Published:Updated:

விபத்தையும் கொண்டாடுங்கள்... அதன் வலிகள் குறையும்!

விபத்தையும் கொண்டாடுங்கள்... அதன் வலிகள் குறையும்!


08-07-09
"விபத்தையும் கொண்டாடுங்கள்... அதன் வலிகள் குறையும்!"
விபத்தையும் கொண்டாடுங்கள்... அதன் வலிகள் குறையும்!
விபத்தையும் கொண்டாடுங்கள்... அதன் வலிகள் குறையும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
ப.திருமாவேலன், படங்கள்: சு.குமரேசன்
விபத்தையும் கொண்டாடுங்கள்... அதன் வலிகள் குறையும்!
விபத்தையும் கொண்டாடுங்கள்... அதன் வலிகள் குறையும்!

'விட்டுச் சென்ற சேறாகவும்
விரும்பித் தாவும் குழந்தையாகவும்
ஒவ்வொருவருக்கும்
ஒரு துளி மழை!'
எழுதிய கவிதைப் பெண்ணுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்ததும் ஒரு மழை மாலையில்! இப்போது நிமிர்ந்து எழுந்துவிட்டார் தமிழச்சி.

100 நாட்களுக்கு முன் நடந்தது அந்த விபத்து. வேலூரைத் தாண்டி சென்னைக்கு வேகமாக வந்துகொண்டு இருந்த வாகனம், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தேசிய நெடுஞ்சாலையில் நான்கைந்து முறை பல்டி அடித்தபோது, உள்ளுக்குள் இருந்த தமிழச்சி நொறுங்கிப் போனார். அடுத்த மூன்று மாதங்களும் படுத்த படுக்கை. எழுந்து நிற்க முடியுமா, இனி நடக்க முடியுமா என்ற ஆரம்பகட்டச் சந்தேகங்களைத் தாண்டவே ஒன்றரை மாதங்கள் ஆனது. இப்போது மெள்ளத் தாங்கி நடக்கிறார். கொஞ்சம் சரியானது போல் தெரிந்ததும் அவர் பார்க்கச் சென்றது முதல்வர் கருணாநிதியையும், துணை முதல்வர் ஸ்டாலினையும்தான்.

"நீ பிழைச்சு வந்ததே போதும்மா'' என்று ஈர வார்த்தைகளால் கருணாநிதி உருக, "நம்பிக்கையோடு செயல்படுங்க'' என்று ஸ்டாலினும் டானிக் வார்த்தைகளைச் சொல்லி உற்சாகப்படுத்த... மிச்சம் இருந்த வலியும் விலகி இருக் கிறது. "குனியத்தான் முடியவில்லை!''-நிமிர்ந்தபடி சொல்கிறார்.

"அந்த நேரத்தை இப்போது நினைத்தாலும் பதறுகிறது. சேலத்தில் நடந்த நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். மார்ச் 15-ம் தேதி காலையில் அங்கே இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டேன். சத்துவாச்சாரி வரும்போது மதியம் 12.30 மணி இருக்கும். நான்கு வழிப் பாதை என்பதால் வேகமாக மிதந்துகொண்டு இருந்த மிட்சுபிஷி கண நேரத்தில் பேரிகாட்டைத் தாண்டி, எதிர்ப்பக்கத்தில் பல்டி அடிக்க ஆரம்பித்தது. நான்கைந்து முறை உருண்டு புரண்டது. நான் ஸீட் பெல்ட் போட்டு இருந்ததால், அது என்னை இறுக்கிக்கொண்டது. குப்புறக்கிடந்த வாகனத்தில் இருந்து கதவுக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு நானே வெளியே வந்தேன். நான்தான் போன் செய்தேன். நல்லவேளை... எதிர்ப்பக்கத்தில் எந்த வாகனமும் வரவில்லை. வந்திருந் தால் அவ்வளவுதான்! அடுத்த நிமிஷம்தான் என் முதுகுக் குப் பின்னால் உயிர் பிடுங்கும் வலியை உணர ஆரம்பித் தேன். டிரைவர் கோமா அளவுக்கு ஆகிவிட்டார். அங்கே இருந்து அப்போலோவுக்குக் கொண்டுவந்து பார்த்த பிறகுதான் ஆபத்து நிலையை அதிகமாக உணர்ந்தேன். 'முதுகு எலும்பின் இரண்டு பகுதியில் விரிசல். இரண்டு மாதங்கள் படுக்கையில் இருக்க வேண்டும்' என்று சொல் லிச் சென்றார்கள் மருத்துவர்கள். இந்த வலியைவிட இரண்டு விஷயங்கள் அதிகக் கஷ்டமாக இருந்தன'' என்றவர், கொஞ்சம் யோசிக்கிறார்.

"பொதுவாக, பெண் பிள்ளைகள் மல்லாந்து படுக்கக் கூடாது; இடது பக்கமோ, வலது பக்கமோ ஒருக்களித்துதான் படுக்க வேண்டும் என்பார்கள். என் அம்மா எனக்குச் சொல்லிக்கொடுத்ததும் அதுதான். ஆனால், இரண்டு மாதங்கள் புரண்டு படுக்காமல் அப்படியே மல்லாந்து படுத்து இருந்தது, முதல் அவஸ்தை. அடுத்தது, நான் இத்தனை வருடங்களில் ஸ்ட்ரா பயன்படுத்தி எதையும் குடித்தது இல்லை. இளநீராக இருந்தாலும் அப்படியேதான் குடிப்பேன். உதடுகளை ஈரப்படுத்திக் குடிப்பதுதான் உடலுக்கு நல்லது. அதற்கும் வேட்டு வைத்தது இந்த விபத்து. எல்லாமே ஸ்ட்ராதான். எதில் நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்களோ... அதைச் சோதிக்கவே பல காரியங்கள் நடக்கும் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்'' என்று சிரிக்கும் தமிழச்சி, மருத்துவமனை யில் அதிகமாகப் படித்தது ஜென், சூஃபி, ரஜ்னீஷ் தத்துவப் புத்தகங்கள்.

"எப்போது உடல் உங்களுக்கு ஒத்துழைக்கவில்லையோ, அடுத்தவர் உதவியை நம்பியே நாட்களை நகர்த்த வேண்டிய நிர்பந்தம் வருகிறதோ, அப்போது மனதைத் திடப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு இந்தத் தத்துவ விசாரணைகள் கை கொடுக்கும். அதே போல் கற்பனையான உலகில் வலம் வந்தாலும் நேரம் நகர்வதே தெரியாது. எனவேதான் பிரெஞ்சு, இரான் திரைப்படங்கள் நிறையப் பார்த்தேன். கொஞ்சம் யோசித்தால், பிடித்த புத்தகங்களைப் படித்ததும், பரவசப்படுத்தும் படங்களைப் பார்த்ததும்தான் நினைவலைகளில் மிதக்கின்றன'' என்கிற தமிழச்சி, முன்பு ஒரு முறை இது போன்ற ஒரு விபத்தில் சிக்கியவர். காலில் மாவுக்கட்டுப் போட்டு, அப்போதும் சில மாதங்கள் நடக்க முடியாமல் வீட்டில் இருந்தார்.

விபத்தையும் கொண்டாடுங்கள்... அதன் வலிகள் குறையும்!

"அந்தக் காலகட்டத்தை நண்பர்களுடன் அதிகமாகக் கழித்தேன். கவிஞர்கள், ஓவியர்கள், இலக்கியவாதிகள் என நிறையப் பேர் பார்க்க வந்து... விவாதங்களிலும் விமர்சனங்களிலும் கழிந்தது காலம். அந்த மாவுக்கட்டில் அனைவரையும் கையெழுத்து வைக்கச் சொன்னேன். 'எந்த விபத்தையும் கொண்டாடுங்கள். அதன் வலிகள் குறையும்' என்பது என் கண்டுபிடிப்பு'' என்கி றார் நெகிழ்வாக.

