Published:Updated:

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

பொங்கலூரார் என்று கொங்கு தமிழில் தொண்டர்களால் அழைக்கப்படுகிறார். 'வாய்யா பெங்களூரார்!' என்று தமிழக முதல்வரால் கிண்டலாக அடையாளப்படுத்தப்படுகிறார். அந்த அளவுக்கு மாநில எல்லைகளைத் தாண்டி தனது வர்த்தக எல்லைகளை விரிவுபடுத்தியவர் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி. பருத்தி பூத்ததும் தைத்ததைப்போல வெண்மையான சட்டை, அதற்குப் போட்டி போடும் அப்பாவித்தன மான சிரிப்பு, காந்தமாகப் பழகுவதும் கரன்சியாக உருகுவதும் இவருக்குக் கை வந்த கலைகள். இன்று அவருக்கு எங்கெல்லாம் சொத்துபத்துக்கள் இருக்கின் றன என்பது முழுமையாக நமக்குத் தெரியாது. ஆனால், அவருக்கே தெரியாது என்பதுதான் உண்மை!

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

"இன்றைய தி.மு.க-வில் அதிக நிலபுலன்களுக்குச் சொந்தக்காரர்களை விரல்விட்டு எண்ணினால், டாப்-10 பட்டியலில் இவரும் இருப்பார்" என்கிறார்கள். ஈரோடு மாவட்டம் செம்மே கவுண்டம் பாளையத்தில் இவர் பிறந்த வீடு மிகச் சாதாரண மானது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூரில் கல்லூரிப் படிப்பு. பி.எஸ்ஸி., விலங்கியல் பட்டம். அப்போது தி.மு.க. நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் அரசியலில் நுழைந்தார். இதில் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் ஆனதால் கருணாநிதியின் கவனத்தைப் பெற்றார். எம்.ஜி.ஆரின் அறிமுகமும் கிடைத்தது. "ஏ பழனிச்சாமி... எங்க ரெண்டு பேர்ல யாரு ரொம்ப கலரு. நானா... இந்தம்மாவா?" என்று ஜெயலலிதாவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஜாலியாகப் பேசும் அளவுக்கு எம்.ஜி.ஆரிடம் நெருக்கம். பிறகு, குண்டடம் யூனியன் சேர்மன் ஆனது மூலமாகப் பதவி நாற்காலியைத் தொட்டுப் பார்த்தவருக்கு, படிப் படியாக ஏறுமுகம். 1971 பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் முழு ஆதரவு மற்றும் கருணாநிதியின் ஆசீர்வாதத்துடன் பொங்கலூர் தொகுதியின் வேட்பாளர் ஆனார். அந்தத் தொகுதியில் நெடு நாளாகக் கோலோச்சிக் கொண்டு இருந்த காங்கிரஸ் புள்ளியான சேனாபதிக் கவுண்டரை எதிர்த்து இவர் களம்இறங்கி யதைக்கண்டு அதிராதவர் கிடையாது. சேனாபதிக் கவுண்டரே, "பழனிச்சாமி, நீ சின்னப் பையன். இதெல்லாம் சரிப்படாது... விலகிக்கோ!" என்றுநேரடி யாக பேசிப்பார்த்தும் மயங்காதவர். பதிலடியாக, அவரது சமையலறை வரை சென்று வாக்கு கேட்டு அதிரவைத்தார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று அந்த அதிர்ச்சியை இரட்டிப்பாக்கினார். தி.மு.க-வில் ஏற்கெனவே இன்னொரு பழனிச்சாமி பிரபலமாக இருந்ததால், அடையாளத்துக்காகத் தொகுதியின் பெயரையும் இணைத்துக்கொண்டு 'பொங்கலூர்' பழனிச்சாமி ஆனதாகத் தகவல்.

