ஒருநாள் இரவு அவளைப் பலாத்காரம் செய்திருக்கிறார். சிறுமிக்கு விவரம் தெரியாத வயது. அகதி முகாமில் அவள் கர்ப்பம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. முகாமைப் பார்வையிட வந்த பத்திரிகைக்காரர்கள் மாரியாட்டுவின் கதையை வெளிநாட்டுப் பத்திரிகைகளில் எழுதினார்கள். 'கலகக்காரர்கள் கைகளை வெட்டியதுமல்லாமல் சிறுமியைக் கர்ப்பமாக்கிவிட்டார்கள்' என்ற தலைப்பின் கீழ் அவளுடைய படத்தையும் பிரசுரித்துஇருந்தார்கள். கனடாவில் பில் என்பவர் அந்தப் படத்தைப் பார்த்து பரிதாபப்பட்டு, ஏதாவது செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தார். மாரியாட்டு, கனடா வந்து சேர்ந்ததற்கு அவர்தான் காரணம்.
''சிறு வயதில் இருந்து நிறைய இன்னல்கள் அனுபவித்துவிட்டீர்கள். நீங்கள் உங்களை ஆகக்கீழாக உணர்ந்த தருணம் எது?''
''அகதி முகாமில் இருந்தபோதுதான். காலையில் நாங்கள் கூட்டமாகப் பிச்சையெடுக்க நகரத்துக்குள் செல்வோம். சிலர், 'ஏய்ய்ய்... பிச்சைக்காரி' என்று என்னை அழைத்து பிச்சை போடுவார்கள். நான் ஓர் ஏழைக் குடும்பத்தில் இருந்துதான் வந்தேன். ஆனாலும், நாங்கள் பிச்சை எடுப்பதைக் கேவலமாக நினைத்தோம். என் கைகளை வெட்டியபோதுகூட நான் அவ்வளவு வேதனையை அனுபவித்தது கிடையாது.''
''ஆகச் சோகமான தருணம் எது?''
''அகதி முகாமில் எனக்கு ஆண் பிள்ளை பிறந்தது. நான் ஆசையாக அப்துல் என்று பெயர் சூட்டினேன். 10 மாதங்கள்தான் குழந்தை உயிர் வாழ்ந்தது. சத்தான உணவு இல்லாததால் இறந்துபோனது என்று சொன்னார்கள். நான் தற்கொலை செய்ய முயன்றேன். ஆனால், என்னைத் தடுத்துவிட்டார்கள். அந்த இழப்பு என்னால் தாங்க முடியாததாக இருந்தது.''
''கனடாவுக்கு வரும் முன்னர் உங்களுக்கு கனடாபற்றி ஏதாவது தெரியுமா?''
''ஒன்றுமே தெரியாது. அது பெரிய நாடு என்பது தெரியும். உப்புத் தூள்போல பனி பொழியும் என்று சொன்னார்கள்.''
''எந்திரக் கை பொருத்த விருப்பப்படவில்லையா?''
''எத்தனையோ தரம் கேட்டார்கள். இப்போது தேவை இல்லை. என் காரியங்களை நானே செய்கிறேன். மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பது இல்லை. சமைக்கிறேன், சாப்பிடுகிறேன், உடை மாற்றுகிறேன், தலை சீவுகிறேன், எழுதுகிறேன், கதவைப் பூட்டுகிறேன்.''
''உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?''
''படிப்பை முடித்துவிட்டு முதுகலைப் பட்டம் பெறுவது. அதுதான் என் இலக்கு.''
''அதற்குப் பிறகு?''
'நான் UNICEF -க்காக வேலை செய்கிறேன். போரினால் சீரழிந்த குழந்தைகளுக்காகவும், தாங்கள் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் தீங்கிழைத்த குழந்தைப் போராளிகளின் சீர்திருத்தத்துக்காகவும் பாடுபடுவேன். 400 சிறுவர் - சிறுமிகளின் கைகளை ஒரு காரணமும் இன்றி அவர்கள் வெட்டிக் குவித்தபோது உலகம் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தது, குரல் எழுப்பவில்லை. நான் எழுப்புவேன்.''
''இது மிகப் பெரிய பணி அல்லவா? இரண்டு கைகளும் இல்லாதது உங்களுக்கு இடைஞ்சலாக இருக்காதா?''
''அவர்கள் என் கைகளைத்தான் எடுத்தார்கள். என் குரலை எடுக்கவில்லை!''
|