திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

நோட்டீஸ் போர்டு

நோட்டீஸ் போர்டு

ரைட்டர், படங்கள்: 'ப்ரீத்தி' கார்த்திக், வீ.நாகமணி, க.தனசேகரன்
நோட்டீஸ் போர்டு
நோட்டீஸ் போர்டு
நோட்டீஸ் போர்டு்
 
நோட்டீஸ் போர்டு

மகனை மாட்டிவிட்ட தந்தை!

நோட்டீஸ் போர்டு

பெற்றோரைக் கவனிக்காமல்விடும் பிள்ளைகளைத் தண்டிக்க மத்திய அரசு ஒரு சட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டுவந்தது. தமிழ்நாட்டில் முதல் வழக்கு நாமக்கல் மாவட்டம் சூரியம்பாளையத்தில் பதிவாகி இருக்கிறது. கடந்த வாரம் நாமக்கல் கலெக்டர் சகாயத்தை, மாணிக்கம் என்ற பெரியவர் பார்க்க வந்தார். 'என் மகன் சாமிநாதன் என்னைக் கவனிக்கிறது இல்லை. ரொம்பக் கொடுமைப்படுத்துறான். அவனிடம் இருந்து என்னை நீங்கதான்யா காப்பாத்தணும்' என்று கெஞ்சினார். கலெக்டருக்கு அந்தச் சட்டம்தான் நினைவுக்கு வந்தது. உடனே, வழக்கு பதிவு செய்து நடவடிக்கைக்கு உத்தரவிட்டு இருக்கிறார்!


பெயர்க் குற்றம்!

நோட்டீஸ் போர்டு

கசிந்த கண்ணீரைத்
துடைத்துக்கொண்டே
தலைவர் சொன்னார்,
'அடிக்கடி தம்பி
அழவைக்கிறானே
பேசாமல்
இவனுக்கு
சிரிகிரி
என்று பெயர்வைத்திருக்கலாமோ?'

- டி.அருள்செழியன்


ஓல்டுஇஸ் கோல்டு!

நோட்டீஸ் போர்டு

சென்னை கன்னிமரா நூலகம் தன்னிடம் இருக்கிற பழமையான பொக்கிஷங்களைக் கடந்த வாரத்தில் கண்காட்சியாக வைத்திருந்தது. 400 ஆண்டுகளுக்கு முன் வெளியான பைபிளையும் 300 ஆண்டுகளுக்கு முன் தரங்கம்பாடி திருச்சபை சார்பில் வெளியான 'ஞானமுறைகளின் விளக்கம்' என்ற இரண்டு புத்தகங்களையும் வைத்திருந்தனர். இந்த மாதிரியான புத்தகங்களை ஷிபான் சிலிக்கன் கிளாத் மூலமாக பைண்டு செய்துவைத்திருக்கிறார்கள்.

சேகரித்துவைத்திருந்ததுகூட ஆச்சர் யம் அல்ல; அதைப் பார்க்க ஆவலுடன் பெரும் கூட்டம் திரள ஆரம்பித்ததுதான் தமிழ்நாட்டில் வித்தியாசமான அனுபவம்!


கலெக்டரின் கரன்ட் கிண்டல்!

நோட்டீஸ் போர்டு

குடியாத்தம் நேஷனல் பள்ளியில் புத்தக நாள் விழா. சிறப்பு விருந்தினராக வந்திருந்த வேலூர் கலெக்டர் ராஜேந்திரன், பள்ளிப் பிள்ளைகளைப் பார்த்து சில விடுகதைகளைப் போட்டார். அதில் ஒன்று...

'தண்ணீரில் பிறந்து, தரணியில் புகுந்து, பகலினில் பாடுகிறாள். இரவினில் ஒளிர்கிறாள். அது என்ன?' என்று கேட்டார். 'மின்சாரம்' என்று ஒரு மாணவி பதில்அளித்தார். உடனே கலெக்டர், 'மின்சாரம் இப்பவெல்லாம் எங்க ஒளிருது... பாதி நேரம் இருளுது' என்றதும் கூட்டத்தில் பலத்த கைத்தட்டல். 'உண்மையைச் சொல்லிட்டீங்க' என்று கூட்டத்தில் இருந்து ஒருவர்குரல் கொடுத்தார்!


எப்படிச் சொல்வார்கள்?

நோட்டீஸ் போர்டு

''பார்வதியம்மா வருவதுபற்றி எனக்கு ஏன் சொல்லவில்லை என்று கருணாநிதி கேட்கிறார். முத்துக்குமாரின் கருகிய சடலம் கொளத்தூரில் கிடத்தப்பட்டு தமிழ்நாட்டு இளைஞர்கள் கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தபோது, மதுரையில் மகன் பிறந்த நாளை முன்னிட்டு கிடா வெட்டி பிரியாணி போட்டுக்கொண்டு இருந்தார்கள். அன்று பட்டுப் பீதாம்பரம் அணிந்து போட்டோ வுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு இருந்த உங்களிடமா சொல்வார்கள்? தாமதமாகத் தண்ணீர் கொடுத்தான் என்பதற்காக அதை ஏற்காமல் உயிர் துறந்த கணைக்கால் இரும்பொறை வந்த இனத்தின் பெருமை பேசுகிற மாவீரனைப் பெற்ற தாய் உங்களிடம் மடிப்பிச்சை கேட்க வேண்டுமா?''

-சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் வைகோ


நண்பர்களின் பாச வழுக்கல்!

நோட்டீஸ் போர்டு

மிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனும் எழுத்தாளர் சின்னக்குத்தூசியும் இளமைக் கால நண்பர்கள். கருணாநிதிக்கு ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாட்டால் இருவரும் இன்று எதிரும் புதிரும். நெடுமாறனைத் தாக்கி முரசொலியில் குத்தூசி தொடர்ந்து பதம் பார்த்து வருகிறார். கடந்த வாரத்தில் ஒருநாள் இரவு பாத்ரூம் போன குத்தூசி, அங்கேயே வழுக்கி விழுந்துவிட்டார். லாட்ஜ் பையன்தான் கவனித்துத் தூக்கி இருக்கிறான். இதைக் கேள்விப்பட்டதும் பறந்து வந்துவிட்டார் நெடுமாறன். 'என் நண்பர்களில் நீங்க ஒருத்தர்தான் வழுக்கி விழாம இருந்தீங்க... இப்ப நீங்களும் வழுக்கிட்டீங்களே?' என்று நெடுமாறன் கிண்டலடிக்க... வலி மறந்து சிரித்தாராம் சின்னக்குத்தூசி!


நித்திரையானந்தா!

நோட்டீஸ் போர்டு

டைசியில் சிக்கிவிட்டார் நித்யானந்தா. கைதான அவர் போட்ட கண்டிஷனைப் பார்த்து போலீஸே மிரண்டு போயிருக்கிறது. எந்தச் சாப்பாடு கொடுத்தாலும், 'எனக்கு மசாலா அயிட்டம் ஆகாது, எண்ணெய் பிடிக்காது' என்று தட்டிக்கழிக்கிறார். உலர் திராட்சைகள்தான் அதிகம் சாப்பிடுகிறார். கேள்விகளுடன் அதிகாரிகள் நெருங்கினால், 'கொஞ்சம் டயர்டா இருக்கு. தூங்கப் போறேன்' என்று படுத்துவிடுகிறாராம். ஐந்து மணி நேரம் கழித்தும் எழுப்பிய பிறகுதான் எழுகிறாராம். பலே ஆசாமிதான் என்று சிரிக்கிறது போலீஸ்!


கொழும்புக் குடும்பம்!

நோட்டீஸ் போர்டு

குடும்ப அரசியல் செய்வதில் தமிழ்நாட்டுக்குச் சளைத்தது இல்லை இலங்கை. ஜனாதிபதியாக இருக்கும் மகிந்தா ராஜபக்ஷே அரசாங்கத்தின் சகல கிளைகளி லும் தனது குடும்ப உறுப்பினர்களை இணைத்துள்ளார். மகிந்தாவின் அண்ணன் சமல் ராஜபக்ஷே, நாடாளுமன்ற சபாநாயகர். தம்பி பசில் ராஜபக்ஷே, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், இன்னொரு தம்பி கோத்தபய, பாதுகாப்புச் செயலாளர், மகிந்தாவின் மகன் நமல் ராஜபக்ஷே, இப்போது எம்.பி. பதவி இல்லாமல் இருப்பது மகிந்தாவின் இன்னொரு மகன் மட்டும் தான். அவருக்கு இன்னமும் வயசு வரலையாம்!

 
நோட்டீஸ் போர்டு
நோட்டீஸ் போர்டு