பிரீமியம் ஸ்டோரி

24-06-09
கொலை வாரம்!
கொலை வாரம்!
கொலை வாரம்!
 
ம.கா.செந்தில்குமார்
கொலை வாரம்!
கொலை வாரம்!

து கொலை வாரம்!

தினத்தாளைத் திருப்பினாலே சதக்... சதக் சத்தம்தான்!

எல்லாக் கொலைக்கும் ஏதோ ஒரு காரணம்... முன்விரோதம், கள்ளக்காதல், பணயக் கடத்தல் என்று ஏதேதோ! உங்களுக்கு எதிரிகள்கூட இல்லாமல் இருக்கலாம். உறவினர்கள்கூட விலகி இருக்கலாம். வாகனங்கள் இன்றி நடந்து போகும் சாமானியனாக இருக்கலாம். ஆனால், நீங்களும் நானும்கூட விலை பேசிக் கொலை செய்யப்படலாம் என்று எச்சரிக்கை மணி அடிப்பது போல் கடந்த வாரக் கொலைகள் கலங்க அடிக்கின்றன.

வேலூர் வாணியம்பாடி, கணவாய்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற கான்ட்ராக்டருக்கு மூன்று மகன்கள். கடைசிப் பையன், தினேஷ்குமார். பிளஸ் டூ படித்து வந்தான். கடந்த 8-ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றவன் வீடு திரும்பவில்லை. இரவு மணியின் வீட்டுக்குத் தொலைபேசியில் பேசிய மர்ம மனிதர்கள், 'தினேஷ்குமாரைக் கடத்தி உள்ளோம். 3 லட்ச ரூபாயுடன் வந்தால் விடுவிப்போம். போலீசுக்குச் சென்றால் பிணமாவான்' என்று தந்தி பாணியில் மிரட்ட, பதறியது குடும்பம். ஒருவழியாக உறவினர்களுடன் கலந்து பேசி, மகனை மீட்டுத் தரக்கோரி போலீஸில் புகார் செய்தார் மணி. விசாரணையைத் தொடங்கியது போலீஸ். விஷயம் தெரிந்து கோபமான கடத்தல் பேர்வழிகள், தினேஷ்குமாரைக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி அடர்ந்த காட்டுப் பகுதியில் சடலத்தை வீசியது. கடத்தலைக் கொலை வழக்காக மாற்றி, கொலையாளிகளைக் கைது செய்திருக்கிறது போலீஸ்.

கொலை வாரம்!

சென்னை கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். நகை வாங்கி விற்கும் தொழில் செய்தவர், கடந்த சனிக்கிழமை வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை துண்டு துண்டாக வெட்டப்பட்ட அவரின் உடல் பாகங்கள் சவுகார்பேட்டை, சூளைப் பகுதிகளில் உள்ள மூன்று தெருக்களில் கண்டெடுக்கப்பட்டன. இன்னும் அவரின் தலையைத் தேடிக்கொண்டு இருக்கிறது போலீஸ். 'நகை வியாபாரத்தில்தான் கொலை நடந்திருக்கிறது' என்று கிரைம் நிருபர்களுக்கு க்ளூ கொடுத்திருக்கிறது மாநகர போலீஸ்.

ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் வெறும் 3 பவுன் தங்கச் சங்கிலி, அரை பவுன் தோடுக்காக கடந்த 11-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக தலையாரி பீட்டர் என்பவரைப் பழிவாங்க, அவரின் 14 வயது மகன் அந்தோணிராஜாவும், புஷ்பராஜ் என்பவரின் 12 வயது மகன் சிமியோனும் கொடூரமாகக் கொல்லப்பட்டு உள்ளனர். 10 பவுன் தாலிச் சங்கிலிக்காக புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஞானத்தின் மனைவி சாரதாம்பாள் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது இரண்டு மூத்த சகோதரிகளின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவர்களையும், ஒரு சகோதரியின் 5 வயது மகனையும் உருட்டுக்கட்டையால் கொடூரமாக அடித்துக் கொன்ற இசக்கி செல்வம் என்பவன், இப்போது கம்பிகளுக்குப் பின்னால் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிறான். ராஜபாளையம் அருகே விக்னேஷ் என்ற 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன், உள்ளூர் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடுவது யார் என்ற போட்டியில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளான்.

இவை தவிர ஊருக்கு, உலகுக்கு வெளியே தெரியாமல் அமுக்கப்பட்ட கொலைகளும் பல இருக்கலாம். குழந்தைகள், சிறுவர்கள், காதலித்தவர்கள், காதலிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என வித்தியாசம் இன்றி இறங்குகின்றன அரிவாள்கள்.

கொலை வாரம்!

முன்பெல்லாம் திருடர்கள் கொலை செய்ய மாட்டார்கள், கொலையாளி கற்பழிக்க மாட்டான் என்ற தியரிகள் உண்டு. ஆனால், இப்போது அப்படி எதுவும் இல்லை.

பழிவாங்கும் உணர்ச்சியும் வன்மமும் அதிகரிப்பதுதான் இந்தக் குற்றங்களுக்குக் காரணம் என்கிறார் நெல்லை சரக டி.ஐ.ஜி. கண்ணப்பன். "கொலை வழக்குகளை ஆய்வு செய்யும்போது சாதிச் சண்டை, மதச் சண்டை, கோயில் தகராறு, மாடு பிடிப்பதில் பிரச்னை, கொடுக்கல் வாங்கல் தகராறு என்று கண்டிப்பாக ஏதாவது ஒரு முன்விரோதம் இருக்கும். முன்பின் தெரியாத நபர்கள் கொல்லப்படுவது குறைவு. நாம் பிரச்னைகளைத் தீர்க்காமல் அவ்வப்போது சமாளித்துக்கொண்டு செல்வதுதான் கொலைக்கான முதல் காரணம். அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளை அவை மீண்டும் எழாதவாறு பேசித் தீர்க்க வேண்டும். ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்னைக்குக் காரணமானவர்கள் மீது போலீஸார் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட வர்கள் கூலிப் படை, ரவுடிகள் போன்ற சமூக விரோதிகளை நாடவும் வாய்ப்பு இருக்கிறது. அது போன்ற சமயங்களில் ரவுடிகள் தலை எடுக்காத வகையில் போலீஸார் ஒடுக்க வேண்டும். சாதாரண வழக்கில் ஒருவர் சிக்கினார் என்றால், அவரின் பின்புலம் பற்றித் தீவிரமாக விசாரிக்க வேண்டும். குண்டர் தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களின் கீழ் அவர்களை ஒடுக்க வேண்டும். கோபத் தைக் குறைத்தல், மனதை ஒருநிலைப்படுத் துதல் போன்ற அமைதி சார்ந்த ஆத்மார்த்தமான விஷயங்களை பள்ளி, கல்லூரிகளில் இருந்தே மாணவர்களுக்குக் கற்றுத் தந்தால், பழிவாங்கும் போக்கு குறைந்து கொலைகள் குறையும்" என்கிறார்.

கைது, சிறை போன்றவற்றுக்கு இருந்த பயமும் அவை அவமானமான விஷயமாக நினைக்கப்பட்ட கருத்தும் இன்றைய காலப்போக்கில் மாறி வருகிறது. "ஒருவன் தன் இயலாமை, ஆத்திரத்தை மற்றவர்களை நோக்கித் திருப்பினால் கொலை செய்துவிடுவான். அதுவே அவன் தன்னை நோக்கித் திருப்பிக்கொண்டால் தற்கொலை செய்து கொள்வான். கொலை நடப்பதற்கான முக்கியக் காரணம், போதைப் பழக்கம். நீங்கள் யார் மேல் பயங்கர கோபத்தில் இருக்கிறீர்களோ அவர், நீங்கள் போதையில் இருக்கும்போது உங்கள் முன் வந்து நின்றால், அவரை நீங்கள் என்ன வேண்டு மானாலும் செய்யத் தயங்க மாட்டீர்கள். கரூர் சப்-ஜெயிலில் உள்ள 50 குற்றவாளிகளில் 45 பேர் போதையில் குற்றம் புரிந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் உயிரின் மதிப்பு தெரியாதவர்களாக இருப்பார்கள். இதற்கு மீடியாவும் ஒரு காரணம். பள்ளிகளில் நீதிநெறிக் கல்வியை மீண்டும் தீவிரமாகப் போதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை இந்தக் கொலைகள் உணர்த்துகின்றன" என்கிறார் மனநல மருத்துவரான செந்தில் வேலன்.

சிறுசிறு மனக் கொந்தளிப்புகள்தான் பெரிதாக விஸ்வரூபமெடுத்து ரத்தச் சகதிகளை உருவாக்கிவிடுகின்றன. மனித மனோபாவங்களை மாற்றிஅமைத்தால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

கடைசிச் செய்தி: இந்தச் செய்தியை எழுதி முடிக்கும்போது சென்னை புளியந்தோப்பில் இருந்து ஒரு கொலைத் தகவல். தன் மகள் யாஸ்மின் காதல்வயப்பட்டு வீட்டைவிட்டு வெளி யேறியதால், வேதனையில் துடித்தார் தகப்பன். மகளை மீட்டு அழைத்து வந்தவர், அப்படியே கொன்று சமாதி ஆக்கினார். ஓடவில்லை, ஒளிய வில்லை... நேராக ஸ்டேஷனுக்குப் போய் சரண்டர் ஆகியிருக்கிறார். 'நான் எந்தத் தப்பும் பண்ண வில்லை. என் மகள் நன்றாக இருக்கணும் என்றுதான் நினைத்தேன்' என்று அழுத அவரை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

 
கொலை வாரம்!
-
கொலை வாரம்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு