இந்தியா முன்பு உணவுப் பொருட்களைக் கொண்டுபோய் போட்டது மாதிரி இப்போது யாரும் செய்ய முடியாது. இலங்கை அரசுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. அமெரிக்கா போன்ற நாடுகள் இதுபோன்ற உதவியைச் செய்தால், இந்த நாடுகள் தடுக்கும். இதனால், உலகப் போரே நடக்கலாம். அதனால், அமெரிக்கா அடக்கியே வாசிக்கிறது. பக்கத்து நாடு என்ற அடிப்படையில் மனிதாபிமான முறையில் இந்தியா சில நிர்பந்தங்களை இலங்கைக்குக் கொடுத்தால் மட்டும்தான் சொந்த நாட்டில் அகதிகளாக இருக்கும் மக்களுக்கு நன்மை கிடைக்கும்'' என்கிறார் வி.எம்.பி.நேரு. இவர்தான் 'வணங்காமண்' கப்பலை ஓரளவாவது இங்கு கவனிக்கவைத்தவர்.
"இந்தியா அது போன்ற மனிதாபிமான நடவடிக்கைகள் எதையும் எடுக்காது'' என்கிறார் தமிழீழ ஆதரவாளரான தியாகு. "சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மட்டும்தான் அங்குள்ள மக்களுக்கு இன்றைய சூழலில் இருக்கும் ஒரே ஆறுதல். எதைச் செய்தாலும் அவர்கள்தான் செய்ய வேண்டும், யார் உதவி செய்ய முன்வந்தாலும் அவர்கள் மூலமாகத்தான் செய்ய வேண்டும். கோத்த பய ராஜபக்ஷே, பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுர்கா ஆகிய மூன்று பேரும் டெல்லி வந்து கே.ஆர்.நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய் சிங் ஆகிய மூன்று பேரையும் சந்தித்துவிட்டுப் போய்இருக்கிறார்கள். இவர்கள் அகதிகள் மறுவாழ்வு பற்றிப் பேசியதாகச் சொல்வதெல்லாம் நாடகம். மீண்டும் ராணுவ உதவியை வாங்குவதற்கே அவர்கள் வந்துபோயிருக்கிறார்கள்'' என்கிறார்.
மனித உரிமை ஆர்வலரான 'எவிடென்ஸ்' கதிர், "இலங்கையில் உள்ள மனித உரிமை அமைப்பினரிடம் பேசியபோது, போர் மூலமாகக் கடுமையான குற்றச் செயல்கள் செய்யப்பட்டு இருப்பதை உணர முடிகிறது. அப்படிப்பட்ட நாடு அங்குள்ள மக்களுக்கு எந்த மறுவாழ்வுப் பணியையும் செய்யாது. குற்ற விசாரணையை பொதுவான நாடுகள் நடத்துவது மாதிரி, நிவாரணப் பணிகளையும் உலக நாடுகள்தான் செய்ய வேண்டும். 'பணம் கொடுங்கள்; நாங்கள் எங்கள் மக்களைப் பார்த்துக்கொள்கிறோம்' என்று இலங்கை சொன்னாலும் அதை நம்ப முடியாது. பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்குத்தான் செலவு செய்கிறார்கள் என்பதை யார் கண்காணிப்பது? எனவே, இன்னின்ன மறுவாழ்வு வேலைகளை இலங்கை செய்தாக வேண்டும் என்று எல்லா நாடுகளும் நிர்பந்திக்க வேண்டும். சும்மா கோரிக்கை வைத்தால் போதாது. ஐ.நா-வின் அகதிகள் தொடர்பான அறிக்கையில் இந்தியா கையெழுத்துப் போடவில்லை. அகதிகளுக்கான தனிச் சட்டமும் இங்கு கிடையாது'' என்கிறார்.
இலங்கை கடந்த நான்காண்டுகளில் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளது. சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து 2004 வரை இலங்கைக்கு இருந்த கடன் தொகை ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், கடந்த நான்காண்டில் மட்டும் வாங்கிய கடன், ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி. அதாவது நாட்டின் கடனை இரண்டு மடங்காக்கியது மட்டும்தான் ராஜபக்ஷேவின் சாதனை. அதனால்தான் உணவு, மருந்து வேண்டாம்; பணமாகக் கொடுங்கள் என்று கெஞ்சுகிறார் அவர். இந்நிலையில் அகதிகள் மறுவாழ்வுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள். "அகதி முகாமில் இருக்கும் மக்களுக்கு என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் கண்காணிப்போம்'' என்று ஆஸ்திரேலிய அமைச்சர் ஜெனி சொல்லியிருப்பதை எல்லா நாடுகளும் பின்பற்றினால்தான் ஈழ மக்கள் பிழைப் பார்கள்.
ஈழத்தில் வாழ்பவர் குறித்து யார் யாரோ கவலைப்பட, இலங்கை அரசின் அக்கறை வேறு மாதிரி இருக்கிறது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 600 கோயில்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன. பிணங்களை இடம் தெரியாமல் புதைப்பது மாதிரி சீறும் சிவனும், அழகு முருகனும், அவனின் அமைதிஅண்ணனும் சிதைக்கப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சியில் பிரமாண்ட புத்த கோயில் கட்டப்பட்டு வருகிறது. அழகிய கிளிநொச்சிக்கு சிங்களத்தில் 'கிரானிக்கா' என்று பெயர் வைத்துவிட்டார்கள். கடலின் எல்லைத் தீவான முல்லைத் தீவின் பெயர், 'மூலதூவ'.
சிங்களவன் நினைப்பதெல்லாம் சீக்கிரம் நடக்கிறது. தமிழனின் வாழ்வு மட்டும் நொண்டியே கிடக்கிறது!
|