ஆனால், இந்தக் கறார் பாலிஸி சீனாவுக்குள் எடுபடவில்லை. new.google.cn என்ற உரலியில் இயக்கப்படும் கூகுள் தளத்தில் காட்டப்படும் பதில்கள் தணிக்கை செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சீன அரசாங்கம் வலியுறுத்த, 'அப்படி எல்லாம் செய்ய முடியாது. அப்படிச் செய்துதான் ஆக வேண்டுமானால், அந்தத் தளத்தையே நடத்தத் தேவை இல்லை' என்று வீராப்பாகச் சொல்லிவிட்டு, new.google.cn தளத்துக்குச் செல்பவர்களை new.google.hk தளத்துக்குத் திருப்பிவிட்டது. (hk-ஹாங்காங்). சீனாவின் சென்சார் விதிகள் ஹாங்காங்கில் வலியுறுத்தப்படுவது இல்லை என்பதால், சீன தளத்துக்குச் செல்பவர்களை ஹாங்காங் தளத்துக்கு வரவழைத்து கட்டுப்பாடுகள் இல்லாத தேடல் பதில்களைக் கொடுக்கலாம் என்பது கூகுளின் திட்டம். புகுந்த வீட்டில் இழைக்கப்படும் அநீதியைப் பொறுக்க முடியாமல், தனிக் குடித்தனம் சென்ற மருமகளைப்போல நடந்துகொண்டது கூகுள். யாஹூ போன்ற மற்ற தளங்கள் சீனாவின் விதிகளை முதல் நாளில் இருந்து 'யெஸ் சார்' பாணியில் கடைப்பிடித்து வந்ததை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். காரணம், சீனா என்பது மிகப் பெரிய சந்தை. சீனாவின் மனித உரிமை சார்ந்த நிகழ்வுகளைப் பட்டும் படாமலும் அமெரிக்க அரசாங்கம் கண்டிக்கக் காரணம், சீனச் சந்தையின் முக்கியத்துவத்தால்தான் என்பதால், கூகுளின் நடவடிக்கை டெக் உலகத்தை மூக்கில் விரல் வைத்து ஆச்சர்யப்படவைத்தது. இதுபற்றி கூகுள் சென்ற மார்ச்சில் வெளியிட்ட அறிக்கையைப் பார்க்க இங்கே சொடுக்கவும் http://googleblog.blogspot.com/2010/03/new-approach-to-china-update.php .
இந்த அறிக்கையைத் தொடர்ந்து சீன அரசாங்கம் கூகுளுக்குக் கொடுத்த நெருக்கடி கொஞ்சநஞ்சம் இல்லை. சீனாவின் கூகுள் அலுவலக ஊழியர்கள் மிரட்டப்பட்டார்கள். (நம்மூர் ஆட்டோ ஸ்டைல் நிகழ்வுகள் பல). அதற்கெல்லாம் அசராத கூகுள், சீனா சென்ற மாதம் கொளுத்திப்போட்ட சரவெடியில் அதிர்ந்துபோனது.
|