Published:Updated:

மாற்றுத் திறனாளிகளின் 'மா'!

மாற்றுத் திறனாளிகளின் 'மா'!

மாற்றுத் திறனாளிகளின் 'மா'!

மாற்றுத் திறனாளிகளின் 'மா'!

Published:Updated:
மாற்றுத் திறனாளிகளின் 'மா'!  
ரீ.சிவகுமார் படங்கள் : ஆ.முத்துகுமார்
மாற்றுத் திறனாளிகளின் 'மா'!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாற்றுத் திறனாளிகளின் 'மா'!
 
.
மாற்றுத் திறனாளிகளின் 'மா'!
.
மாற்றுத் திறனாளிகளின் 'மா'!

'மா'60-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் கூட்டு முயற்சியால் உருவாகியிருக்கும் முதல் தமிழ் சினிமா!

ஒரு மாற்றுத் திறனாளியை அவரது அடையாளம் தெரியாமலே காதலிக்கிறாள் ஒரு பெண். அவர் மாற்றுத் திறனாளி என்று தெரிந்ததும் அவமானப்படுத்தி அனுப்புகிறது காதலியின் குடும்பம். தற்கொலைக்கு முயற்சிக்கும் அவரை, உலகப் போராட்டங்களின் வரலாறு சொல்லித் தேற்றுகிறார் அவரது சமூகசேவக நண்பர். தனது சக மாற்றுத் திறனாளிகளுக்காகக் களத்தில் குதித்துப் போராட, முடிவில் இந்திய அரசாங்கம் அவர்களை அங்கீகரிப்பதோடு முடிகிறது 'மா'.

மாற்றுத் திறனாளிகளின் 'மா'!

பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தை மற்றவர்கள் ஆக்கிரமிப்பது, அருவருப்பூட்டும் கழிவறைகளில் கைகளை ஊன்றியபடியே தவழ்ந்து செல்லும் மாற்றுத் திறனாளியின் அவலம், விடுதிகளில் இடம் மறுக்கப்படும் அவலம் என பல நுட்பமான பிரச்னைகளை பேசுகிறது 'மா'. படத்தின் இயக்குநர் பாத்திமா பீவி எட்டு மாதக் குழந்தையாக இருக்கும்போதே போலியோ தாக்க, அதன் பின் அவரது தாயே இடுப்பில் சுமந்து மகளைப் பள்ளியில் படிக்கவைத்திருக்கிறார். பி.காம்., பட்டதாரி பாத்திமாவுக்குப் பட்டிமன்றங்களில் பங்கேற்பது, சத்யஜித் ரே படங்கள் பார்ப்பது, ரஷ்ய நாவல்களைப் படிப்பது ஆகியவற்றில் ஆர்வம். ''என் அப்பா சிறு வயதில் நிறைய இஸ்லாமியப் பாடல்களைப் பாடுவார். அது என்னை ஈர்த்து கலையுலகத்தின் மீது ஆர்வம் வளர்த்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றேன். ஆரம்பச் சுற்றுகளில் தேர்ந்தெடுக்கப்படும் நான் இறுதியில் நிராகரிக்கப்பட்டுவிடுவேன். அதற்கு 'மேடம் உங்களுக்கு ஏற்ற ஃப்ரேம் வைக்க முடியாது' என்று காரணம் சொல்வார்கள். ஆனால், முதல் நாள் ஷூட்டிங்கின்போது நான் இயக்குநர் என்ற இடத்தில் அமர்ந்து மற்றவர்களுக்குப் ஃப்ரேம் வைத்தபோது, அடைந்த மகிழ்ச்சியை அல்லாவால் மட்டுமே அறிய முடியும்'' என்கிறார் நெகிழ்ச்சியோடு.

மாற்றுத் திறனாளிகளின் 'மா'!

படத்தின் நாயகனான தீபக், திருநெல்வேலிக்காரர். சிறு வயதில் போலியாவால் பாதிக்கப்பட்ட தீபக்கை அவரது தந்தை பள்ளியில் சேர்க்கவே விரும்பவில்லை. அவரது தாய் வள்ளி, தனது மோதிரத்தை விற்று அவரைப் படிக்க வைத்திருக்கிறார். தொண்டுள்ளம் கொண்டவர்களின் உதவியால் லயோலா கல்லூரியில் முதுகலை - சமூகசேவை முடித்து, லண்டனில் சைக்கோதெரபியும் படித்து முடித்திருக்கிறார். அமெரிக்காவில் ஒகோயா மாகாண சட்டமன்றத்தில் மாற்றுத் திறனாளிகள் சார்பாக உரை நிகழ்த்தி இந்தியாவுக்குப் பெருமையும் சேர்த்திருக்கும் தீபக், இப்போது தமிழ்நாடு ஊனமுற்றோர் சங்கங்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர்.

இசையமைப்பாளர் கிடியோன் கார்த்திக்குக்கு 11 வயதில் பார்வை பறிபோய்விட்டது. இரண்டு வயதில் கார்த்திக்கின் தந்தை இறந்துபோக, 'தந்தை இறந்த விஷயத்தை மகனிடம் சொல்ல வேண்டாம்' என்று அவரது தாய் மறைத்துவிட்டார். இன்று வரை தந்தையின் புகைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்புகூட கார்த்திக்குக்குக் கிடைக்கவில்லை. அவரது இசையில் பாடல் பாடிய சந்தானலட்சுமி, அவரது கணவர் இருவருமே பார்வையற்றவர்கள். 'மனதில் உறுதி வேண்டும்' என்னும் பாரதியின் பாடலை சந்தானலட்சுமி பாடிப் பதிவாகிக்கொண்டு இருந்த அன்று அவரது குழந்தையின் கண்களையும் புற்றுநோய் தாக்கி, பார்வை பறிபோனது காலத்தின் கொடூர விளையாட்டு.

படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.ராவ், தமிழக அரசின் செய்தி ஒளிபரப்புத் துறை புகைப்படக்காரராக பணிபுரிகிறார். ஒரு பேருந்து விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்டாலும், இன்னமும் மன உறுதியுடன் இருப்பது அவரது பலம். உதவி இயக்குநராகப் பங்கேற்றதோடு, நடிக்கவும் செய்த அருணாதேவி, அமெரிக்கத் துணைத் தூதரகத்தால் வாஷிங்டன் நகரில் நடக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான கருத்தரங்கில் 'விசிட்டிங் லீடராக'ப் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார். விரைவில் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் சந்திக்கவிருக்கிறார். தேவி என்னும் ஒரு கையை இழந்த பெண்தான் படத்தின் ஆடை வடிவமைப்பாளர். ஒப்பனையாளர் தவமணிக்குக் கால்கள் கிடையாது. ஒரு பாடல் எழுதிய இளங்கோவுக்குக் கால் ஊனம். கூடவே, ஹீமோபீலியா என்னும் ரத்தம் உறையாத நோயால் பாதிக்கப்பட்டவர். எல்லாவற்றையும்விட ஆச்சர்யமானது இந்தப் படத்தில் அவர்களுக்கான டப்பிங்குகளை அவர்களே பேசியிருக்கிறார்கள் பார்வையற்றவர்கள். திரையில் உதடு அசைவுகள் அத்தனை கச்சிதம்!

இந்த மாற்றுத் திறனாளிகளுக்குப் பக்கபலமாக இருப்பவர் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பணிபுரிந்த மதன் கேப்ரியல். ''உயிரின் முதல் சொல் 'மா'. மாற்றுத் திறனாளிகளின் வலிகளையும் பிரச்னைகளையும் உலகம் உணர வேண்டும். 'எங்களைப் புரிந்துகொள்ளுங்கள், எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்பதே. இப்போது மாற்றுத் திறனாளிகளின் நலனில் அக்கறை செலுத்தும் முதல்வர் கலைஞருக்கு, படத்தைப் பார்க்க வரும்படி கடிதம் எழுதியிருக்கிறோம். எங்கள் பக்கம் அவர் கருணை திரும்பும் என்று காத்திருக்கிறோம்'' என்கிறார்.

மாற்றுத் திறனாளிகளின் புதிய முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 
மாற்றுத் திறனாளிகளின் 'மா'!
மாற்றுத் திறனாளிகளின் 'மா'!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism