பிரீமியம் ஸ்டோரி
எட்எட்டு!
எட்எட்டு!
எட்எட்டு!
விகடன் டீம்
எட்எட்டு!

வாங்கிய பொருள்

மோனிகா தொகுப்பாளர்.

எட்எட்டு!

"என் கணவர் ஷாமின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் பரிசு கொடுக்கலாம்னு ஒரு பிளாட்டினம் மோதிரம் வாங்கினேன். பிறந்த நாள் அன்னிக்குக் கொடுத்தா அவர் பெருசா கண்டுக்கலை. 'பிளாட்டினத்துக்கு ஏன் இவ்ளோ காசு செலவழிச்சே? அதுக்குப் பதிலா உனக்குப் பிடிச்சது எதுனா வாங்கியிருக்கலாம்'னு ரொம்ப ஸீன் போட்டார். நான் விடுவேனா? கையோடு அந்த பிளாட்டினம் மோதிரத்தைக் கடையில் திருப்பிக் கொடுத்துட்டு எனக்கு ஒரு தங்கக் கொலுசு எடுத்துக்கிட்டேன். இப்ப வீட்டுக்குள்ள சலக்சலக்குனு தேவதை உலா வந்துட்டு இருக்கேன். அவரோட அடுத்த பிறந்த நாளுக்கு பிளாட்டினம் செயின் பார்த்து வெச்சிருக்கேனே!"

சென்ற இடம்

பாலபாரதி, எம்.எல்.ஏ.

எட்எட்டு!

"எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ-க்களுடன் உத்தப்புரம் போயிருந்தோம். செம்மொழி மாநாடு நடத்தி பெருமைப்படும் தமிழக அரசால், இன்னமும் தன் சொந்த மக்களின் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமையை நீக்க முடியவில்லை. உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் ஒரு மாட்டுவண்டி செல்லும் அளவுக்கே சுவர் இடிக்கப்பட்டு இருக்கிறது. மற்றபடி முழுச் சுவரும் அரசுக்கு சவால் விட்டபடி சாதித் திமிருடன் அப்படியேதான் நிற்கிறது. இடிக்கப்பட்ட சிறு இடத்தின் வழியேகூட தலித் மக்களால் போய்வர முடியவில்லை. ஆனால், போலீஸ் அதிகாரிகள் 'அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. யார் வேண்டுமானாலும் போகலாம்' என்றார்கள். 'அப்படியானால், இப்போது அழைத்துச் செல்லுங்கள்' என்றதும், சர்க்கஸ் காட்டுவதுபோல ஒரு ஆட்டோவில் நான்கு தலித் பெண்களை உட்கார வைத்து ஒரு ரவுண்ட் போய் வந்து 'அதான் போயாச்சுல்ல... கிளம்புங்க' என்கிறார்கள்!"

கேட்ட இசை

சுதா ரகுநாதன் கர்னாடக இசைக் கலைஞர்.

எட்எட்டு!

"எப்பவும் பயணங்களில் என் ஐ-பாட் பாடிட்டே இருக்கும். அப்படி சமீபத்தில் நான் கேட்டு ரசித்த இசை, என் குரு எம்.எல்.வசந்தகுமாரி அம்மா பாடிய ஓர் ஆலாபனை. கமனஷ்ரம என்ற ராகத்தில் அமைந்த அந்தப் பாடல் இசைக் கலைஞர்கள் ஒவ்வொருத்தருக்கும் பாடம். இன்னொண்ணு, விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் ஜூனியர்ல அல்கான்னு ஒரு பொண்ணு 'கொஞ்சும் சலங்கை' பாட்டைப் பாடினா. அது இன்னமும் என் நெஞ்சிலேயே நிற்குது. ஜானகி அம்மா அந்தப் பாட்டைப் பாடினதுபோலவே அவ்வளவு கச்சிதமா அந்தக் குழந்தை பாடினா. இவளுக்குத்தான் பரிசு கொடுக்கணும்னு என்னோட ஃபேஸ்புக்லகூட எழுதிஇருந்தேன். அதேபோல அவதான் ஜெயிச்சா!"

படித்த புத்தகம்

ஏ.சற்குணம்,திரைப்பட இயக்குநர்.

எட்எட்டு!

"வேல ராமமூர்த்தியின் 'கூட்டாஞ்சோறு' வாசித்தேன். திருடுவதைத் தவிர வேறு தொழிலே தெரியாத ஒரு கூட்டம். பகலில் வீட்டுப் பெண்கள் வேவு பார்த்துட்டு வர, இரவில் ஆண்கள் போய் திருடிட்டு வருவாங்க. நிறையத் திருடினாலும் திருடிய பொருட்களின் மதிப்புத் தெரியாமல் வியாபாரி கள்கிட்ட இழந்துடுவாங்க. அந்த இனத்தில் இருந்து ஓர் ஆண் குழந்தை காணாமல்போய், அவன் வெள்ளைக்காரர்களிடம் வளர்கிறான். ஒரு போலீஸ்காரனா அவன் ஊருக்குத் திரும்பி, தன் மக்கள்கிட்ட திருடிப் பொழைக்கக் கூடாதுன்னு சொல்றான். 'நம்ம புள்ள சொல்லுதே'ன்னு திருடுவதை விட்டுட்டாலும் அவங்களால இருப்புக்கொள்ள முடியலை. கடைசியா அவனே தன் மக்களுக்கு ஷூட்டிங் ஆர்டர் தர வேண்டிய நிலைமை. ஒரு புத்தகம் படிக்கிற மாதிரி இல்லாம விறுவிறுப்பான சினிமா போலவே இருந்துச்சு. வசனம் முதற்கொண்டு என் மனசுல நிற்கும் நாவல் அது!"

சந்தித்த நபர்

பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளர்.

எட்எட்டு!

"சமீபத்தில் ஒரு ஷூட்டிங்குக்காக தாய்லாந்து போயிருந்தப்போ, 'ஆங்பாக்', 'தி புரொடெக்டர்' போன்ற படங்களில் நடிச்ச மார்ஷியல் ஆர்ட் சூப்பர் ஸ்டார் டோனி ஜாவைச் சந்திச்சேன். பார்க்க அப்படியே புரூஸ் லீ மாதிரியே இருக்கார். அவர்கிட்ட அறிமுகப்படுத்திக் கிட்டேன். சில டிப்ஸ்கள் தந்து, 'நல்லா பண்ணுங்க'னு வாழ்த்தி அனுப்பினார். படத்துலதான் பொறி பறக்கும் சண்டை எல்லாம். நேர்ல அவ்ளோ சாஃப்ட்!"

கலந்துகொண்ட நிகழ்ச்சி

மா.சுப்பிரமணியன் சென்னை நகர மேயர்.

எட்எட்டு!

"இந்தியாவிலேயே முன் மாதிரியாக தசைத் திறன் குறைந்த குழந்தைகளுக்கு எனக் கடந்த வருடம் சென்னையில் ஒரு பள்ளி திறக்கப்பட்டது. அந்தக் குழந்தைகள் பார்வைக்கு இயல்பாகத்தான் இருப்பார் கள். ஆனால், நடந்தாலே கீழே விழுந்து எலும்பு முறிந்துவிடும். வண்டியிலோ, பஸ்ஸிலோ ஏற முடியாது. சென்னையில் இப்படிப்பட்ட 350 குழந்தைகள் கண்டு அறியப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 15 பேர் இப்போது பள்ளியில் படிக்கின்றனர். இவர்களைப் பள்ளிக்கு அழைத்து வர, லிஃப்ட் வசதிகொண்ட 17 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு பேருந்தை சாய் நவநீதம் குப்புசாமி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் வழங்கினார்கள். அந்தப் பேருந்துக்கான சாவியை முதல்வர் கையால் பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டது சமீப நெகிழ்வு!"

பாதித்த செய்தி

புனிதபாண்டியன் பத்திரிகையாளர்.

எட்எட்டு!

"விழுப்புரம் மாவட்டம் காங்கியனூரில் தலித்துகள் கோயிலில் நுழைய அனுமதி இல்லை. இதற்காக சி.பி.எம். கட்சியின் குடியாத்தம்தொகுதி தலித் எம்.எல்.ஏ-வான ஜி.லதா போராட்டம் நடத்திய போது, போலீஸார் பூட்ஸ் காலால் அவரது வயிற்றில் மிதித்தனர். கர்ப்பப்பையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத் உத்தப்புரத்துக்கு வந்தார். அவரை ஊருக்குள் நுழையவிடாமல் தடுத்த காவல் துறை, அவரைக் காவல் நிலையத்தில் அமர வைத்தனர். உடனே, முதல்அமைச்சர் தலையிட்டு அவரை உத்தப்புரத்துக்குள் அனுமதிக்குமாறு உத்தரவிட்டதோடு, பிருந்தா காரத்தைத் தடுத்தது யார் என்று விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் கமிட்டி ஒன்றையும் போட்டார். ஒரே கட்சியைச் சேர்ந்த ஒரு தலித் எம்.எல்.ஏ. தீண்டாமைக்கு எதிராகச் செயல் பட்டால் கர்ப்பைப் பையில் ரத்தம் வரும் அளவுக்கு அடிக்கிறார்கள், மேல்தட்டுத் தலைவருக்கு பூர்ண கும்ப மரியாதை. தீண்டாமை என்பது சமூகத் தளத்தில் மட்டும் இல்லை; அரசியல் தளத்திலும் இருக்கிறது!"

பார்த்த படம்

லீனா மணிமேகலை கவிஞர்.

எட்எட்டு!

"பெத்ரோ அல்மடோவர் (Pedro Almodóvar) தன் படைப்புகளால் ஒவ்வொரு முறையும் என்னைக் கலங்கடிக்கும் ஸ்பானிய இயக்குநர். குறிப்பாக, அவரின் பெண் கதாபாத்திரங்கள் அசாத்தியமானவை. அவரது Volver மறக்க முடியாத படம். காலங்கள் மயங்கி, தெளிந்து, பிணைந்து ஓர் ஓவியம்போல மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையையும் எழுதிச் செல்கிறது. பெனெலோப் க்ரூஸின் வெறிபிடித்த காதலியாக நான் மாறியதும் இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான். அழிவையும் உயிராற்றலாக மாற்றிவிடும் பெண்ணின் அசராத வேட்கையை அல்மடோவர் மிகச் சிறப்பாகச் சித்திரித்துஇருக்கிறார். அவரின் All about my Mother, Talk to Her, Law of Desire போன்ற படங்களும் மனதின் புதிய வாசல்களைத் திறக்க வல்லவை!"

எட்எட்டு!
எட்எட்டு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு