காங்கிரஸ் கட்சியின் வரலாறு, சோனியாவின் புகழ், ராகுல் காந்தியின் பண்புகள் குறித்த துதி பாடும் பயிற்சி இல்லை. ஒரு தலைவன் எப்படி உருவாகிறான், கூட்டங்களை நடத்துவது எப்படி, மக்களை ஒருங்கிணைக்க எப்படிச் செயல்பட வேண்டும் என்ற தலைப்புகளில் இடைவெளி விடாமல் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில்தான் எதிர்பாராத வகையில் ராகுல் வந்து இறங்கினார்.
பயிற்சி முகாமுக்குள் ராகுல் நுழைந்ததைப் பார்த்ததும் அனைத்து உறுப்பினர்களும் உற்சாகமானார்கள். "எங்களுக்கு இது மறக்க முடியாத நாள். எங்களைப் பார்ப்பதற்காக எத்தனையோ கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள். காங்கிரஸை தமிழகத்தில் முதன்மைக் கட்சியாக மாற்றும் உங்களது லட்சியத்தை நாங்கள் நிறைவேற்றிக்காட்டுவோம்" என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் சொல்ல....
"அப்படிப்பட்ட நம்பிக்கை வந்துவிட்டதா? தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருமா?" என்ற கேள்வியுடன் தனது பேச்சைத் தொடங்கினார் ராகுல்.
"75 சதவிகிதம் பேருக்கு அப்படி நம்பிக்கை வந்துவிட்டது" என்றார் ஒருவர்.
"மற்றவர்களுக்கு அந்த நம்பிக்கை வராததற்கு என்ன காரணம்?" என்று அடுத்த கேள்வியைப் போட்டார் ராகுல்.
"இங்கு எத்தனையோ கோஷ்டிகள் இருக்கின்றன. அதுதான் காரணம்" என்று துணிச்சலாக ஒரு பதில் வந்தது.
"கோஷ்டிகளைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. கட்சிக்காக உழைக்க வந்தவர்கள் சுயநலம் பார்க்காமல் கட்சி நலத்தை மட்டும்தான் மனதில்கொண்டு செயல்படுவார்கள். அதையும் மீறிச் செயல்படும் கோஷ்டிகளை கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும். நீங்கள் காங்கிரஸை முதன்மைக் கட்சியாக மாற்ற மக்களிடம் நல்ல பெயரைச் சம்பாதியுங்கள். உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்தால், உங்களை நோக்கிப் பதவிகள் தேடி வரும். கோஷ்டிகள் சேர்த்தால், அது வராது" என்று சொல்லும்போது, ராகுலின் காது கோபத்தால் சிவந்திருக்கிறது.
"தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் உண்மையாக உழைக்கத் தயார். நாங்கள் உழைப்பது டெல்லியில் இருக்கும் உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்ற யதார்த்தமான கேள்வியை ஒருவர் கேட்டபோது, சிரித்த ராகுல், "நான் எங்கு இருந்தாலும் இங்கு என்ன நடக்கிறது என உங்களைப்பற்றிய முழுமையான அறிக்கை எனக்கு வந்துவிடும். எதுவும் எனக்குத் தெரியாது என்று மட்டும் நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் நான் அறிந்தே இருக்கிறேன். யார் இந்தக் கட்சிக்காக உழைக்கிறார்களோ, அவர்களைத்தான் அடையாளம் காட்டுவேன். இவர் மந்திரி பையன், கட்சித் தலைவரின் பேரன் என்பதற்காக யாரையும் இளைஞர் காங்கிரஸ் வளர்த்துவிடாது. என்னை நம்புங்கள்" என்று சொன்னபோது பலத்த வரவேற்பு.
|