பொங்கலூராரின் பொறுப்பு, வளர்ச்சியைப் பார்த்த பெரும்பணக்காரர் குமாரசாமிக் கவுண்டர் தனது மகள் விஜயலட்சுமியை இவருக்குத் திருமணம் செய்துவைத்தார். 1973-ல் எம்.ஜி.ஆர். தி.மு.க-வை விட்டுப் பிரிந்தபோது, 'பின் செல்வோர்' பட்டியலில் இவரையும் வைத்திருந்தார் கருணாநிதி. ஆனால், அவரது சந்தேகம் பொய்த்தது. 'பழனிச்சாமி வந்துடுய்யா!' என்று எம்.ஜி.ஆரே அழைத்தபோது, "உங்க மேல எனக்கு அதிக பாசம் உண்டு. ஆனா, எனக்கு அரசியல் தலைவர்னா அது கருணாநிதிதான்!" என்றார் பட்டென. பிறகு, மிசா காலத்தில் ஒரு மாதம் சிறை வாசம் இருந்தார். பிறகு, சுல்தான்பேட்டை ஒன்றியச் செயலாளராக ஆனார். அரசியலில் இருந்தாலும் எப்போதும் அவருக்கு இருந்தது தொழிலதிபர் கனவுதான். சிமென்ட் கம்பெனி, தியேட்டர்கள், ஒயின் ஷாப், சேரன் ஃபிலிம்ஸ் என்று இவர் தொடாத தொழிலே கிடையாது. கைபட்ட தொழிலில் எல்லாம் கொள்ளை லாபம், மார்ஜின் லாபம் என்று பொருளாதாரரீதியாக அழுத்தமாகக் காலூன்றினார்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

பிறகு, புறநகரில் இருந்து மெள்ளத் தன் கவனத்தை கோவை மாநகரம் நோக்கித் திருப்பிய பொங்கலூரார், மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியைக் குறிவைத்தார். கோவை மாவட்ட தி.மு.க-வில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மு.கண்ணப்பனை எதிர்த்துக் காய் நகர்த்தியபோது, தொடக்கத்தில் தோல்விதான் மிஞ்சியது. பிறகு, வைகோவின் பின்னால் கண்ணப்பன் தாவியதன் மூலம், பொங்கலூராருக்கு கோவை மாவட்ட தி.மு.க-வில் இடம் கிடைத்தது. ஆனால், சி.டி.தண்ட பாணியைச் சமாளிக்கச் சிரமப்பட்டார். கண்ணப் பன் இழப்பால் ஆட்டம் கண்ட கோவை தி.மு.க- வைத் தூக்கி நிறுத்த பொங்கலூரார் பேய்த்தனமாக உழைத்ததை யாரும் மறக்க மாட்டார்கள். அதிலும் தொழிலில் சம்பாதித்த பணத்தைக் கட்சி நிகழ்வுகளுக்காக பொங்கலூரார் கொண்டுவந்து கொட்டியதைப் புருவத்தை உயர்த்திக் கவனித்தது தலைமை. 'கோடி கொடுத்து கொடியைக் காப்பாற்றிய பழனிச்சாமி!' என்று முரசொலியில் நெகிழ்ந்து எழுதிய கருணாநிதி, 1996-ல் பழனிச்சாமி கையில் முதன்முறையாக அமைச்சர் பதவியை வழங்கினார். வனம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் பதவியை ஏற்றார்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

அமைச்சரான ஜோரில் தனது தொகுதிக்குள் பழனிச்சாமி பண்ணாத அதிரடி கிடையாது. இதனால் மக்கள் மத்தியில் கவனிக்கப்பட்டார். ஆனால், சிக்கல் வீட்டுக்குள்ளேயே இருந்தது. பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரிக்கு இந்தி நடிகர்கள் வரை பழக்கம் இருந்தது. அஜய்தேவ்கனின் பட ஷூட்டிங் ஒன்று ஊட்டியில் நடந்தபோது, ஷூட்டிங்குக்காக 'கலர் பாம்'களைப் பயன்படுத்த நினைத்திருக்கிறார்கள். வனத் துறை தன் அப்பாவின் கையில் இருக்கும் தைரியத்தில் பாரி, 'நடத்துங்க பார்த்துக்கலாம்' என்றாராம். ஷூட்டிங் டீம் வைத்த குண்டு, நீலகிரி மலை ஏரியாவில் ஏக அதிர்வை உண்டாக்க, விவகாரம் முதல்வர் காது களை அடைந்தது. விளைவு, அதிரடியாகப் பதவி பறிபோனது பழனிச்சாமிக்கு. பல நாட்களாகியும் கருணாநிதியின் மனம் இறங்குவதாகத் தெரியவில்லை. இந்த நேரத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியின் கு.செல்லமுத்துவும் கோவை செழியனும் கருணா நிதியிடம் போராடி முறையிட்டதால் மீண்டும் மந்திரி சபைக்குள் இடம் கிடைத்தது.

தொடர்ந்து கோவை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து வரும் பழனிச்சாமிக்கு என்று ஓர் அதிர்ஷ்டம் உண்டு. பொதுவாக, ஆளுங்கட்சியாக இருக்கும்போதுதான், வெகுவாகச் சம்பாதிப்பார்கள். ஆனால், பொங்கலூராரோ எதிர்க்கட்சியாக இருக்கும்போதும்கூடத் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார். இப்படித்தான் 2001-ல் தி.மு.க. தோற்று எதிர்க் கட்சி வரிசையில் இருந்தபோது பெங்களூரில் பல ஏக்கர் நிலம் வாங்கினார் பொங்கலூரார். அந்த ஏரியா மண்ணில் இரும்புத் தாது பிசினஸ் பிக்-அப் ஆகி, கோடிக்கணக்கில் குவிய ஆரம்பித்தது. அவருக்கு வலது கையாக அவரது மனைவியும், இடது கையாக அவரது தம்பி அர்ஜுனனின் மகன் முத்துக்குமாரவேலுவும் இருந்தார்கள். தொழில், அரசியல் என்று ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கு வரும் நல்லது கெட்டதுகளைப் பகிர்ந்துகொள்வதும், ஆலோசனை கேட்பதும் இந்த இருவரிடமும்தான். ஆனால், 2004-ம் வருடம் கரூர் அருகே நடந்த சாலை விபத்தில் இவர்கள் இருவரும் அகால மரணம் அடைய, ரொம்பவே நொடிந்துபோனார் பொங்கலூரார். அந்த வருத்தம் அவரைவிட்டு இம்மியளவும் அகலவில்லை.

2006 தேர்தலில் கோவை கிழக்குத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட பொங்கலூராருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய அவரது சொந்த மகளான இந்துவும், தம்பி அர்ஜுனனின் மகளான வித்யாவும் களமிறங்கி வீடுவீடாக ஏறியிறங்கிய விஷயம் கருணாநிதி வரை சென்றது. அந்தத் தேர்தலில் கோவை வட்டாரத்தில் தி.மு.க. கடும் சரிவைச் சந்தித்தாலும் பொங்கலூரார் மட்டும் தப்பித்தார். தனியரு மனிதனாக ஜெயித்து வந்தவருக்கு மந்திரி பதவிதானே கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கருணாநிதி மறுத்தார். 'இந்த மாவட்டத்தில் மற்றவர்கள் யாராவது ஜெயித்து வந்துவிட்டால், அவர்களுக்கு மந்திரி பதவி போய்விடும் என்பதற்காகவே அவர்களைத் தோற்கடிக்க முயற்சித்தார்' என்று இவர் மீது தலைமை கோபப்பட்டுத்தான் அமைச்சரவையில் இவரை இணைக்கவில்லை என்று கோவை தி.மு.க-வினர் காரணம் சொன்னார்கள். ஆற்காட்டாரில் ஆரம்பித்து அனைவரின் காலையும் பிடித்தார். கருணாநிதி மனம் மாறவே இல்லை. அளவுக்கு மீறி ஆற்காட்டார் ஆதரவு வீணை வாசித்ததைப் பார்த்த கருணாநிதி, "அப்படின்னா உன்னிடம் இருக்கிற ஊரகத் தொழில் துறையை பழனிச்சாமிக்குக் கொடுத்து டுய்யா!" என்று போட்டாரே ஒரு போடு! பழனிச்சாமி மந்திரி பதவியைப் பெற்றது இப்படித்தான். பிற்பாடு, கீதாஜீவனின் வசம் இருந்த கால்நடைத்துறை யும் இவருக்கு மாற்றப் பட்டது.

பொங்கலூராரின் ப்ளஸ் அவரது பவ்யம். அதையடுத்து கருணாநிதி குடும்பத்துடன் வைத்துள்ள நெருக்கம். கனிமொழியுடன்தான் முதலில் நட்பு ஏற்பட்டது. மந்திரியின் மனைவி விஜயலட்சுமியைத் தனது தாய்க்கு இணையாக கனிமொழி மதித்தார். இப்பவும் கோவைக்கு கனிமொழி வந்தால், குறைந்தது ஏதோ ஒரு நேரச் சாப்பாடு பொங்கலூராரின் வீட்டில்தான். கருணாநிதியின் மகள் செல்வி, முழுமையாக பெங்களூர் வாசியாக இருந்ததால் இருவருக்கும் பிசினஸ் தொடர்புகள் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இவையெல்லாம் அவரை வளர்க்கப் பயன்படும். ஆனால், கட்சியை வளர்த்துவிடுமா என்ன? 'செம்மொழி மாநாட்டைப்போல இனி எத்தனை மாநாடு போட் டாலும் கோவை தி.மு.க-வை வளர்ப்பது கஷ்டம்' என்று முக்கி யப் பிரமுகர்களே வருத்தப்படும் அளவுக்குத்தான் நிலைமை. மாநாட்டு வரவேற்புக் குழுவில் இவர் இருந்தாலும், தள்ளியே வைக்கப்பட்டு இருந்தார். ஆர வாரம் இல்லாமல்தான் வலம் வந்தார். அந்த அளவுக்கு அவர் மீதான கோபம் இன்னும் வடியா மல் இருக்கிறதாம். எனவே, அரசியலில் வாரிசை உருவாக்கி விட்டு, அடுத்த தேர்தலில்அமைதி யாகிவிட நினைத்திருக்கிறார்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

கட்சியில் கோவை மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பிலும், கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டல சேர்மனாகவும் இருக்கிறார் மகன் பைந்தமிழ் பாரி. அவருடன் ரேஸில் நிற்பது அமைச்சரின் மருமகனான டாக்டர் கோகுல்.

"அரசாங்கம் தொழில் தொடங்கினால்கூட உன்னிடம் தான் நிலம் வாங்க வேண்டுமா?" என்று ஆட்சி மேலிடத்தவரே கேட்கும் அளவுக்கு கொங்கு மண்ணை வசப்படுத்தி வருவதாக எதிர் அணியினர் குற்றம் சாட்டுகிறார்கள். அ.தி.மு.க. மேலிடத்துக்கு நெருக்கமான இரண்டு பெரும் பணமுதலைகளை இந்தப் பக்கமாக இழுத்து வந்தது இவரது சாதனையாகச் சொல்லப்படுகிறது. செம்மொழி மாநாட்டைச் சிறப்பாக நடத்திய கருணாநிதியை இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒரே நாளில் பாராட்டும் அளவுக் குச் சகோதர யுத்தம் கொங்கு மண்டலத்தில் நடக்கிறது. இவ்வளவையும் தாண்டி துரைக்கு, துறை விஷயங்களைக் கவனிக்க இருக்கும் நேரம் குறைவுதான். தமிழகத்தில் 11 இடங்களில் புதிய தொழில்பேட்டைகள் தொடங்கியதும் இன்னும் 10 இடங்களில் தொடங்கத் திட்ட மிட்டு இருப்பதும்தான் ஆறுதல் தகவல். நலிந்த நிறுவனங்களைப் புனரமைப்பு செய்ய ஆண்டு தோறும் பல நூறு கோடிகள் ஒதுக்கீடு செய்வதையும் வரவேற் கத்தான் வேண்டும். ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக வீழ்ச்சி அடைந்த சிறு, குறுந்தொழில்களை மீட்க நீண்ட கால முனைப்புத் திட்டங் கள் போடப்படவில்லை. இதற் காகக் கொண்டுவரப்பட்ட புதிய சட்டமும் தொழில் முனைவோர் களால் வரவேற்பைப் பெறவும் இல்லை. கால்நடைத் துறையைப் பொறுத்தவரை, கால்நடை வளம் நாளுக்கு நாள் குறைந்தே வருகிறது. மரபணு மாற்றத்தால் காங்கேயம் காளை முதல் பல் வேறு கால்நடைகள் அழிந்து வருவது குறித்து நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகள் எவ்வளவு கத்தினாலும் அரசாங் கத்தின் காதில் விழவில்லை. தீவனங்களின் விலை அதிகரிப் பைக் கண்டித்து மாடுகளைச் சாலையில் நிறுத்திப் போராட்டம் நடத்தினார்கள். அப்போதும் தீர்வு இல்லை. இரண்டு மாடுகள் வைத்திருந்தாலே குடும்பத்தைக் கவலை இல்லாமல் கரையேற்றி விடலாம் என்ற காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. அதாவது,சிறு தொழிலும் உழவுடன் தொடர்பு டைய கால்நடையும் ஒரு காலத் தில் நம்முடைய பொருளா தாரத்தை வளப்படுத்தியவை. ஆனால், இன்று அவை இரண் டுமே தள்ளாட்டத்தில்.

'நீங்களும் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான்' என்பதை அமைச்சருக்கு யாராவது ஞாபகப்படுத்த வேண்டும்!

                            
        
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு