Published:Updated:

இன்னமும் தேவையா இட ஒதுக்கீடு ?

இன்னமும் தேவையா இட ஒதுக்கீடு ?


. ப.திருமாவேலன் ஓவியம்: ஹரன்
இன்னமும் தேவையா இட ஒதுக்கீடு ?
இன்னமும் தேவையா இட ஒதுக்கீடு ?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்னமும் தேவையா இட ஒதுக்கீடு ?

அதிரடித் தீர்ப்புகளை அடுத்தடுத்து வழங்குவதில் சளைக்காதது கேரள உயர் நீதிமன்றம். ஆளுங்கட்சியே பந்த் நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்த அதன் தீர்ப்பு, உச்ச நீதிமன்றம் வரை எதிரொலித்தது. அதே மாதிரிதான் இப்போதும் ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. இடஒதுக்கீட்டில் கை வைத்தி ருக்கிறது கேரள ஹை கோர்ட்!

இன்னமும் தேவையா இட ஒதுக்கீடு ?

வறுமைக் கோட்டுக்குக் கீழே பொருளாதார வளர்ச்சி இல்லாமல் தளர்ந்துபோயிருக்கும் உயர் சாதியினரின் நலனுக்காக கேரள அரசாங்கம் ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் 10 சதவிகிதமும் பல்கலைக்கழகங்கள் 7.5 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று கேரள அரசு ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து கேரள முஸ்லிம் ஜமாத் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ‘உயர் சாதியினருக்கு அரசாங்கம் சலுகை கொடுப்பது தவறு. இதை ரத்துசெய்ய வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தனர். மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஆர்.பனூரமத், நீதிபதி ஏ.கே.பஷீர் அடங்கிய பெஞ்ச் பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.

இன்னமும் தேவையா இட ஒதுக்கீடு ?

"பிற்படுத்தப்பட்டோரில் மேற்படிப்புக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் முதுநிலை, உயர்நிலைப் படிப்பில் தகுதி அடிப்படையில்தான் சேர வேண்டும். இடஒதுக்கீட்டுச் சலுகையை அனுபவித்துச் செல்வது சரியானதாகாது. சாதி அடிப்படையிலான சலுகை பல ஆண்டுகளாகத் தரப்பட்டு வருகிறது. அது சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்திப் பலரை வளர்த்துள்ளது. அதையே சுகமாக அனுபவித்துத் தூங்கிவிடாமல் பிற்படுத்தப்பட்ட மக்கள் விழிக்க வேண்டிய தருணம் இது. முக்கியப் பதவிகளுக்கு இடங்களை அடைய போட்டிகளில் பங்கேற்று, அவர்கள் வெற்றி பெற வேண்டும். இப்போது வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டுச் சலுகையைப் படிப்படியாக அரசாங்கங்கள் குறைக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கும் நீதிபதிகள்,

"உயர் சாதியினருக்குச் சலுகை தரக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. உயர் சாதியினரில் நலிவடைந்தவர் துயரங்களைக் களைவதும் அரசாங்கத்தின் கடமையே! அரசுக் கல்லூரியில் ஏழை உயர் சாதி மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போனால், அவர்களால் அதிக கட்டணங்கள் வசூலிக்கும் தனியார் கல்லூரிகளில் எப்படிச் சேர முடியும்?" என்றும் நீதிபதிகள் கவலைப்பட்டுள்ளார்கள்.

50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு சலுகை வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டினை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பூர்வமாக்கினார். மத்திய அரசு அலுவலகங்களில் இச் சலுகைகள் வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அமல்படுத்தினார். அப்போதுதான் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய உயர் சாதியினருக்கும் சலுகை வழங்க வேண்டும் என்ற கோஷம் அதிகமாக ஆனது. அதைத்தான் இப்போது கேரள உயர் நீதிமன்றம் வழிமொழிந்திருக்கிறது.

இன்னமும் தேவையா இட ஒதுக்கீடு ?

தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் இதுபற்றிக் கேட்டபோது, "உயர் சாதியினரில் எல்லோரும் பணக்காரர்களாக இல்லை. அனைத்து வசதிகளையும் அனுபவிப்பவர்களாகவும் இல்லை. அதிலும் ஏழைகள் இருக்கிறார்கள். வறுமைக் கோட்டின் எல்லையில் மட்டுமல்ல, அதற்கும் கீழான நிலையில் வாழக்கூடிய மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் கல்லூரியில் சேருவதற்கு, ஒரு வேலையில் இணைவதற்குச் சலுகை கொடுப்பதால் என்ன குறைந்துவிடும் என்பதுதான் எங்கள் அபிப்ராயம்.

உயர் சாதி ஏழைகள் என்பவர்கள் எண்ணிக்கை குறைவானவர்கள், அவர்களது வாக்குகள் தங்களது வெற்றிகளைத் தீர்மானிப்பதில்லை என்று நினைத்துக் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. மற்ற சாதியினர் பெரும்பான்மை எண்ணிக்கையில் இருப்பதால் இடஒதுக்கீடு சலுகை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று காலவரையறை செய்யவும் இங்குள்ள அரசியல் கட்சிகள் வழிவிடுவதில்லை. ஓட்டு அரசியல் இருக்கும் வரை இடஒதுக்கீடு இருக்கும் என்பதுதான் நிலைமை. இடஒதுக்கீடு விஷயத்தில் அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரிவினரும் சலுகையைச் சமமாக அனுபவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டாக வேண்டும்" என்று தனது வாதங்களைத் தெளிவுபடுத்தினார்.

"கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் ஒரு சவால்" என்கிறார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன். "அரசியலமைப்புச் சட்டப்படி சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் யார் பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மண்டல் கமிஷன் உத்தரவை எதிர்த்துக் கொந்தளிப்பு கிளம்பியதால் உயர் சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று பிரதமர் நரசிம்ம ராவ் காலத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இவை இரண்டுக்கும் கட்டுப்பட்டதுதானே கேரள உயர் நீதிமன்றம்.

இன்னமும் தேவையா இட ஒதுக்கீடு ?

பொருளாதார அளவுகோலை யாரும் ஏற்க முடியாது. இன்று வசதியாக இருப்பவன் நாளை ஏழை ஆகலாம். நேற்று ஏழையாக இருந்தவன் குடும்பம் இன்று வசதியாக மாறலாம். தமிழகத்தைப் பொறுத்தவரைதான் இடஒதுக்கீடு பல ஆண்டுகளாக இருக்கிறது. இன்னும் பல மாநிலங்களில் இடஒதுக்கீடு இல்லை. மேற்கு வங்காளத்தில் 8 சதவிகிதம்தான் இருக்கிறது. எனவே, அனைத்து மாநிலங்களிலும் மொத்த இடங்களும் இடஒதுக்கீட்டால் பறிபோவதாகச் சொல்வது தவறு. 52 சதவிகிதப் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதம்தான் மண்டல் கமிஷனே இடஒதுக்கீடு வழங்கியது. எனவே, அதுவே முழுமையானதல்ல!

எதைக் காரணம் காட்டி கல்வியை மறுத்தாயோ, அதைக் காரணம் காட்டி கல்வியைக் கொடுத்துச் சமப்படுத்து என்பதுதான் சமூக நீதித் தத்துவம். விஷ முறிவு வைத்தியத்துக்கு விஷமே பயன்படுவதுபோலத்தான் இதுவும்!" என்கிறார் கலி.பூங்குன்றன்.

கேரள உயர் நீதிமன்றம் நல்லதொரு சமூக விவாதத்துக்கு விதை போட்டிருக்கிறது!

 
இன்னமும் தேவையா இட ஒதுக்கீடு ?
இன்னமும் தேவையா இட ஒதுக்கீடு ?