''இனியும் கடல் மார்க்கமாக படகில் வந்து இன்னொரு தாக்குதலைத் தீவிரவாதிகள் நடத்த முடியும்தானே!"
''அதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவினால், மும்பையின் எந்தப் பகுதியாக இருந்தாலும் எங்கள் போலீஸார் மின்னல் வேகத்தில் எதிர்த்தாக்குதலில் இறங்கிவிடுவார்கள். கடலிலும் தரையிலும் ஒரே நேரத்தில் செல்லக்கூடிய வாகனங்களை வாங்கி இருக்கிறோம். 'க்விக் ரியாக்ட் டீம்' என்ற பெயரில் 1,500 அதிரடி வீரர்களைத் தயார்படுத்தி உள்ளேன். தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடுவதற்கான உலகத் தரப் பயிற்சியில் இருக்கிறார்கள் அவர்கள். புல்லட் புரூஃப் வாகனங்கள், மொபைல் எக்ஸ்-ரே வாகனங்கள், அதிநவீன கன்ட்ரோல் ரூம், வெடிகுண்டினைச் செயல்இழக்கச் செய்யும் பிரிவு என மும்பை போலீஸ் முன் எப்போதையும்விட பலமிக்கதாக மாற்றிய திருப்தி எனக்கு இருக்கிறது!''
''அதே சமயம் போலீஸாருக்கு மனரீதியான அவஸ்தைகளும் அதிகரித்திருப்பதைக் கவனித்துஇருக்கிறீர்களா?"
"கவனிக்காமலா? நானும் போலீஸ்காரன்தானே! டென்ஷன் இல்லாத மனநிலையில்தான், விவேகமாக, வீரமாக, ஒரு போலீஸ்காரனால் மோத முடியும். போலீஸாரின் உடல், மன நலனை அதிகரிக்க முதற்புள்ளியாக 'ஆபரேஷன் ஆரோக்கியா' என்ற பெயரில் 32 ஆயிரம் போலீஸாருக்கு தலைமுதல் கால் வரையிலான மருத்துவப் பரிசோதனையை முடித்துவிட்டேன். 25 உடற்பயிற்சிக் கூடங்களை அமைத்துவிட்டோம். காவலர்களுக்கும் எனக்கும் நேரடிப் பாலமாக இருக்கும் வகையில் 'சாம்வாடு' என்ற பெயரில் ஒரு பத்திரிகை ஆரம்பித்தேன். அதில் அவர்கள் என்னிடம் தெரிவிக்க வேண்டிய அத்தனை தகவல்களையும் கொட்டுகிறார்கள். நானும் பதில் அளிக்கிறேன். இந்த பத்திரிகை ஒவ்வொரு போலீஸ் குடும்பத்துக்கும் செல்லும்!"
"உங்கள் குடும்பத்தினர் குறித்து..."
''உஷ்ஷ்ஷ்... அது மட்டும் ரகசியம். வேலை வேறு, குடும்பம் வேறு. எனது வெற்றிக்குக் காரணம் எனது குடும்பத்தினரின் பாதுகாப்பும்தான்!"
|