விறைப்புத்தன்மை நீடித்துக்கொண்டே இருப்பதற்கு மருத்துவரீதியில் priapism என்று பெயர். பொதுவாக, விறைப்புத்தன்மை இல்லை என்கிற காரணத்துக்காகக் கண்ட கண்ட லேகியங்களையும் போலி டாக்டர்களையும் தேடிப் போகிறவர்கள்தான் அதிகம். ஆனால், priapism என்கிற இந்தப் பாதிப்பு அரிதாக ஒரு சிலருக்கே வரும் விநோதப் பிரச்னை.
ஆண் உறுப்பில் விறைப்புத்தன்மை ஏற்பட மனரீதியில் தூண்டப்பட வேண்டும். தூண்டுதலால் விறைப்பு அடைந்த உறுப்பு, உறவுக்குப் பின்னர் பழைய நிலைமைக்கு வந்துவிடும் என்பதுதான் இயற்கையான விஷயம். ஆனால், அரிதாக priapism குறைபாடு உள்ள நபருக்கு விறைப்புத்தன்மை குறையவே குறையாது. இது போன்ற நிலையில் உறுப்பில் ரத்த ஓட்டமும், ஆக்ஸிஜனும் சரிவர ஓட முடியாததால், உறுப்பில் பொறுக்க முடியாத வலி இருக்கும். இதனால் உறுப்பின் மென் சதைப் பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாகும். நான்கு மணி நேரத்துக்கும் மேலாக உறுப்பின் விறைப் புத்தன்மை குறையவில்லை என்றால், அவசர சிகிச்சை தேவைப்படும்.
இந்த priapism இரண்டு வகைப்படும். 1.தாழ்நிலை பிரியாபிஸம் 2. உயர்நிலை பிரியாபிஸம்.
முதல் வகையில் வலி அதிகமாகவும், விறைப்புத்தன்மை உச்ச நிலையிலும் இருக்கும். ரொம்ப நேரம் விறைப்புத்தன்மை நீடிக்கும். இந்தத் தாழ்நிலை பிரியாபிஸம் - ரத்த செல்களில் ஏற்படும் Sickle Cell Anemia எனும் குறைபாடு காரணமாக ஏற்படலாம். சில போதை மருந்துகளை ஊசி மூலம் ஏற்றிக்கொள்வதாலும் ஏற்படும். விறைப்புத்தன்மை நீடித்தால் உடனடியாகச் சிகிச்சை தர வேண்டும்.
இரண்டாவது வகை... உயர் நிலை பியாபிஸம். இதில் விறைப்புத்தன்மையும் வலியும் குறைவாக இருக் கும். ஜனன உறுப்பில், அடிவயிற்றில் காயம் ஏற்படுதல், போதை மருந்துகளைப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் இது ஏற்படும்.
1998 வரையில் விறைப்புத்தன்மைக் குறைபாடுகளுக்கு, உறுப்பில் ஊசி போட்டுக் குணப்படுத்தும் Intra Cavernous எனும் முறையைக் கையாண்டு வந்தார்கள். இன்றைய அதிநவீன மருத்துவ சிகிச்சை முறையில் வாய் வழியாக உட்கொள்ளும் மருந்துகளின் மூலமே குணப்படுத்திவிடலாம்.
|