Published:Updated:

மித்த ஆளுகளும் குளிக்கணும்லா..!

மித்த ஆளுகளும் குளிக்கணும்லா..!

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
"மித்த ஆளுகளும் குளிக்கணும்லா..!"
மித்த ஆளுகளும் குளிக்கணும்லா..!
மித்த ஆளுகளும் குளிக்கணும்லா..!
 
பாரதிதம்பி, படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
மித்த ஆளுகளும் குளிக்கணும்லா..!
மித்த ஆளுகளும் குளிக்கணும்லா..!

னிக் கட்டியை மாவாக நுணுக்கிக் காற்றில் ஊதிவிட்டதைப் போல நீர்த் திவலைகள் ஊர் எங்கும் பரவி, குளிர் பரப்புகின்றன. "ரெண்டு நாளா நல்லா சாரலடிக்கி..!" பாவூரில் என்னிடம் சேதி சொல்கிறார் நாடார் கடை அண்ணாச்சி. தென்காசி தாண்டி வளைந்து செல்லும் சாலையில் பைக் இளைஞனை இறுக்கி, நெருக்கி அணைக்கும் பின்னிருக்கைப் பெண்ணின் பிடியில், சாரல் அதிகம் என்பதை உணர முடிகிறது. தைலக் காற் றில் சீயக்காய் மணம் அடிக்க, அருவி நீரில் பொதிகை மலையின் வாசம் கமழ பேரிரைச்சலோடு வரவேற்கிறது குற்றாலம். சீஸன் துண்டை தோளில் சுற்றி வலம்வரும் அரையாடை ஆண்களும், அருவி நீர் சொட்டும் தலையுடன் நடந்துவரும் ஈர உடை பெண்களுமாக களை கட்டிவிட்டது தமிழ்நாட்டின் குளியல் அறை!

மெயின் அருவியில் மக்கள் திரள். கட்டம்போட்ட துண்டு கட்டி நடுங்கி நடுங்கி அருவி சேர்பவர், முதல் துளி நீர் உடம்பில் பட்டதும் சிலிர்த்துச் சிரிக்கிறார். கடம்பூரில் இருந்து வேன் பிடித்துவந்து இருக்கும் கூட்டம் குளித்துக்கொண்டு இருக்க... அவர்களின் துணிகளைக் குவித்துக் காவலுக்கு நிற்பவர், 'நம்மளை செருப்பையும் காவ காக்க வெச்சுட்டானுவோ!' என்று சிரிக்கிறார். நெடிய பாறையில் இருந்து அடித்து ஊற்றும் நீருக்குள் புகுந்துவிட நெருக்கி அடிக்கிறது கூட்டம். அருவித் தண்ணீர் கொத்தாக விழும் இடத்தை அடைந்துவிட்டவர்கள், அந்த இடத்தைவிட்டு நகர்வதாக இல்லை. தலையையும் உடலையும் பாறையுடன் ஒட்டிக்கொண்டு பத்து நிமிடங்களுக்கு அப்படியே நிற்கிறார்கள். வாய்க்குள் புகும் நீரை 'ப்பூ...ப்பூ..' எனத் துப்பியபடி, கண்கள் மூடி நிற்பவர்களின் முகத்தில் தேவசுகம்.

"எம்புட்டு நேரம்தான் உள்ளேயே நிப்பிய... வெளிய வாங்கண்ணே... மித்த ஆளுகளும் குளிக்கணும்லா!", "அந்தப் பச்சத் துண்டுக்காரர்தான் கொள்ள நேரமா உள்ளேயே நிக்கிறாப்ல!" ம்ஹூம்... யார் எதைச் சொன்னாலும் உள்ளே நிற்பவர் காதில் விழப் போவது இல்லை. ஒரு கட்டத்தில் நெட்டித் தள்ளி அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது பின்னுள்ள கூட்டம். அருவியின் தடுப்புக்கு அந்தப் பக்கம் ஆண்களும், இந்தப் பக்கம் பெண்களும் குளிக்க, நடுவில் உள்ள கட்டையில் லத்தி யுடன் நிற்கிறார் டூட்டி கான்ஸ்டபிள்.

"இந்தப் பயலுவ நாம என்னத்தச் சொன்னாலும் கேக்க மாட்டங்கான். நாம மேக்கக்கூடி வெரட்டுனா இவன் தெக்கக்கூடி வந்துடுதான். ஆனா, அண் ணாச்சி... வேற எங்கயோ டூட்டி போட்டு வெயில்ல வெந்து சாகுறதைவிட, இது தேவலை. என்ன சொல்லுதீய?" அருவிச் சாரலில் துணி நனையும் குற்றாலம் டியூட்டி, போலீஸ்காரர்கள் மனம் விரும் பும் ஒன்று. உயர் அதிகாரிகள் மற்றும் சொந்தக்காரர் களுக்கு, "இப்பம் வேண்டாம். கூட்டம் மெதக்குது. நாளைக்கு வாங்களேன்!" என அவ்வப்போது லைவ் ரிப்போர்ட்டும் தருகிறார்கள். "யாரும் ஜட்டி அணிந்து குளிக்கக்கூடாது" என ஒலிபெருக்கிக் கொண்டே இருக்கிறார் இன்னொரு போலீஸ் காரர்.

மித்த ஆளுகளும் குளிக்கணும்லா..!

தஞ்சாவூரில் இருந்து வந்திருக்கும் குடும்பம் ஒன்று அருவிக் குளியலில் மருகி நிற்கிறது. "ரொம்ப நாளா பையன் குற்றாலம் போகணும்னு சொல்லிட்டு இருந்தான். 'என்னத்த பெரிய குற்றா லம்! நம்ம ஊர்ல போர்வெல் மாதிரி அது பெரிய சைஸ் போர்வெல். அதுல குளிக்கிறதுக்காக அவ்வ ளவு தூரம் போகணுமா'ன்னு நினைச்சுப்பேன். ஆனா, வந்து குளிச்சதும்தான் தெரியுது குற்றாலம், குற்றாலம்தான்! தலையில 'தொம் தொம்'னு அருவித் தண்ணீ மோதும்போது என்னாமா இருக்கு? தண்ணீ எங்கேயும் இருக்குறதுதான். ஆனா, இந்தத் தண் ணீல என்னமோ ஒரு வாசனை இருக்குது. குளிச்சு முடிச்சதும் நாள் முழுக்க உடம்பு முழுக்க மணக் குது. அதான் போக மனசே இல்லாம மூணு நாளா இங்கேயே கெடக்கோம்!" என்று ஐந்தருவியில் நின்றபடி அவர்கள் பேசியபோது நேரம் இரவு 12.30.

நல்ல சீஸன் நேரத்தில், பகலைப் போலவே இரவிலும் கூட்டம். அதிலும் ஐந்தருவி ஸ்பெஷல். ஆண்கள் பக்கம் மூன்று, பெண்கள் பக்கம் இரண்டு என ஐந்தாகப் பிரிந்து விழும் நீர்வீழ்ச்சி. மலைகளின் அடைப்பில், மரங்களின் மறைப்பில், பாறைகளின் கதகதப்பில் அந்தப் பகுதி எங்கும் நீரோற்சவம். இந்தப் பக்கம் மசாஜ். பொன்னாங்கண்ணி தைல மும் மூலிகைத் தைலமும் ஆண்களின் பீர் தொந்தி உடம்புகளை நனைக்க, உடம்பை வளைத்து நெளித்து புரட்டி எடுக்கிறார்கள் மசாஜ் மன்னர்கள். சாதா மசாஜ் 120 ரூபாய். ஸ்பெஷல் மசாஜ் 250 ரூபாய். காதிலும் நெற்றி மையத்திலும் கூட நெட்டி எடுக்கிறார்கள். ஓரமாக நின்றபடி தன் கணவனுக்கு தன் கையால் எண்ணெய் தேய்த்துவிடும் ரசனைக் கார மனைவியையும் பார்க்க முடிந்தது.

"பேப்பர்ல 'நல்ல சீஸன், தண்ணி கொட்டுது'ன்னு போட்டிருந்தாய்ங்க... நம்பி வந்தா, இம்புட்டுக்கா ஊத்துதேப்பா!" சமயங்களில் குற்றாலப் பாறைகளில் வழியும் குறுந்தண்ணீர் பார்த்துப் பலரும் அடிக்கும் கமென்ட். கேரளாவில் நல்ல மழை பெய்தால்குற்றா லத்தில் தண்ணீர் கொட்டும். இதுதான் சிம்பிள் லாஜிக்! மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழையாகக் கொட்டும் நீரைச் சேகரித்து குற்றாலத்துக்கு அருவி யாக அனுப்பிவைக்கிறது பொதிகை மலை. "நல்லா காய்ச்சல் அடிக்கும்போது கூட குற்றாலம் அருவில குளிக்கலாம். ஒண்ணும் பண்ணாது. பூரா மூலிகைத் தண்ணீர்!" என்கிறார் குற்றாலச் சாமியார்களுள் ஒருவர்.

குற்றாலம் லாட்ஜ்களின் அருகே போனாலே ஆல்கஹால் வாசம். குடிப்பதும், குளிப்பதுமே குற்றா லத்துக்கு வரும் குடிமன்னர்களின் செயல் திட்டம். பெப்ஸி பாட்டிலில் கலவை கலந்து ஒரு பெக் ஏற்றிக்கொண்டு அருவியில் தலை நனைக்கிறார்கள். போதை இறங்கியதும் அடுத்த பெக். மறுபடியும் அருவிக் குளியல். 'குடிபோதையில் குளிக்கக்கூடாது' என்பதெல்லாம் இங்கு 'செல்லாது, செல்லாது..!' சீஸன் ஆரம்பித்து முடியும் நான்கைந்து மாதங்களுக்கு மட்டும்தான் அருவிக்கரை கடைகள் எல்லாம். பாறைகள் பாட்டுப் படிக்கத் தொடங்கியபிறகு அது வனாந்திரமாகும். ஐந்தருவியில் தண்ணீர் விழுந்து எதிரில் இருக்கும் பாறைக் குழிவில் சேகரமாகி, பிறகுதான் கீழே செல்லும். குளிப்பவர்கள் அணிந் திருக்கும் நகைகள், காசுகள் சமயத்தில் மிஸ்ஸாகி வந்தால் இந்த குழிவில்தான் சிக்கும். அப்படி சிக்கிய ஏதாவது சிக்குமா என பின்னிரவு நேரங்களில் சல்லடைகொண்டு நீருக்குள் தேடுகிறார்கள் சில குற்றாலவாசிகள்.

விஸ்வரூபமாக வீழும் அருவியின் பிரமாண்டம் பார்த்து, அதில் குளிக்கத் தயங்குபவர்களுக்காகவே இருக்கிறது புலி அருவி. மெகா பாத்ரூம் ஷவர்போல இருக்கும் புலி அருவியில் ஆண்களும், பெண்களும் இணைந்தே குளிக்கிறார்கள். செண்பகா தேவி அருவி, தேனருவியில் நனைய மலையேறி நடக்கவேண்டும். பெரும்பாலும் அங்கு யாரும் போவது இல்லை. இந்த அருவிகள் எல்லா வற்றுக்கும் மேலே இருக்கும் பழத்தோட்ட அருவி, வி.ஐ.பி-க்களின் உபயோகத்துக்கு மட்டும் அனு மதிக்கப்பட்டு இருந்தது. அதுவும் சில வருடங்களுக்கு முன் மூடப்பட்டுவிட்டது.

பழைய குற்றாலம் அருவி செல்லும் வழியெங்கும் ரங்குஸ்தான், துரியன் பழங்கள் விற்கிறார்கள். கத்தரிக்காய் மாதிரியான பழமும், புளியங்காய் மாதிரியான அதன் சுவையும் புதிதாக இருக்கிறது. பழைய குற்றாலம் தண்ணீரின் குளியாட்டங்கள் செல்போன் கேமராக்களில் பதிவு செய்யப்படுகின்றன. அதில் அருவியின் பின்னணியோடு நீர் மின்னும் தேகங்கள் நாளைய செல்போன் ஸ்க்ரீன் சேவர் கள்.

மெயின் அருவி எதிரே சிறு தாவரங்களும் பூச் செடிகளும் விற்கும் பொன்னம்மாவின் சொந்த ஊர் சிவகங்கைப் பக்கம். "30 வருஷத்துக்கு முன்ன கல்யாணமான புதுசுல என் வீட்டுக்காரர் குற்றாலத்துக்கு அழைச்சுக்கிட்டு வந்தார். இந்த ஊர் எங் களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ரெண்டு பேரும் இங்கேயே தங்கிட்டோம். நர்சரி கார்டன் போட்டு இருக்கோம். இப்ப கல்யாண வயசுல ரெண்டு பிள் ளைங்க இருக்கு. இத்தனை வருஷத்துல ஏதாவது நல்லது, கெட்டதுன்னா மட்டும்தான் சிவகங்கைக்குப் போறது. மத்தபடி இந்த அருவிக்கரைதான் வாழ்க்கை. இதைவிட்டுப் போக மனசு வரலை!"

அவர் பேச்சில் அருவி வாசம். அருவிகள் பின்னோக்கி நகர, ஊர்நோக்கி நகரும் வாகனத்தில் டீசல் வாசம்!

 
மித்த ஆளுகளும் குளிக்கணும்லா..!
-
மித்த ஆளுகளும் குளிக்கணும்லா..!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு