Published:Updated:

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...

இது 'நாம் இருவர்' கீதம்ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

 ''இவருடைய மேடைப் பேச்சுகள் உங்களுக்குப் பிடிக்குமா?'' என்று கயல்விழியிடம் கேட்டேன்.

''ரொம்பப் பிடிக்கும். என் அண்ணன் இவருக்குப் பழக்கம். அண்ணன் இவர் பேசிய பேச்சுக்களை யூ-டியூப்ல காமிச்சு, 'இவர் ஒருத்தர்தான் உண்மையா பேசுறார். ஆனா, இவர் பேசுறதை யாரும் காது கொடுத்துக் கேக்குறாங்களானு தெரியலை’னு சொன்னார்!'' என்ற கயல்விழியை இடைமறித்து, ''ஏன்டா அப்போ அதைச் சொன்னோம்னு இப்போ மச்சான் நினைச்சு நினைச்சு உருகுவார்ல!'' என்று வெடித்துச் சிரிக்கிறார் சீமான்.

'நாம் தமிழர்’ சீமான், இப்போது புது மாப்பிள்ளை! கயல்விழியுடனான காதல் திருமணத்தால் சீமானிடம் அவ்வளவு உற்சாகம். காதலின் தொடக்கப் புள்ளி முதல் இடிந்தகரை மறுவீடு வரையிலான தருணங்களை விவரித்தார்கள் தம்பதியினர்!

முன்கதைச் சுருக்கத்தை 'யூ-டியூப் வீடியோ’வில் விட்ட இடத்திலிருந்து தொடங்கினார் கயல்விழி.

''தம்பி பாலசந்திரனைக் குண்டு துளைத்த படங்கள் வெளிவந்த சமயம். அதைப் பார்த்துட்டு பொறுக்கமுடியாத வேதனையில் இவரை அலைபேசியில் அழைச்சேன். நேரில் சந்திக்கணும்னு சொன்னேன். 2012 மார்ச் 31 அன்னைக்குத்தான் முதல்முறை இவரை நேர்ல பார்த்தேன். வீட்டுக்குள்ளே நான் போனதும் கையை மேலே உயர்த்தி, 'புரட்சி வெல்லட்டும்’னு இவர் மேடைல பேசுற மாதிரி உரத்தக் குரல்ல சொன்னார். அதிர்ச்சியில் உறைந்து விட்டேன். அப்போதைக்கு வேற எதுவும் பேசத் தோணலை. மற்ற தோழர்களோடு கட்சியின் தலைமை அலுவலகத்துக்குப் போய் என்ன நடக்குதுனு கவனிச்சிட்டு வந்தேன். அவ்வப்போது அலைபேசியில் பேசிப்போம்!'' என்ற கயல்விழியின் பேச்சில் எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக் கூடாது என்ற தயக்கம் எட்டி எட்டிப் பார்க்கிறது. ''உன் மனசுல பட்டதைச் சொல்லும்மா!'' என்று தைரியம் தருகிறார் சீமான்.

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...

''யார் முதலில் விருப்பத்தைச் சொன்னது?''

''இவர்தான்... 2012 ஜூன் 5-ம் தேதி சொன்னாங்க. நான் அதை எதிர்பார்க்கலை. எங்க அம்மாகிட்ட பேசுங்கனு சொல்லிட்டேன்!'' என்று கயல்விழி, கணவரைச் சுட்டிக்காட்ட, அங்கிருந்து தொடர்கிறார் சீமான்.

''திருமணமே வேண்டாங்கிற முடிவுலதான் இருந்தேன். ஆனா, நெடுமாறன் ஐயா, எங்க வீட்ல, என்னைச் சுத்தி உள்ளவங்க, என் மேல அக்கறைகொண்டவங்கனு பலர் தொடர்ச்சியா திருமணம் பண்ணிக்கச் சொல்லி நிர்பந்திச்சாங்க. என்னைப் பத்தின கச்சிதமான எதிர்பார்ப்பும் என் செயல்பாடுகள் பத்தின சரியான புரிதலும் உள்ள பெண் வாய்க்கணுமேனு தடுமாற்றம் இருந்தது. அந்தத் தயக்க சூழலில்தான் கயலைச் சந்திச்சேன். ஏதோ ஓர் ஈர்ப்பு. அதேசமயம் விருப்பத்தைச் சொல்றதுல எனக்கும் தயக்கம்தான். கயல்கிட்ட சொல்றதுக்கு முன் மூத்தவர் எங்க அண்ணன் சந்திரசேகர், தம்பிகளிடம் ஆலோசித்தேன். அவங்க கொடுத்த நம்பிக்கை காரணமா, 'சரியா இருக்கும்’னு முடிவுக்கு வந்த பிறகே என் விருப்பத்தை இவங்ககிட்ட சொன்னேன். அப்பா மணிவண்ணன், அண்ணன் சந்திரசேகர், நெடுமாறன் ஐயா போன்றோர்தான் கயல் வீட்டாரிடம் பேசி இந்தத் திருமணத்தை நடத்திவெச்சாங்க!''

''ஆனா, எங்க வீட்ல உடனடியா சம்மதிக்கலை'' என்று 'திடுக்’ தகவல் சொல்லி தொடர்கிறார் கயல்விழி. ''எனக்கும் அவர் மேல விருப்பம் இருக்குனு தெரிஞ்சதும், எனக்குத் தீவிரமா வேற இடங்கள்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, நான் இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு உறுதியாகவும், அதே சமயம் என் வீட்டினரின் சம்மதத்தோடதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பொறுமையாகவும் இருந்தேன். அதனால்தான் ஒரு வருஷம் காத்திருக்க வேண்டியதா போச்சு!'' என்று சொல்லும் கயல்விழியிடம், ''காதல் மலர்ந்த காலத்தில் மற்ற காதலர்கள் மாதிரி சாட்டிங், மீட்டிங்லாம் உண்டா?'' என்று கேட்டால், வெட்கம் பொங்கச் சிரிக்கிறார்.

''இவரை அலைபேசியில் பிடிப்பதே சிரமம். அப்படியும் பிடிச்சா, ஈழம், தலைவர், போராட்டம்னுதான் பேசுவார். அக்கா மதிவதனி மாதிரி இருக்கணும்னு அடிக்கடி சொல்வார். மூணு நாள் பேச முடியாமலே இருந்து, மூணு நாள் கழிச்சு இவர் பேசும் முதல் வார்த்தையிலேயே அவ்வளவு ப்ரியம் இருக்கும்!'' என்று கயல்விழி சொல்ல, ''நான் உன்னை ஏதோ பேசியே மயக்கிட்டேன்னு எழுதிடப் போறாங்க'' என்று சிரிக்கும் சீமான் தன் பங்குக்கு மனைவியின் பேரன்புகுறித்துப் பேசத் தொடங்கினார்.

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...

''கயல், மிகச் சிறப்பாப் பாடுவாங்க; நடனம் ஆடுவாங்க. இப்ப களறிகூடக் கத்துட்டு இருக்காங்க. பள்ளிக்கூடப் போட்டிகளில் நிறைய சினிமாப் பாடல்களைப் பாடி பரிசுகள் வாங்கியிருக்காங்க. அலைபேசியில் மட்டுமே பேசிட்டு இருந்த காலத்தில் அடிக்கடி பாடச் சொல்லிக் கேப்பேன். அது என்ன பாட்டும்மா... 'மாமனே உன்னைக் காணோமே’ங்கிற அர்த்தம் வருமே'' என்று சீமான் கேட்டதும், ''ஆத்தங்கரை மரமே... அரசமர இலையே'' என்று நினைவுபடுத்துகிறார் கயல்விழி.

''இன்னொரு பாட்டும் அற்புதமா பாடுவாங்க. ம்... 'கண்ணைக் கட்டிக்கொள்ளாதே, கண்டதையெல்லாம் நம்பாதே’ பாட்டு. திருமணத்துக்குப் பிறகு அதை நடனமாவும் ஆடிக் காட்டினாங்க. 'விண்ணோடும் முகிலோடும்’ பாட்டும் நல்லா பாடுவாங்க!'' என்று சீமான் பாட்டுக் கச்சேரி உரையாடலை முடிக்க நினைக்கையில், ''இந்தப் பாட்டை அலைபேசியிலேயே எதிரெதிர் முனையில் சேர்ந்து டூயட் மாதிரியும் பாடுவோம்'' என்று வெட்கம் பொங்கச் சிரிக்கிறார் கயல்விழி.

''சீமான் இயக்கிய படங்களில் உங்களுக்குப் பிடித்த படம்?'' என்று கேள்வியை முடிப்பதற்கு முன்பே, ''தம்பி'' என்கிறார் கயல்விழி.

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...

மறுவீடுக்கு இடிந்தகரைக்குச் சென்றுவந்த அனுபவம் சொல்கிறார் சீமான். ''இடிந்தகரை மக்களின் அன்பு காரணமாக அங்கே போனோம். உதயகுமார் அண்ணனுக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப மகிழ்ச்சியா சீர் கொடுத்தாங்க. கறி விருந்து வெச்சாங்க. ரெண்டு லட்சத்துக்கு மேலான மக்கள் ஒவ்வொருத்தர் மீதும் 300-க்கும் மேலான வழக்குகள் இருக்கு. ஆனா, யார் சொத்து மீதும் ஆசை இல்லாத பொய், புரட்டு, களவு இல்லாத நேர்மையான மக்கள்!'' என்று நெகிழ்கிறார் சீமான்.

''சரி... சீமான்கிட்டப் பிடிக்காத விஷயம் எது?'' என்று கேட்டதும், ''நேரத்துக்குச் சாப்பிடாதது, பட்பட்னு கோபப்படுறது'' என சற்றும் யோசிக்காமல் பதில் சொல்கிறார் கயல்விழி.

''கயல்விழிகிட்ட உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எதுவும் இருக்கா?'' என்று சீமானிடம் கேட்டால், ''எல்லா வேலைகளையும் இவங்களே இழுத்துப் போட்டுப் பார்க்கிறாங்க. கொஞ்சம் கூட ஓய்வே எடுக்க மாட்டேங்கிறாங்க. உதவுறதுக்கு ஆட்கள் இருக்கும்போதும், அந்த வேலைகளை இவங்களே மெனக்கெட்டு செய்றாங்க!'' எனும் சீமான், ''என்ன... நான் சொல்றது சரிதானே?'' என்று கயல்விழியைப் பார்த்துக் கேட்க, ''அந்த விஷயத்துல நான் அப்படியே உங்களை மாதிரி!'' என்று பளிச் பதில் அளிக்கிறார் கயல்விழி.

''ஹா.. ஹா.. ஹா!'' என்று வெடித்துச் சிரிக்கத் தொடங்குகிறார் புது மாப்பிள்ளை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு