போபால்... இந்தியாவின் துயரம்!
1984 டிசம்பர் 3-ம் தேதி மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் இயங்கிய யூனியன் கார்பைடு கெமிக்கல் தொழிற்சாலையில் இருந்து கசிந்த மீத்தைல் ஐஸோ சயனேட் என்ற விஷ வாயு சுமார் 15 ஆயிரம் உயிர்களைப் பறித்தது. 26 ஆண்டுகள் கழித்து போபால் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. யூனியன் கார்பைடின் முன்னால் இந்தியத் தலைவர் மகேந்திரா உள்பட எட்டு பேருக்கு மட்டும் இரண்டு வருடச் சிறைத் தண்டனையும் சொற்ப அபராதமும் விதித்திருக்கும் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் உடனடியாக ஜாமீனும் வழங்கிவிட்டது. போபால் மக்கள் இந்தத் தீர்ப்புக் குறித்து உச்சகட்டக் கொதிப்பில் இருக்கும் நிலையில் இதில் கவனம் செலுத்தும் சிலரிடம் பேசினோம்.
நித்யானந்த் ஜெயராமன்: "இந்தத் தீர்ப்பு நாட்டில் இதுபோன்று ஆபத்தை விளைவிக்கும் தொழிற்சாலை நடத்தும் முதலாளிகளுக்கு மிகப் பெரிய
புத்துணர்ச்சியைக் கொடுத்துஇருக்கிறது. இது திருத்த வேண்டிய தீர்ப்பு. 26 வருடங்களுக்குப் பிறகு, இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், யூனியன் கார்பைடு இயங்கிய இடத்தின் நச்சுக் கழிவுகள்கூட இன்னும் அகற்றப்படவில்லை. யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு இந்தியாவில் வியாபாரம் செய்யத் தடை இருக்கிறது. ஆனால், தனது தாய் நிறுவனமான டவ் கெமிக்கல்ஸின் பெயரால் சமீபத்தில்கூட ரிலையன்ஸுடன் ஒரு தொழில்நுட்ப வியாபாரத்தை நடத்தினார்கள். இந்தச் சட்ட விரோதத்தை அரசு கண்டுகொள்ளாமல் ஆதரிக்கவே செய்தது. ஏனென்றால், பாதிக்கப்பட்ட மக்கள் ஏதுமற்ற ஏழைகள்!"
டாக்டர் ரமேஷ்: "யூனியன் கார்பைடில் வேலை பார்த்த இந்திய அலுவலர்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்திருக்கிறது. அதுவும் இரண்டு வருடங்கள் மட்டும். முக்கியக் குற்றவாளியான யூனியன் கார்பைடு சேர்மன் வாரன் ஆண்டர்ஸன் பற்றி தீர்ப்பில் ஒரு வார்த்தையும் சொல்லப்படவில்லை. பல்லாயிரம் பேரைக் கொன்ற அந்த மனிதகுல விரோதி அமெரிக்காவில் தலைமறைவாகப் பதுங்கி இருக்கிறான். இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இந்தியா, அதற்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்று ஆண்டர் ஸனைக் காப்பாற்றியிருக்கிறது. கல்பாக்கம் அணு உலையில் கதிர்வீச்சுகளை வெளியேற்றும் PFBR (Prototype Fast Breeder Reactor) என்ற ரியாக்டர் நிறுவப்பட்டு இருக்கிறது. இது சாதா ரண உப்பு நீர் பட்டாலே வெடிக்கக்கூடியது. சுனாமியால் பாதிக்கப்பட்ட கல்பாக்கம் கடற்கரையில் அமைந்துள்ள இந்த ரியாக்டர் 2011-ல் இருந்து செயல்படப்போகிறது. இதில் சிறு பிரச்னை வந்தாலும் தலைநகரம் சுடுகாடாகும் ஆபத்து இருக்கிறது!"
|