விகடன் பொக்கிஷம்
தொடர்கள்
Published:Updated:

மைக்கேல் ஜாக்சன்

மைக்கேல் ஜாக்சன்


08-07-09
மைக்கேல் ஜாக்சன்
மைக்கேல் ஜாக்சன்
மைக்கேல் ஜாக்சன்
 
ஷாஜி
மைக்கேல் ஜாக்சன்

ந்திராவின் ஒரு குக்கிராமத்தில் ஒரு தையல் கடையில் தொப்பி அணிந்த ஒரு முகத்தின் கோட்டுச் சித்திரம் இருந்தது. 'அது யார் என்று தெரியுமா?' என்று அங்கே நின்றிருந்த சட்டை போடாத சின்னப் பையனிடம் கேட்டேன். 'வாரு மைக்கேல் ஜாக்சன்' என்றான். சோமாலியாவிலோ, பிலிப்பைன்ஸிலோ ஒரு குக்கிராமத்து சவரக் கடையிலும் அதே படம் இருக்கலாம். அங்கே உள்ள பையனிடம் கேட்டாலும் சரியான பதிலைச் சொல்வான்.

மைக்கேல் ஜாக்சன்

உலகம் முழுக்கத் தெரிந்த அந்த முகம்... மைக்கேல் ஜாக்சன் உருவாக் கிக்கொண்ட ஒரு குறியீடு. இப்போது, அந்த முகத்தையும் தன் குரலையும் மட்டும் விட்டுவிட்டு அவர் விலகிச் சென்று இருக்கிறார்.

முழு உலகமே பாப் இசையின் முதல் பெரும் நட்சத்திரமாக மதித்துப் போற்றும் மைக்கேல் ஜாக்சன் வெறும் 60 பாடல்கள்தான் பாடிஇருக்கிறார் என்றால் நம்புவீர்களா?

இந்த நூற்றாண்டில் உலகம் முழுக்க வேறெந்த மனிதரைவிடவும் அதிகமான புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சனை ஏராளமான இசை ரசிகர்கள் வெறுக்கவும் செய்தனர். எண்பதுகளின் கடைசியில் ஹைதராபாத்தில் ஓர் ஆங்கில பாப் இசைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த நானும் அவர்களில் ஒருவன். 'பாட்டைவிட பகட்டு ஜாஸ்தி' என்பதுதான் அப்போது அவர் மீது எங்கள் குற்றச்சாட்டு. அவர் ஓர் அற்புதமான நடனக்காரர் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இருந்தது இல்லை. ஆனால், ஒரு பாட்டைக் 'கேட்காமல்' அதைப் 'பார்ப்பது' எங்களுக்கு உடன்பாடானதாக இருக்கவில்லை.

அப்போதுதான் அவரது மிகப் பிரபலமான இசைத் தொகுதி 'டேஞ்சரஸ்' வெளிவந்தது. அதைப் போகிறபோக்கிலேயே கேட்டேன். ஆனால், அது சட் டென்று என் கண்ணைத் திறந்தது.

மைக்கேல் ஜாக்சனின் ஆல்பங்களில் உள்ள பாடல்கள் ஆத்மா கசியக்கூடியவையாகவும் அபூர்வமான படைப்பாக்கம் கொண்டவையாகவும் இருப்பதைக் கவனித்தேன். மிக மென்மையான உள்ளம் உருக்கக்கூடிய இன்னிசைப் பாடல்கள். உலகம் முழுக்க உள்ள பல்வேறு செவ்வியல் மற்றும் ஜனரஞ்சக இசை வடிவங்களை மிக நுட்பமாகக் கலந்து அவை உருவாக்கப்பட்டு இருந்தன. அவர் தன் நடனப் பாடல்களை உரக்கவும் ஆவேசமாகவும் அமைத்துவிட்டு, இன்னிசைப் பாடல்களை மென்மையாகவும் ஆத் மார்த்தமாகவும் வடித்து வந்தார்.

ஜாக்சன் ஏழு வயதிலேயே தன் குடும்ப இசைக் குழுவான 'ஜாக்சன்ஸ் 5'-ல் பாட ஆரம்பித்திருந்தார். தோற்றுப்போன இசைக் கலைஞராகக் கடும் வறுமையில் உழன்ற ஓர் ஆலைத் தொழி லாளியின் ஒன்பது பிள்ளைகளில் ஒருவர் அவர். இளமையில் அப்பாவிடம் கடுமை யாக அடிவாங்கி, கூடவே கொஞ்சம் சங்கீதமும் படித்து வளர்ந்தார். குழந்தைப் பிராயம் என்பதே இல்லாமல் எட்டு வயதிலேயே தொழில்முறைப் பாடகரா கவும் நடனக்காரராகவும் ஆகிவிட்டார். அவரே ஆடி ஆடி தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக்கொண்டார். 14 வயதில், தன் முதல் தனிப் பாடல் வெளியிட்டார். 21 வயதுக்குள் தனியாகவே பாடல்களை எழுதி, இசையமைத்து, இசைத்தட்டுகள் வெளியிடும் முக்கியமான பாடகராகிவிட்டார். அவரது முதல் இசைத் தொகுப்பு இரண்டு கோடிப் பிரதிகள் விற்றிருக்கின்றன. அவரது 'த்ரில்லர்'தான் இன்று வரை உலகில் மிக அதிகமாக விற்ற இசைத் தொகுப்பு. மிச்சம் எல்லாம் வரலாறு என்றுசொல் வது போல பின்னர் 'ஹிஸ்டரி' என்ற ஆல்பத்தையும் அவர் வெளியிட்டார்.

கழைக் கூத்தாட்டம் முதல் உணர்ச்சிகரமான நாடகம் வரை கலந்தவை அவரது நடனங்கள். அவரை நினைத்தாலே ஞாபகம் வரக்கூடிய 'நிலவு நடை' (moon walk) என்ற நடன அசைவை அவர் முதலில் மேடையில் நடத்தியபோது, அது மனித சாத்தியம்தானா என்று ரசிகர்கள் வாய் பிளந்திருக்கிறார்கள். இன்று வரை உலகெங்கும் உள்ள சினிமா நடனங்கள், மேடை நடனங்களில் எல்லாம் மிக அதிகமாக நகல் செய்யப்படும் நடனக்காரர் அவர்தான்.

எப்போதுமே உலகம் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தது. சில சமயம் நல்லதாகவும், பல சமயம் கெட்டதாகவும்! மனிதாபிமானச் செயல்பாடுகளுக்காக அவர் அள்ளி வீசிய கோடிக்கணக்கான பணம் உலகம் முழுக்க அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது.

பல்வேறு இசை நட்சத்திரங்களைப் பங்கெடுக்கச்செய்து அவர் உருவாக்கிய 'நாமே உலகம்' (We Are the World) என்ற பாடல், ஆப்பிரிக்க பஞ்சத்துக்காகச் சம்பாதித்துக் கொடுத்த தொகை கிட்டத்தட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய். மறுபக்கம் சிறுவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார் என்று தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டார்.

2,600 ஏக்கர் விரிவுள்ள தன் நெவர்லேண்ட் பண்ணையில் மாதக்கணக்காக அவர் சிறுவர்களுடன் தங்கி விளையாடிக்கொண்டு இருந்தார். பாலியல் துன்புறுத்தல்களுக்காகச் சிறுவர்களின் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்தபோது, விழி பிதுங்கவைக்கும் தொகை கொடுக் கப்பட்டு வழக்குகள் நீதிமன்றத்துக்கு வெளியே பைசல் செய்யப்பட்டன. அவருக்குத் தெரிந்த குழந்தைகளில் பாதிப் பேர் தொடர்ந்து பணம் கேட்டு நீதிமன்றம் போனார்கள். கடைசியில், எந்த வழக்கிலும் ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனால், அவர் மேல் அந்தக் கறை அழுத்தமாகவே படிந்துவிட்டது.

அவருக்குத் தன் கறுப்பு நிறம், ஆப்பிரிக்க முகச் சாயல் ஆகியவற்றின் மேல் கடுமையான தாழ்வு உணர்ச்சி இருந்தது. அறுவை சிகிச் சைகள் மூலம் அவர் தன் மூக்கையும் உதடுகளையும் மாற்றி அமைத்து, வெள்ளைக்கார முகமாக ஆக்கிக் கொண்டார். அவர் தன் நிறத்தையும் முக அமைப்பையும்கூட மாற்றிக் கொண்டே இருந்தார். அவரது தோலின் நிறமாற்றம் என்பது விடில்கோ (Vitilgo) என்ற தோல் நோய் மூலம்தானே ஒழிய, அவரே அதை வெளுக்கவைக்கவில்லை என்று பின்னர் விளக்கம் அளிக்கப் பட்டது.

உலகம் முழுவதும் உள்ள அவரது பல கோடி ரசிகர்களால் மைக்கேல் ஜாக்சன் இல்லாத ஓர் உலகத்தைக் கற்பனையே பண்ண முடியாது என்ற நிலையில், தன் 50 வயதிலேயே, அவரே ஒரு பாடலில் சொல்லிக்கொள்வது போல 'மாலை வானத்தில் எரிந்து செல்லும் தாரகை போல விரைவாக மின்னி மறைந்தார்'!

 
மைக்கேல் ஜாக்சன்
-தமிழில்: ஜெயமோகன்
மைக்கேல் ஜாக்சன்