Published:Updated:

பீப் பாடல் விவகாரம்: டிஜிபிக்கு உத்தரவிடக்கோரி சிம்பு புதிய மனு தாக்கல்!

விகடன் விமர்சனக்குழு
பீப் பாடல் விவகாரம்: டிஜிபிக்கு உத்தரவிடக்கோரி சிம்பு புதிய மனு தாக்கல்!
பீப் பாடல் விவகாரம்: டிஜிபிக்கு உத்தரவிடக்கோரி சிம்பு புதிய மனு தாக்கல்!

பீப் பாடல் விவகாரத்தில் புதிய வழக்கு பதியக்கூடாது என டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

பீப் பாடல் விவகாரம்: டிஜிபிக்கு உத்தரவிடக்கோரி சிம்பு புதிய மனு தாக்கல்!

நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளர் அனிருத் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்குகளை ரத்துசெய்ய கோரி நடிகர் சிம்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் கோவையில் தொடரப்பட்ட வழக்கில், தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த 4ம் தேதி, நீதிபதி ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "சிம்பு மீதான வழக்குகள் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவு என்பதால் முன்ஜாமீன் கேட்டுவரத் தேவையில்லை. கோவை பந்தயசாலை போலீஸ் முன் நாளைக்கு பதிலாக வரும் 11ம் தேதி சிம்பு ஆஜராக வேண்டும். முன்ஜாமீன் தேவையெனில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம்" என்று நீதிபதி உத்தரவிட்டதோடு, வழக்கையும் முடித்து வைத்தார்.

இந்நிலையில், பீப் பாடல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு இன்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், "ஒரே குற்றத்திற்காக பல இடங்களில் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. இதனால், பீப் பாடல் விவகாரத்தில் புதிய வழக்கு பதியக் கூடாது என அனைத்து காவல் நிலையத்துக்கும் சுற்றறிக்கை அனுப்ப டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர உள்ளது.