Published:Updated:

20 அடி உயரத்தில் அப்துல் கலாமுக்கு பாம்பன் பாலம் அருகில் சிலை!

Vikatan Correspondent
20 அடி உயரத்தில் அப்துல் கலாமுக்கு பாம்பன் பாலம் அருகில் சிலை!
20 அடி உயரத்தில் அப்துல் கலாமுக்கு பாம்பன் பாலம் அருகில் சிலை!
20 அடி உயரத்தில் அப்துல் கலாமுக்கு பாம்பன் பாலம் அருகில் சிலை!

ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக 20 அடி உயரத்தில் அவரின் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடமான பேக்கரும்பில் ஏராளமான சுற்றுலா பயணிகள், மாணவ மாணவிகள் தினமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் அப்துல் கலாமுக்கு பாம்பன் பாலம் அருகில் சிலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அப்துல்கலாம் கடந்த மாதம் 27 ஆம் தேதி மேகாலயா மற்றும் ஷில்லாங்கில் நடந்த ஒரு கருத்தரங்கில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

இந்நிலையில் குடும்பத்தினரின் விருப்பப்படி, அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உள்ள பேக் கரும்பில் கடந்த 30 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு இன்றுடன் 9  நாள் ஆகிறது. நாள்தோறும் பொதுமக்கள், மாணவ மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேஸ்வரத்துக்கு பொதுவாக நாள்தோறும் வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்கள் கோவிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு, அப்துல்கலாம் அடக்கம் செய்யப்பட்ட பேக்கரும்புக்கு வந்து அஞ்சலி செலுத்துவதை பார்க்க முடிகிறது. மேலும் அவர்கள் கலாமின் வீட்டையும் ஆர்வமாக  பார்த்துச்  செல்கின்றனர்.

அவரின்  வீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலாமின் சாதனை படக்கண்காட்சியையும் பார்வையிட்டுச் செல்கின்றனர். ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி கோவிலை அடுத்து தற்போது கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அதிகமானோர் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அரிமா சங்கத்தின் சார்பில் அப்துல் கலாமிற்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சங்கத்தலைவர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "சென்னை கோல்டன் பிரண்ட்ஸ் அரிமா சங்கத்தினரும்,  ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அரிமா சங்கத்தினரும் இணைந்து ராமநாதபுரம் – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பாம்பன் பாலம் அருகில், 20 அடி உயரத்தில் பீடத்துடன் கூடிய இரும்புச் சிலை வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா, வருகிற செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் அரிமா சங்கத்தைச் சேர்ந்த கவர்னர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். சிலை வடிவமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது என்று அரிமா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.