ஆனாலும், ஒரு விஷயம்... தமிழச்சி நினைத்தாலும் மறக்க முடியாது. இந்தக் காலகட்டத்தில் நடந்த தேர்தல் திருவிழாவில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு இல்லை. அதை ஞாபகப்படுத்தினால் குரலில் வருத்தம். "தேர்தலில் போட்டியிடுவதற்காக என் ஆய்வுப் பணியைக் கூட விரைவுபடுத்தி முடித்தேன். அறிவாலயம் சென்று விருப்ப மனுவும் தாக்கல் செய்தேன். ஆனால், தேர்தலில் போட்டியிட முடியாமல் முடக்கிவிட்டது விபத்து. வாய்ப்பு நழுவிப்போனதில் வருத்தம்தான். வாழ்க்கையே புதிரானதுதான். எந்த ஒன்றும் இந்தக் காலகட்டத்தில் ஏன் நடக்கிறது என்று யோசித்துமுடங்கு வதைவிட... நல்ல சந்தர்ப்பம் இன்னொரு முறையும் வரும் என்று தேற்றிக்கொள்வதே ஆரோக்கியமானது'' என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறார். அவரது ஆய்வுப் பணி குறித்துக் கேட்க ஆரம்பித்ததும், மீண்டும் உற்சாகம்.

"புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழரின் இலக்கியக் கொடைகள் குறித்துதான் நான் என் ஆய் வேட்டைச் சமர்ப்பித்து இருக்கிறேன். உள்ளூரில் இருக்க விடாமல் உலகம் முழுவதும் தமிழனை விரட்டியது சிங்கள இனவாதம். வாழ முடியாமல் விரட்டப்பட்ட வர்கள் தங்களது சோகத்தை மட்டும் சொல்லிக்கொண்டு இராமல், எங்கெங்கோ சிதறி வாழப் பழகிக்கொண்டார் கள். அவர்கள் தங்களது அனுபவங்களை, வலிகளை, வார்த்தைகளுக்குள் கோத்தார்கள். ஈழத் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் தமிழ் இலக்கியம் தளிர்த்து வருகிறது. இது மட்டும்தானே இங்கு தெரியும்! புலம்பெயர்ந்த தமிழர்கள், ஆங்கிலத்தையும் விட்டுவைக்கவில்லை. உலகின் கவனத்தை ஈர்க்கும் ஆங்கில எழுத்துக்களை அவர்கள் எழுதி வருகிறார் கள். இதன் அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர் படைப்பாளிகளின் படைப்பு களை நான் ஆய்வுசெய்து என் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளேன்.

இந்தப் படைப்புகள் வெறும் புலம்பல்கள்,ஆவலாதி களாக மட்டும் இல்லாமல், புதிய கற்பனைகளாக... இளைய தலைமுறைக்கு மொழியையும் பண்பாட்டையும் கற்றுக்கொடுக்கின்றன. தங்கள் கண்ணீரைப் பாய்ச்சி, நம்பிக்கையை விதைக்கிறார்கள். தமிழுக்கு மட்டுமல்ல, ஆங்கில இலக்கியத்துக்கும் அள்ளிக்கொடுத்த ஈழத் தமிழருக்கு வாழ்க்கை இன்னமும் சோகத்தைதான் பரிசாக வழங்கிக்கொண்டு இருக்கிறது என்பதை நினைத்தால், கண்களில் நீர் கோக்கிறது!'' - சொல்லி முடிக்கும்போது அவர் எழுதிய வரிகள் நினைவில் நிழலாடின.

'பகிரப்படாத நேசத்தின்
துயரென்னைத் தின்கிறது
தனக்குத்தானே கட்டிக்கொண்ட
கைகளின் தனிமை போல!'

 
விபத்தையும் கொண்டாடுங்கள்... அதன் வலிகள் குறையும்!
-
விபத்தையும் கொண்டாடுங்கள்... அதன் வலிகள் குறையும்!