அண்ணன் அழகிரியாக இருந்தாலும், தம்பி ஸ்டாலினாக இருந்தாலும், இருவருக்கும் நெருக்கமானவர் நேரு. இந்த இரட்டை நிலையை அழகிரி விரும்பவில்லை. எனவே, இப்போதைய மத்திய அமைச்சரான நடிகர் நெப்போலியனை திருச்சியின் தளபதியாக ஆக்க விரும்புகிறார் அழகிரி.
நேரு என்றால் கருணாநிதிக்கும் தனிப் பிரியம். அதை அதிகப்படுத்திக் காட்ட நேரு எடுத்த முயற்சிதான் திருச்சியில் திறக்கப்பட்ட 'கலைஞர் அறிவாலயம்'. திறப்பு விழா ரிப்பனை வெட்ட, கருண£நிதி கையில் தரப்பட்டது தங்கக் கத்தரிக்கோல். ஆனால், அது வெட்டவில்லை. இரும்புக் கத்தரிக்கோலைக் கேட்டு வாங்கினார் கருணாநிதி. அது வெட்டியது. "ஏழைகளுக்காகக் கட்டும் மாளிகையில் இரும்புக் கத்திரிக்கோல்தான் பயன்படுத்த வேண்டும்" என்றார் கருணாநிதி. அந்த அளவுக்குச் செல்வம் பெருகிய குடும்பமாக இன்றைக்கு நேரு வளர்ந்துவிட்டார். அவருக்கு இரண்டு கைகளாக இருப்பது அவரது தம்பிகள் ராமஜெயமும் ரவிச்சந்திரனும்.
ராமஜெயம், திருச்சியில் இருக்கிறார். மணல் மற்றும் கிரானைட் தொழிலில் மத்தியத் தமிழ்நாட்டில் முக்கியப் பிரமுகர். இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி வாங்கிய விவகாரத்தில் இவரை இணைத்து அறிக்கை மூலமாக ஜெயலலிதா குற்றம் சாட்டும் அளவுக்கு ராமஜெயத்தின் வளர்ச்சி இருந்தது. கனிமொழி, கருணாநிதிக்கு நெருக்கமானவராகவும் கட்சி வட்டாரம் இவரைச் சொல்கிறது. பெரம்பலூர் எம்.பி. தொகுதியை ராமஜெயத்துக்கு வாங்கிக் கொடுக்க விரும்பினார். மருமகன் நெப்போலியன் மல்லுக்கு நின்றார். நெப்ஸ§க்கு கருணாநிதி வாய்ப்பு வழங்க, இன்னமும் அந்த மோதல் கனன்றுகொண்டே இருக்கிறது. தொழில், சம்பாத்தியம் என இருந்தாலும் அதைக் காப்பாற்றிக்கொள்ள ஏதாவது பதவி வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ராமஜெயம். அவரும் அவரது உறவினரான வினோத் என்பவரும்தான் நேருவின் கல்லாப் பெட்டிகள்.
அடுத்த தம்பி, என்.ரவிச்சந்திரனின் பெயரைவிட, அவர் நடத்தி வரும் ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், பல்வேறு மாநகரங்களை வளைத்து வருகிறது. சுருக்கமாக, டி.வி.ஹெச். சிறு வீடுகள் கட்டித்தரும் சிறு நிறுவனமாக வளர்ந்த இது, சமீபத்தில் வாங்கியுள்ள இடங்கள் கோடிகளைத் தாண்டியவை. 'தி பிக்கஸ்ட் டீல்' என்று ஆங்கிலப் பத்திரிகைகளே வர்ணிக்கும் இடங்கள் இதன் வசமாகி உள்ளன. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் 'தென்னிந்தியக் கட்டுமானச் சந்தையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 750 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்போகிறோம்' என்று அந்த நிறுவன அதிகாரி அறிவித்து இருக்கிறார். 750 மில்லியன் டாலர் என்பது எத்தனை கோடிகள் என்பதை உடன்பிறப்புகள் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
"சேகரிப்பதில் மட்டுமல்ல; செலவழிப்பதிலும் நேரு தேர்ந்தவர். போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களில் பெரும்பாலானவை கட்சியினர் கொடுத்த பரிந்துரைப்படி செய்து கொடுத்ததால், அவரை நிர்வாகிகளாகிய நாங்கள் யாரும் குறை சொல்வது இல்லை" என்று பொறுப்பாளர் நற்சாட்சிப் பத்திரம் படிக்கிறார்.
ஆம், நேருவின் காலத்தில், ஓட்டுநர்களாக கடந்த நான்கு ஆண்டு காலத்தில் 8 ஆயிரத்து 372 பேரும், நடத்துநர்களாக 5 ஆயிரத்து 991 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். 'தி.மு.க. உறுப்பினர் கார்டு வைத்திருப்பவர்களுக்குத்தான் வேலை தரப்பட்டது. இதில் பணம் விளையாடியது' என்று கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து புகார் சொல்லி வருகிறார்கள். புதிதாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் வாங்கப்பட்டன. "இதில் 5 ஆயிரம்தான் புதிய வழித்தடத்தில் ஓடுபவை. மற்ற பேருந்துகள் ஏற்கெனவே இருந்ததைக் கழித்துவிட்டு புதிதாக வாங்கப்பட்டவை" என்று சொல்லப்படுகிறது. 'இத்தனை பேருந்துகளை வாங்கி ஓட்டினாலும் இன்னமும் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம்? கூடுதல் வருமானம் எல்லாம் பைபாஸ் வழியாக எங்கு போகிறது?' என்று சட்டமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்ப, 'விஸ்வநாதனுக்கு இதைப்பற்றிப் பேச அருகதை இல்லை. இந்த ஆட்சியில் பயணிகள் அதிகம். அதனால், வருவாயும் அதிகம். செலவுகளும் அதிகம்' என்று லாஜிக் சொன்னார் நேரு. இது புதிய பொருளாதாரத் தத்துவமாகவே இருந்தது.
"புதிய பேருந்துகளை இயக்கியது, சொகுசுப் பேருந்துகள் மற்றும் தாழ்தளப் பேருந்துகள் வாங்கியது, வேலைவாய்ப்பை அதிகரித்தது, காலி இடங்களை நிரப்பியதுபோன்ற காரணங்களால் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குகிறது" என்று நேரு காரணம் சொன்னாலும், சாதாரணமாக 10 பேருந்துகள் வைத்திருக்கும் தனியார் முதலாளி ஆறு மாதங்களுக்குள் கொழிப்பதும், 19 ஆயிரம் பேருந்துகள் வைத்திருக்கும் நிறுவனம், நஷ்டக் கணக்கைக் காட்டிவருவதும் யதார்த்தத்தில் இடிக்கவே செய்கிறது.
மத்திய தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் இந்த நாட்டில், ஒரு நாளைக்குச் சுமார் 11 கோடி ரூபாய் பணம் போக்குவரத்துத் துறைக்கு வசூல் ஆகிறதாம். 'நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கட்டணத்தை உயர்த்தவே இல்லை' என்று தி.மு.க. அரசு சொல்கிறது. ஆனால், பொதுமக்கள் சொல்வது, 'சாதாரண பஸ்களில் கட்டணத்தை ஏத்தலை. சொகுசு, தாழ்தளம்னு சொல்லி புதுப் புது பஸ்களை விடுறாங்க. அதனால், அதிகக் கட்டணத்தைக் கொடுத்துதான் நாங்க போக வேண்டி இருக்கு' என்கிறார்கள். பஸ் கட்டணத்தையும் உயர்த்தவில்லை. பணமும் அதிகமாகச் சேருகிறது என்பது நேரு பிளானாக இருக்கிறது. (சென்னையில் சாதாரணப் பேருந்துகள் - 856, எம் சர்வீஸ் - 506, எல்.எஸ்.எஸ். 735, எக்ஸ்பிரஸ் - 243, குளிர்சாதனம்கொண்டது - 10)
|