காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எதிர்க் கட்சியாக இருந்து தனது கரகரக் குரலால் கோப வார்த்தைகளைக் கருணாநிதி உமிழ்ந்துகொண்டு இருந்த நேரம்... ஆட்சிக்கு விரோதமான வார்த்தைகளை அலேக்காகப் பிரித்து வழக்குகளைப் பாய்ச்சியது அந்நாளைய அரசு. 'அட்சரம் பிசகாமல் யாரப்பா என்னுடைய பேச்சை எழுதிக் கொடுப்பது' என்று கேட்டுத் தெரிந்துகொண்டார் கருணாநிதி. தான் அமைச்சராக ஆனதும் அந்த நபரை அழைத்து வந்து, தன் பி.ஏ-வாக நியமித்துக்கொண்டார். 40 ஆண்டுகள் கடந்த பிறகும் கோபாலபுரத்தில் எல்லாப் பிள்ளைகளையும்விட ஒழுங்கான பிள்ளையாக இருக்கும் சண்முகநாதன்தான் அவர்.
மேடையில் கருணாநிதி முழங்கிக்கொண்டு இருந்தால், குனிந்த தலை நிமிராமல் எழுதிக்கொண்டு இருப்பார் சண்முகநாதன். கருணாநிதி வீடு போய்ச் சேர்ந்து சாப்பாடு முடிப்பதற்குள் பேச்சை அடித்து முடித்து முரசொலிக்கு அனுப்பிவிடுவார். கோபாலபுரம் மாடியில் கருணாநிதி இருந்தால், தரையில் உட்கார்ந்து பழைய காலத்து பேப்பர்களை விரித்துப்போட்டு எதையாவது தேடிக்கொண்டு இருப்பார் இவர். கருணாநிதிக்கே ஏதாவது பெயர்க் குழப்பம், தேதி மறதி ஏற்பட் டால், பட்டென்று சொல்லிவிடும் ஆளாக வலம் வருகிறார் சண்முகநாதன்.
இருந்தாலும், இருவருக்கும் ஊடலும் மோதலும் எப்போதும் உண்டு. நான்கைந்து முறை சண்முகநாதனே கருணாநிதியைவிட்டு விலகியும் இருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் குணசிங், எழில் ஆகிய உதவியாளர்களை கருணாநிதி வைத்திருந்தாலும், சண்முகநாதன் இல்லாமல் அவராலும் இருக்க முடியவில்லை. 'அவர் என்னைச் சகித்துக்கொள்கிறாரா அல்லது நான் அவரைச் சகித்துக்கொள்கிறேனா?' என்ற அர்த்தத்தில் கருணாநிதியே கிண்டலடிக்கும் அளவுக்கு இந்த நட்பு அலாதியானது.
சண்முகநாதன், தன்னுடைய எல்லையை உணர்ந்தவர். யாருடனாவது கருணாநிதி பேசிக்கொண்டு இருக்கும்போது அதைக் கவனித்துச் சிரிப்பது, உள்ளே புகுந்து கருத்துச் சொல்வது போன்றவற்றைச் செய்ய மாட்டார். மனைவி, மக்களே சண்முகநாதன் வழியாகத்தான் சிலபல கருத்துக்களை அறிந்துகொள்கிறார்கள் என்ற வகையில் கருணாநிதிக்கு இணையானவராகவே உடன்பிறப்புக்களால் எதிர்கொள்ளப்படுகிறார் சண்முகநாதன்!
பூங்குன்றன் - ஜெயலலிதா!
|