Published:Updated:

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

முதல்வர் கருணாநிதிக்குப் பக்கத் திலேயே இருந்து கிச்சுகிச்சு மூட்டும் கிலுகிலுப்பைக்காரர் துரைமுருகன். முகத்தில் மூன்று நான்கு கோட்டிங் பவுடர் அப்பி... அத்தர் மணக்க... சந்தன நிறச் சட்டை மினுமினுக்க... தொங்கு கன்னங் களும் குறும்புச் சிரிப்புமாக வளையவரும் காட்பாடிக் கதாநாயகன். மேடை ஏறியதும் நினைத்தால் சிரிக்கவைப்பார்... அழ வைப்பார். அடுத்தவரை நக்கல் பண்ணு வதில் அலாதியான கற்பனைத் திறன் உண்டு துரைமுருகனுக்கு!

ஒன்று, தலையாட்டுபவர்கள் இருக்க வேண்டும். அல்லது, தன்னைப் பாராட்டிக் குஷிப்படுத்துபவர்கள் இருக்க வேண்டும் என்று கருணாநிதி நினைப்பார். முன்னதில் முக்கியமானவர் ஆற்காடு வீராசாமி. அடுத்ததில் பொருத்தமானவர் துரை முருகன். இரண்டு பேரும் வேலூர் மாவட்டத்தில் இருந்து முளைத்தது தற்செயலான தாகத்தான் இருக்கும்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

காட்பாடியை அடுத்துள்ள காங்குப்பம் என்ற கிராமத்தில் அரசியல் பின்னணியோ, பரம்பரைச் செல்வாக்கோ இல்லாத ஒரு குடும்பத்தில் முருகன் பிறந்தார். அப்பா பெயர் துரைசாமி. பிற்காலத்தில் செல் வாக்கு உயர்ந்தபோது, துரையும் ஒட்டிக்கொண்டு துரைமுருகன் ஆனார். பள்ளிப் படிப்பைக் கூட முடிக்க முடியாத அளவுக்கு வறுமை தாண்டவம் ஆடியதைப் பார்த்த சென்னக்கேசவலு என்ற தமிழாசிரியர், முருனைத் தன் வீட்டிலேயே தங்க வைத்துப் படிக்கவைத்ததாக வரலாறு சொல்கிறார்கள். அதன் நினைவாகத்தான் காட்பாடி கிளித்தான் பட்டறைப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பல கோடிகள் மதிப்பில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியும் ஏலகிரியில் மருத்துவக் கல்லூரியும் அமைத்திருக்கிறார் துரைமுருகன்.

இம்முறை தி.மு.க. ஆட்சி மலர்ந்த சில மாதங்களில் தான் இந்தப் பொறியியல் கல்லூரிக்கான கால்கோள் விழாக்கள் நடந்தன. அதைக் கேள்விப்பட்ட முதல்வர் கருணாநிதி ஒருநாள் கேபினெட்டில் இப்படி ஆரம்பித்தார், "நாம ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி எ.வ.வேலு மட்டும்தான்

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

இன்ஜினீயரிங் காலேஜ் வெச்சிருந்தார். ஆனா, இன்னிக்கு நிறையப் பேரு காலேஜ் ஆரம்பிக்கிறதாக் கேள்விப்பட்டேன். எல்லோரும் அதை அப்படியே கட்சி பேர்ல எழுதிவெச்சிடுங்க" என்று குண்டைத் தூக்கிப் போட்டார். பலருக்கும் வேர்க்க ஆரம்பித்தது. இந்த வார்த்தைகளை முடிக்கும்போது தலைவரின் பார்வை தன்னை நோக்கியதோ என்ற பிரமை துரைமுருகனுக்கு. அதற்குப் பிறகு, கருணாநிதி பேசியது எதுவும் இவரது காதில் ஏறவில்லை. பஞ்சு அடைத்ததுபோல பஞ்சராகிப்போனார். கேபினெட் முடிந்து வெளியே வந்ததும் இன்னோர் அமைச்சர், 'தலைவர் சொன்னதைக் கேட்டுப் பயந்துட்டீங்களா? அவரு மூணு நாள்ல இதை மறந்துடுவாரு. நீங்கபாட்டுக்கு கன்ஸ்ட்ரக்ஷனைஆரம் பிங்க' என்றாராம். தொடங்கப்பட்டது கல்லூரி.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

கருணாநிதி தன்னை எப்போதும் தடை இல்லாமல் அருகில் வைத்துக்கொள்கிறார், தான் எது சொன்னாலும் சிரிக்கிறார் என்ற தைரியத்தில், அதிகப்படியான உரிமையை எடுத்துக்கொண்டு மூக்குடை பட்டவர் துரைமுருகன். அவருக்கு ஆறு முறை எம்.எல்.ஏ. வாய்ப்பு தரப்பட்டு இருக்கிறது. மூன்று தடவை அமைச்சராக்கி அழகு பார்க்கப்பட்டார். மணி விழா வயதைத் தொடும்வரை மாணவர் அணியில் அங்கம் வகிக்க அனுமதிக்கப்பட்டார். ஏதாவது ஓர் உயர்வு கொடுத்தாக வேண்டுமே என்பதற்காக, 'தலைமைக் கழக முதன்மைச் செயலாளர்' என்ற பதவி புதிதாகச் செய்யப்பட்டது. அதற்கும் ஆற்காட்டாரால் சிக்கல் வந்தபோது, துணைப் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். இப்படிக் கடந்த 30 ஆண்டுகளாகக் கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகளை இறுக்கமாக துரைமுருகன் கைப்பற்றிக்கொண்டு இருக்க எது காரணம்? கோ.சி.மணியின் தைரியமா, எத்தனை லட்சம் பேரையும் இரண்டு வாரத்தில் திரட்டிக் காட்டும் வீரபாண்டியாரின் ஆற்றலா, கிளைக் கழகம் முதல் மாவட்டக் கழகம் வரை அனைத்து நிர்வாகிகளையும் மொத்தமாகப் போட்டு அடைகாக்கும் சாத்தூர் ராமச்சந்திரனின் ஈர்ப்பா... இவை எதுவும் இல்லை. காலையும் மாலையும் கருணாநிதியின் நிழல் விழும் இடத்தை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொண்டது மட்டும்தான்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

எந்தத் தொண்டனுக்கும் உதவியது இல்லை. மாவட்டச் செயலாளர்கள்கூட பவ்யமாகத்தான் எதையும் கேட்க வேண்டும். எம்.எல்.ஏ-க்கள் துணிந்து கேட்டுவிட முடியாது. சக மந்திரிகள்கூட எதிர்பார்த்ததைச் சுலபமாகப் பெற்றுவிட முடியாது. ஆனாலும், துரைமுருகனின் நாற்காலியின் நான்கு கால்களையும் கெட்டியாகப் பிடித்துக் காப்பாற்றி வருவது கருணாநிதி மட்டும்தான். எத்தனை முறை அழைத்தும் எம்.ஜி.ஆருடன் அவர் போகவில்லை என்ற பெருமிதம்கூட கருணாநிதிக்கு அன்பை அதிகப்படுத்தியிருக்கலாம். கல்லூரிக் காலத்தில் படிக்க வசதியற்ற துரைமுருகனுக்குப் பணம் கொடுத்து ஆறுதலாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவரே தனிக் கட்சி ஆரம்பித்தபோது, 'நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால், என்னுடைய தலைவர் கலைஞர்தான்' என்று நின்றார் துரைமுருகன். இன்று, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போதும் கருணாநிதியைச் சக்கர நாற்காலியில் சந்திக்கவைத்திருப்பது இந்த மாறாத குணம்தான்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

எம்.ஜி.ஆருக்கு எதிராக தமிழக சட்டசபையில் இவரும் ரகுமான்கான், க.சுப்பு ஆகிய மூவரும் 'இடி மின்னல் மழை'யாகப் பொழிந்த காலங்கள் சட்டசபை விவாதங்களைக் கவனிப்பவர்களுக்கு இனிக்கும் விஷயங்கள். வைகோ பிரிந்த காலத்தில், கருணாநிதிக்குத் தெம்பூட்டியவர்களில் இவரும் ஒருவர். விழுப்புரம் கூட்டம் பேசப் போன கருணாநிதி, துரைமுருகனை அவரது கோட்டூர்புரம் வீட்டுக்கு வந்து வாசலில் காரை நிறுத்தி அழைத்துப் போன சம்பவம் எல்லாம் உண்டு.

ஆனால், அவை எல்லாம் பழம் பெருமைகள். பொதுப் பணித் துறையை கருணாநிதி பறிப்பார். தனது வாழ்க்கையில் பள்ளம் வர வழைப்பார் என்று துரைமுருகன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மூன்றெழுத்துத் தொழிலதிபர் ஒருவரின் மின் தயாரிப்பு நிலையத் துக்கும் இன்னொரு தொழிலதிபர் நடத்தி வந்த கெமிக்கல் ஆலைக் கும் ஏற்பட்ட பிரச்னையில் மூன்றெழுத்துக்காரர் பக்கமாக இவர் நின்றது கருணாநிதிக்கு அதிர்ச்சி.கேபினெட்டில் இருந்தே தூக்கிவிடத்தான் கருணாநிதி நினைத்தார். அதைத் தடுத்து சட்டத் துறை மட்டும் வைத்திருக் கட்டும் என்று ஆலோசனை சொன்னவர் ஸ்டாலின். அதனால் தான் இன்றைய கூட்டங்களில் 'ஸ்டாலின் புராணம்' அதிகமாக பாடப்படும். அழகிரிக்கு அனுசரணையானவராகவும் காட்டிக் கொள்வார். கனிமொழி, இவருடன் மனம்விட்டுப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். முரசொலி செல்வத்துடனும் நெருக்கமான நட்பு உண்டு. அண்ணியார் தயாளு மேடைக்குக் கீழே இருந்தால், இவர் அவரைப்பற்றியும் புகழ்வார். பாதிக்கப்படும் காலத்தில் இதில் எதுவாவது கை கொடுக்கும் என்பது துரைமுருகனது நம்பிக்கை.

தனக்கு நிரந்தரமானது ஜெகத்ரட்சகனின் நட்பு மட்டும்தான் என்பதில் அசாத்தியமான நம்பிக்கைகொண்டவர் துரைமுருகன். இவரைத் தத்து எடுத்தவர்போல அனைத்தையும் வழங்கிக் கவனித் துக்கொள்கிறார் ஜெகத். இருவரை யும் தினமும் நட்சத்திர ஹோட் டலில் பார்க்கலாம். நேரம் காலம் பார்க்காமல் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டு இருப்பார்கள். காலையில் கட்சியைக் கலைத்து, மதியம் தி.மு.க-வில் இணைந்து, மறு நாள் வேட்பாளர் ஆகி, அடுத்த சில வாரங்களில் எம்.பி -யாக வென்று, மறு நாளே மந்திரியாகி... ஜெகத் அடித்த அத்தனை பல்டிகளும் சாத்தியமானது துரைமுருகனால்தான். ஆழ்வார்கள் ஆய்வு மையம், சங்கத் தமிழ்ப் பேரவை என்று ஜெகத் புரவலராக இருக்கும் அமைப்புகளில் புகழ் பாடும் புலவராக துரைமுருகன் இருக்கிறார். இன்று அவர் மனதுக்கு ஆறுதலைத் தருவது இது மட்டும்தான்.

மற்றபடி மகன் கதிர் ஆனந்த், பெரும் தொழிலதிபராக வளர்ந்துவிட்டார். கல்லூரிகள் இருக்கின்றன. வண்டலூர் பகுதியில் மசாலா ஃபேக்டரியும், அருவி என்ற மினரல் வாட்டர் கம்பெனி யும் இருக்கின்றன. வெளிநாட்டுத் தொழில் தொடர்புகள் உண்டு. இடங்கள், நிலபுலன்கள் ஏராளம். துரைமுருகனின் ஜெராக்ஸ் போலவே உருவ ஒற்றுமையுடன் இருக்கும் அவரது தம்பி துரை சிங்காரம்தான், வேலூர் மாவட்டத்தைக் கவனிக்கும் நிழல் மந்திரி. பொதுப்பணித் துறை கான்ட்ராக்டர்களிடம் கேட்டால், தம்பியின் கதையைப் புலம்பலாகச் சொல்லி மலைப்பார்கள். மணல் அள்ளுதல் வரம்பு இல்லாமல் மாறியதைக் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்காரர்களே கேள்விகளால் துளைத்தார்கள். 'மணல் கொள்ளை நடக்கவே இல்லை' என்று சட்டசபையில் சத்தியம் செய்தார். 'என்னுடன் வாருங்கள்... நான் காட்டுகிறேன்' என்று சொல்லி அழைத்தவர், கோபமே வராத சுதர்சனம். மணல் லாரி உரிமையாளர் கூட்டமைப்பு, இது தொடர்பான விவரங்களை மொத்தமாகக் கணக்கிட்டு துணை முதல்வர் வசம் கொடுத்தது. தலைமைச் செயலகம் கட்டுவதைத் தனது வாழ்நாள் சாதனையாகச் சொல்லிக்கொள்ள அவர் நினைக்கும்போது, துறை பறிபோனது. தமிழகத்தின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கும் காவிரி, முல்லை பெரியாறு, கிருஷ்ணா, பாலாறு பிரச்னைகளும் அப்படியே இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளின் பெயரையும் இவர் ஒப்பிப்பார். அது மேஜை தட்டப் பயன்படலாம்... ஆனால், பயிர் விளையுமா?

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

இன்று சட்டம் மட்டுமே மிஞ்சி உள்ளது. சட்டக் கல்லூரியில் கொடுமையான தாக்குதல் நடந்தபோது, அமைச்சர் அந்தப் பக்கமே வரவில்லை. மூன்று நாட்கள் சென்னை உயர் நீதிமன்றம் முற்றுகையிடப்பட்டபோதும் அமைச்சரை அந்தப் பக்கம் காணவில்லை. சில நீதிமன்றக் கட்டடங்களைக் கட்டி திறப்பு விழா நடத்தும்போது மட்டும் இவரைக் குத்துவிளக்கு ஏற்றும் இடத்தில் பார்க்கலாம். "தமிழ்நாட்டில் சில பேர் வெளிநாட்டுப் பிரச்னையை மையப்படுத்தி மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசி வருகின்றனர். பேச்சுரிமை என்ற போர்வையில் அவர்கள் பேசுகின்றனர். இருப்பினும், அத்தகைய நபர்களை அடக்க புதிய சட்டத்தைக் கொண்டுவருவோம்" என்று சட்ட அமைச்சர் அறிவித்த அதே நாளில்தான் இலங்கைத் தூதரகத்துக்கு எதிராக தி.மு.க. மீனவர் அணி ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டு இருந்தது. அந்த அளவுக்குப் பழைய 'இடி'முருகன், 'பய'முருகனாக மாறிப்போனார். புறநானூறை வெறுமனே மனப்பாடம் செய்தால், புறமுதுகுதானே காட்டியாக வேண்டும்!

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

ஒரு காலம் இருந்தது... வேலூர் மாவட்டத்துக்கு யார் செயலாளராக இருந்தாலும் அவர்களுக்கு அறிவாலயத்தின் காரிடார் வரை வரத்தான் செல்வாக்கு உண்டு. மா.செ-வை வெளியே நிறுத்திவிட்டு, மற்ற அனைத்தையும் இவர் கவனித்துக்கொள்வார். ஆனால், ராணிப்பேட்டை காந்தியின் வருகைக்குப் பிறகு தலைகீழ் ஆனது. இவர் அகிம்சை காந்தி அல்ல; ஆக்ரோஷ காந்தி. அதுவும் ஸ்டாலினின் காந்தி. இன்று மாவட்டத்தில் அவர் வைத்ததுதான் சட்டம். எனவே, துரைமுருகன் பழைய ஆட்களின் பெயரைச் சொல்லி, அவர் மாதிரி உண்டா, இவர் மாதிரி உண்டா என்று பழங்கதைகளை அவிழ்த்து வருகிறார். 'நான் தி.மு.க. தவிர, எந்த நிழலிலும் ஒதுங்கியது இல்லை' என்று சொல் லிக்கொள்வது துரைமுருகனின் பெருமைதான். ஆனால், அவரது நிழலில் எவரும் ஒதுங்காதது பெருமையா என்ன?

                            
        
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு