Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

'கறுப்பு' தேச பக்தி!

நானே கேள்வி... நானே பதில்!

'கறுப்பு' தேச பக்தி!

Published:Updated:
##~##

''மின்வெட்டைத் தடுக்க கலைஞர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?''

 ''மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு சீட்டு வழங்கப்படவில்லை. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தால் மின் துறை அமைச்சர் பதவியே அமைச்சரவைப் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இந்த நடவடிக்கைகள் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?''

- நாஞ்சில் சு.நாகராஜன், பறக்கை.

''கலை, இலக்கியம், அரசியல் என்று எந்தத் துறைக்குச் செல்வதாக இருந்தாலும், எது அடிப்படையானது?''

''வாசிப்பு!

பாபா சாகேப் அம்பேத்கர், லண்டன் சென்று இருந்தபோது, 'எங்கே தங்க விரும்புகிறீர்கள்?’ என்று நண்பர்கள் கேட்டதற்கு, 'எங்கு நூலகம் அருகில் இருக்கிறதோ, அங்கு!’ என்றார்.

நானே கேள்வி... நானே பதில்!

ஒவ்வொரு படம் நடிப்பதற்கு முன்பும் கிடைக்கும் அட்வான்ஸில் முதல் 100 டாலர்களுக்குப் புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்.

'உங்களது சிறந்த புத்தகங்களைத் திருடிச் செல்பவர்கள், உங்களது சிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும்’ என்றார் வால்டேர்.

ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, அறிவின் கதவுகள் திறக்கின்றன!''

- பா.மதிவதனி, தர்மபுரி.

''ஒரே சஸ்பென்ஸா இருக்கு. சொல்லுங்க ப்ளீஸ்... கருணாநிதி ஏன் கிரைண்டர் அல்லது மிக்ஸி என்று அறிவித்தார்?''

''சிம்பிள். தனிப் பெரும்பான்மை என்றால் கிரைண்டர். கூட்டணி ஆட்சி என்றால் மிக்ஸி!''

- புதூர் பாலா, சேலம்.

''அன்றைய அரசியலுக்கும் இன்றைய அரசியலுக்கும் என்ன வித்தியாசம்?''

''ஏகப்பட்ட வித்தியாசம். அன்று கள்ள ஓட்டுப் போட காசு கொடுப்பார்கள். இன்று ஓட்டு போடவே காசு கொடுக்கிறார்கள்!''

- சிவம், திருச்சி.

''சோகமான முரண் நகை எது?''

''இப்போது மீன்களின் இனப் பெருக்கக் காலம் என்பதால், மீனவர்கள் 45 நாட்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீன் இனம் பற்றிக் கவலைப்படுபவர்கள், மீனவர் இனம் பற்றிக் கவலைப்படுவது இல்லையே என்று கவலைப்படுவதா? அல்லது, 45 நாட்களாவது தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் உண்டு என்று மகிழ்ச்சி அடைவதா?''

- பா.மஜீத், திருவண்ணாமலை.

''தேச பக்தி, தேசத் துரோகம் என்றால் என்ன சார்?''

''சமீபத்தில் இரண்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென் மீது தேசத் துரோக வழக்கை ரத்து செய்து, 'நக்சலைட் புத்தகத்தை வைத்திருப்பதாலேயே, ஒருவர் நக்சலைட் ஆகிவிட முடியாது!’ என்று கண்டனம் தெரிவித்தது. அதேபோல், 'வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்கிவைத்து இருப்பவர்களின் பட்டியலை வெளியிட முடியாது’ என்று மத்திய அரசு தெரிவித்ததற்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அப்பாவி பழங்குடி மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது தேசத் துரோகம் என்றால், ஒருவேளை இந்தியாவில் சம்பாதித்து வெளிநாடுகளில் கறுப்புப் பணம் சேமிப்பதுதான் தேச பக்தியோ, என்னவோ?''

- எஸ்.பிரதீமா, சென்னை-18

நானே கேள்வி... நானே பதில்!