு