''டெல்லியில் 1991-ல் மக்கள் தொகைக் கணக்கு எடுக்கும் பணி நடைபெற்றது. ஆசிரியராக இருந்த நானும் அதில் ஈடுபடுட வேண்டியிருந்தது. நான் கணக்கு எடுக்க வேண்டிய பகுதியில்தான் அப்போதைய நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராஜீவ் காந்தியின் வீடு. நான் இயல்பாக அவர் வீட்டுக்குச் சென்றாலும்கூட, பாதுகாப்புக் கெடுபிடிகள் என்னைப் பதற்றம்கொள்ளவைத்தன. வியர்த்து விறுவிறுக்க நான் ஓர் அறையில் காத்திருக்க, ஓர் ஒளியைப் போல அங்கு பிரசன்னமானர் ராஜீவ் காந்தி. 'ஏன் பதற்றமாக இருக்கிறீர்கள்? ரிலாக்ஸாக இருங் கள்!' என்று என்னை இயல்பாக்கிவிட்டுச் சிரித்தார். 'ஓ.கே. சார்... சும்மா ஒரு ஃபார்மாலிட்டி சார்!' என்று நான் கிளம்ப எத்தனிக்க, 'அந்த ஃபார்மாலிட்டியை முடிக்காமலே கிளம்புறீங்களே!' என்று கேட்டார். நான் சின்னச் சின்னதாகக் கேள்விகள் கேட்க, அவர் பிறந்த வருடம், அவர் அம்மா பெயர், அப்பா பெயர், மனைவி, குழந்தைகளின் பெயர்களை நிதானமாகச் சொன்னார். எல்லா விவரங்களையும் நான் குறித்துக்கொள்ளவும் என் முதுகில் தட்டி கைகுலுக்கி விடை கொடுத்தார்.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்குச் சந்தோஷமும், அதைத் தாண்டிய துக்கமும் உள்ளுக்குள் பொங்கிப் பெருகும். ஏனென்றால், இந்தப் புகைப்படம் எடுத்த ஐந்து மாதங்களுக்குப் பிறகுதான் ராஜீவ் காந்தி பிரசாரத் துக்காக ஸ்ரீபெரும்புதூர் கிளம்பிப் போனார். அதன் பிறகு அவர் டெல்லிக்குத் திரும்பவே இல்லை!''
- பி.ஆர்.கண்ணன், டெல்லி-5.
''ஸ்காட்லேண்ட் யார்டு அதிகாரிகள், லண்டன் போலீஸின் மோப்ப நாய்கள், ஆயுதச் சோதனைக்கான ஆள் தடவல் குழு என்று லண்டன் இந்திய ஒய்.எம்.சிஏ. மாணவர் தங்கும் விடுதி திமிறித் திண்டாடியது.
நிகழ்ச்சி - விடுதியின் வைர விழா. ஆண்டு - 1980. லண்டன் பல்கலைக்கழகத்தில், நான் 'வளரும் நாடுகளில் பொதுச் சுகாதாரம்' பற்றிய முதுகலைப் பட்டப்படிப்பு பயின்ற காலகட்டம். விழாவின் முக்கிய விருந்தினர்- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்! அனைவருக்கும் அடையாள அட்டை. வரிசையில்தான் வர வேண்டும். டை கட்டியிருக்க வேண்டும். கை கட்டக் கூடாது (அட்டென்ஷனில்தான் நிற்க வேண்டும்!) 'அவர்' பேசினால் மட்டுமே பேச வேண்டும். அனுமதிக்கப்பட்ட புகைப்படக்காரர்தான் படம் எடுக்கலாம், இத்யாதி... இத்யாதி!
|