பிரீமியம் ஸ்டோரி

மகா அனுபவம்!
மகா அனுபவம்!
மகா அனுபவம்!
எஸ்.கலீல்ராஜா படம்:கே.ராஜசேகரன்
மகா அனுபவம்!

'ஸவானுபவா'ன்னா 'அனுபவங்களை நீங்களே உணர்தல்'னு அர்த்தம். இசை ஒரு மகா

அனுபவம். மாணவர்களுக்கு நல்ல இசையை அறிமுகப் படுத்தி, மகா அனுபவத்தைக் கொடுப்பதுதான் இந்த ஸ்வானுபவா!"- இனிமையாகப் பேசுகிறார் பாடகர் டி.எம்.கிருஷ்ணா.

பாம்பே ஜெயஸ்ரீயோடு சேர்ந்து டி.எம்.கிருஷ்ணா நடத்தி வரும் இந்த இசை விழாவுக்கு வயது மூன்று. 2008-ம் ஆண்டு கர்னாடக இசை விழாவாக ஆரம்பித்த ஸ்வானுபவா, இந்த வருடம் ஹிந்துஸ்தானி, ஒடிசி, தப்பாட்டம், தமிழ் நாடகங்கள், தமிழ் சினிமா என்று பரந்து விரிந்திருக்கிறது.

"கச்சேரிகளில் மாணவர்கள் பங்கேற்பதோ, கலந்து கொள்வதோ கிடையாது. அவர்களுக்குக் கலை ஆர்வம் ஏற்படுத்த நானும் பாம்பே ஜெயஸ்ரீயும் முடிவு செய்தோம். எங்களோட 'மாத்ருகா' அமைப்போடு, ஒய்.ஏ.சி.எம். (youth association for classical music) அமைப்பு கைகோக்க முன்வந்தாங்க. 'கர்னாடக சங்கீதத்தோடு நாட்டுப்புற இசையில் இருந்து கஜல் வரை அத்தனை கலைகளையும் அறிமுகப்படுத்துவோம்'னு ஒய்.ஏ.சி.எம். அமைப்பைச் சேர்ந்த ரித்விக் ராஜாவும் ரம்யாவும் சொன்னாங்க. நல்ல ஐடியாதானே? இந்த வருஷம் களத்தில் இறங்கிட்டோம். ஆகஸ்ட் 2 முதல் 7-ம் தேதி வரை கலாஷேத்ரா, செட்டிநாடு ஹரிஸ்ரீ வித்யாலயம், கே.கே.நகர் பத்மாசேஷாத்ரி, மியூஸிக் அகாடமி, வித்யா மந்திர் என ஐந்து இடங்களில் நடக்க இருக்கிறது 'ஸ்வானுபவா'.

மகா அனுபவம்!

இங்கே, கலை... பாடல், நடனம், நாடகம், சினிமான்னு பலவிதமா பிரிஞ்சிருக்கு. பாடலோடு சேர்ந்து நடனம், நாடகம், சினிமாவை உள்ளே கொண்டுவந்து விட்டோம். 'சினிமாவில் சிரிப்பு'பற்றி ஒய்.ஜி.மகேந்திரன், கிரேஸி மோகன், ஏ.ஆர்.சீனிவாசன் மூன்று பேரும் பேசுறாங்க. 'சினிமாவில் இசை'பற்றி ராஜீவ் மேனனும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் வகுப்பு எடுக்கிறாங்க. கேரளாவில் இருந்து சோட்டானிக்கர சுபாஷ் நாராயண மாரர் குழு பஞ்ச வாத்தியம் வாசிக்கிறாங்க. கூத்துப்பட்டறை நாடகம் போடுறாங்க. பாடகர் உன்னிக் கிருஷ்ணன் மாணவர்களோடு நேருக்கு நேர் பாடிக் கலந்துரையாடுகிறார்.

இந்த விழாவில் நித்யஸ்ரீ மகாதேவனும் எஸ்.சௌம்யாவும் முதன்முதலா இணைந்து பாடுறாங்க. இவர்களைத் தவிர, மல்லாடி சகோதரர்கள், வீணை காயத்ரி, பிரியா சகோதரிகள், ஹைதராபாத் சகோதரர்கள்னு தரமான இசைக் கலைஞர்கள் வர இருக்காங்க.

இதுவரைக்கும் சென்னைக்கு உள்ளேயேதான் இந்த விழா நடந்திருக்கிறது. அடுத்தடுத்த வருடங்களில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த இசைத் திருவிழாவை நடத்தும் திட்டம் இருக்கு. இந்த விழாவின் நோக்கம் ரொம்ப எளிதானது. எல்லாரும் இசைக் கலைஞர்கள் ஆகணும்னு அவசியம் இல்லை. ஆனா, எல்லாரும் நல்ல ரசிகர்கள் ஆகலாம். ஏன்னா, நல்ல ரசிகர்கள் இருக்கும்போதுதான் நல்ல படைப்புகள் வெளியே வரும்" - மலர்ந்து சிரிக்கிறார் டி.எம்.கிருஷ்ணா.

நிகழ்ச்சிபற்றித் தொடர்புகொள்ள: new.svanubhava.blogspot.com போன்: 9940059969, 9952076583

மகா அனுபவம்!
மகா அனுபவம்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு