'வரும் ஜனவரி முதல் கடல் நீரைக் குடிநீராக சென்னை மக்கள் குடிக்க முடியும்' என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருப்பது உண்மையில் சந்தோஷமான சங்கதிதான். ஆனால், 'இது எந்தளவுக்குச் சாத்தியம்... கடல் குடிநீர் உடல் நலனுக்கு ஆரோக்கியமானதா...' போன்ற கேள்விகளுக்கு விடை கேட்டுப் போன என்னை கைப் பிடித்து அழைத்துச்சென்று மீஞ்சூர் 'டீசாலினேஷன் பிளான்ட்' முன் நிறுத்தினார்கள். கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டத்தின் பிரமாண்ட ஃபேக்டரியை 'டீசாலினேஷன் பிளான்ட்' என்கிறார்கள். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியாவில் குஜராத், லட்சத் தீவுகளில் சிறிய அளவிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் திட்டம். மீஞ்சூர் ப்ராஜெக்ட்தான் இந்தியாவின் முதல் பெரிய தண்ணீர்த் தொழிற்சாலை!
'மெட்ரோ வாட்டரி'ன் செயற்பொறியாளர் சேதுராமன் ஆலையை சுற்றிக் காட்டி விளக்க ஆரம்பித்தார். ''பல நாடுகளில் அனல் மின் நிலைய வெப்பத்தை பயன்படுத்தி, கடல் நீரை ஆவியாக்கி பின்னர் சுத்திகரித்து நன்னீராக்கி விநியோகிக்கும் தொழிற்சாலைகள் இருக்கிறது. ஆனால், மீஞ்சூர் ஆலையில் பயன்படுத்தப்படுவது நவீன தொழில்நுட்பமான சவ்வூடு பரவல் முறை (reverse osmosis). இந்த முறையில் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பதால் இதற்கு டிக் அடித்திருக்கிறது தமிழக அரசு. கடலில் இருந்து குழாய்கள் மூலமாக கொண்டுவரப்படும் தண்ணீர் ஆலையின் முன்புறத்தில் சேமிக்கப்படும். கடல் மட்டத்தைவிட 10 அடி ஆழத்தில் குழாய்கள் புதைக்கப்படும். தரைக்கு கீழே 10 அடி ஆழத்தில் குழாய்கள் இருப்பதால் கடல் நீரை பம்ப் செய்ய வேண்டியது இல்லை. கடல் நீரோடு வரும் மீன்கள், சிறிய பூச்சிகளை தடுத்தால் மட்டுமே போதும்.
|