Published:Updated:

“அரசின் அசுர பலத்தை எதிர்க்க முடியவில்லை!”

சுப.உதயகுமாரனின் அபயக் குரல்பாரதிதம்பி, படங்கள்: எல்.ராஜேந்திரன்

##~##

டிந்தகரையில் ஓங்கி ஒலிக்கும் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டம், இரண்டு வருடங்களைக் கடந்தும் தொடர்கிறது. ஆனால், அந்த உண்ணாவிரதப் பந்தலில் ஓர் ஆண்டுக்கு முன்பு காணப்பட்ட உற்சாகமும் போர்க்குணமும் இப்போதும் இருக்கிறதா?

அணு உலைக்கு எதிரான மக்களின் அரசியல் உறுதிப்பாடு அப்படியே தொடர்கிறது. ஆனால், போராட்டம் ஒரு வரம்புக்கு மீறி நகர்ந்து செல்லாததால், மக்களிடம் பெரும் சோர்வு. பந்தல் முழுக்க நிரம்பியிருந்த மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.

அர்ப்பணிப்புமிக்க மக்கள்... அர்ப்பணிப்புமிக்க தலைவர்கள்... அணு உலை ஆபத்து தொடர்பாக இந்திய அளவில் ஒரு பொது விவாதத்தையே உருவாக்கிய இந்தப் போராட்டம், இனி எப்படித் தொடரும்?

இடிந்தகரைப் போராட்டப் பந்தலில் சுப.உதயகுமாரனைச் சந்தித்துப் பேசினேன்...

''இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இடிந்தகரையைவிட்டு வெளியில் வருவதாகக் கூறியிருக்கிறீர்கள். எனில், இந்தப் போராட்டம்  இறுதிகட்டத்தை எட்டிவிட்டதா?''

''இல்லை. போராட்டம் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது. அக்டோபர் 2-ம் தேதி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எங்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. இடிந்தகரையில் சில ஆயிரம் மக்களின் போராட்டமாக இருந்த இது, இன்று தமிழகம் முழுக்கப் பரவியிருக்கிறது. இந்த நிலையில் இப்போது எங்களுக்கு முக்கியமான ஒரு நெருக்கடி உருவாகி உள்ளது.

ஒரு பக்கம், மக்கள் உயிரைக் கடுகளவும் மதிக்காத பொய்களைத் துணிந்து சொல்கிற தரங்கெட்ட பாசிஸ சூழல் இங்கே நிலவுகிறது. இன்னொரு பக்கம், தாதுமணல் கொள்ளையர்கள் இடிந்தகரைக்குள் புகுந்து பணம் கொடுத்தும், சாதிய எண்ணத்தைத் தூண்டிவிட்டும், மிரட்டியும் எங்கள் மக்களுக்குள் பிரிவினையை உருவாக்கி வருகின்றனர். இந்த இரண்டு பிரச்னைகளையும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல நாங்கள் எண்ணுகிறோம். இதனால்தான் இங்கிருந்து வெளியேவரும் முடிவை எடுத்துள்ளோம். ஆனால், இந்த முடிவுக்கு மக்கள் இன்னும் சம்மதிக்கவில்லை. இதனால் வெளியேறும் தேதியும் முடிவு செய்யப்படவில்லை.

“அரசின் அசுர பலத்தை எதிர்க்க முடியவில்லை!”

அதற்கு முன்பு, இந்த ஊரில் எங்களுக்குச் சில கடமைகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளாக எங்களைப் பாதுகாத்தவர்கள் இந்த மக்கள். ஆகவே, ஊர் கமிட்டியிடமும், பெண்கள்- இளைஞர்களிடமும், 'நாங்கள் முதல்வரைச் சந்திக்கச் செல்லும்போது, ஒருவேளை கைது செய்யப்படலாம். அப்படி நடந்தால், நீங்கள் உங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமையாக இருந்து போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும். நாங்கள் சிறைக்குச் செல்வதால், இந்தப் போராட்டம் முடங்கிவிடக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறோம்!''

''போராட்டக் குழுவினர் முதல்வரைச் சந்திக்கச் சென்றால், இடிந்தகரையைத் தாண்டி வள்ளியூர் போவதற்குள் கைது செய்யப்படுவீர்கள். இதுதான் யதார்த்தம். அப்படி ஒருவேளை போராட்டக் குழுவினர் கைதுசெய்யப்பட்டால், காவல் துறையினர் தங்களை வன்மத்துடன் எதிர்கொள்வார்கள் என்று இடிந்தகரை மக்கள் அஞ்சுகின்றனர். 'எங்கிருந்தோ வந்தார்கள். போராட்டம் நடத்தினார்கள். நாங்களும் கலந்து கொண்டோம். இப்போது திடீர் எனக் கிளம்பிச் சென்றுவிட்டால், எங்கள் கதி என்ன?’ என்பது அவர்களின் அச்சம். அவர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு, போராட்டக் குழுவுக்கு இருக்கிறதுதானே?'

''நிச்சயமாக! மக்களிடம் அத்தகைய அச்சம் இருப்பது உண்மைதான். இப்போது அதைப் பற்றிதான் விவாதித்து வருகிறோம். இரண்டு ஆண்டுகளாக எங்களைப் பாதுகாத்த மக்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. உச்ச நீதிமன்றமே, 'மக்கள்மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்’ என கூறியிருக்கிறது. உயர் நீதிமன்றமும் இதே கருத்தை வலியுறுத்துகிறது. பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும்கூட இந்தப் பொய் வழக்குகளைக் கைவிட வேண்டும் என்று கோருகின்றனர்.

இவர்கள் அத்தனை பேரும் சொல்வதைக் கேட்காமல், வழக்குகளை வாபஸ் வாங்க மாட்டோம் என்றால், எங்கள் மக்கள் அப்படி என்ன தவறு இழைத்தார்கள்? பொதுச் சொத்துகளைக் கொள்ளை அடித்தோமா? சொத்துக் குவிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டிருக்கிறோமா? அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டோமா? இது ஜனநாயக நாடா? அல்லது அதிகாரிகள் தங்கள் மனதின் வன்மங்களைத் தீர்த்துக்கொள்ளும் எதேச்சதிகார நாடா?'

'' 'இனிமேல், இந்தியாவின் எந்த மூலையில் அணு உலை திறக்க நினைத்தாலும், மாபெரும் மக்களின் எதிர்ப்பையும் போராட்டங்களையும் எதிர்கொண்டாக வேண்டிய சூழலை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இதுதான் இடிந்தகரை போராட்டத்தின் வெற்றி’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். இப்போது அரசும் காவல் துறையும், 'இனிமேல் இந்தியாவின் எந்த மூலையில் அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினாலும், இதுதான் கதி என்று பாடம் புகட்டக் காத்திருக்கிறோம்’ என்கின்றன. எப்படி இதை எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

''நல்ல கேள்வி. ஆனால், இது இடி அமீன் ஆட்சி செய்த உகாண்டா அல்ல; ஹிட்லர் ஆட்சி செய்த ஜெர்மனியும் அல்ல. இது ஜனநாயக நாடு. ஊருக்குள் வந்து அடித்துத் துவைத்துப் போட்டுவிட்டுப் போய்விட முடியாது. அப்படிச் செய்தால், நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதே... அதில் மக்கள் பதில் சொல்வார்கள்!

ஆளும் வர்க்கம், சாதாரண மக்களின் குரல்களுக்கு மதிப்பு அளிப்பதில்லை என்பதை இங்குள்ள மக்கள் உணர்ந்துள்ளனர். அதே நேரத்தில் இந்த அரசுடன் மோதி வெற்றிபெறக்கூடிய சூழலும் இங்கு இல்லை.

நான் அடிக்கடி சொல்லும் உதாரணம்... ஒரு கணவன்- மனைவி இருக்கின்றனர். வாட்டசாட்டமான உடல்பலம் கொண்ட கணவன், மனைவியை அடித்து நொறுக்குகிறான் என்றால், அந்த மனைவி தானும் ஜிம்முக்குப் போய் உடலை வலுவாக்கி, அவனை அடிக்க முடியாது. மாறாக, கணவனின் தொந்தரவுகள் குறித்து அக்கம்பக்கத்தாரிடம் குற்றம் சுமத்தி, அவனுக்கு உணவுதர மறுத்து, அவனுடைய இயல்பு வாழ்க்கையைத் தடுத்து நிறுத்தி வழிக்கு வரவைக்க வேண்டும். இது ஓர் ஒழுக்கபூர்வமான அழுத்தம் (a moral pressure). எங்கள் போராட்டமும் இத்தகையதுதான். இது, அறவழிப் போராட்டம். இப்படித்தான் இதைச் செய்ய முடியும். இதற்கு மேல் அரசை எதிர்த்து எங்களால் போராட முடியாது. அரசிடம் இருக்கும் அசுர பலத்தை எதிர்த்து நிற்கும் சக்தி எங்களிடம் இல்லை!'

“அரசின் அசுர பலத்தை எதிர்க்க முடியவில்லை!”

''இங்கிருந்து நான்கு கி.மீ. தூரம் தள்ளி இருக்கும் கிராமங்களில்கூட, 'அணு உலை ஆபத்தானது’ என்பதைத் தாண்டி இந்தப் போராட்டத்தின் அரசியல் நியாயம் கொண்டு சேர்க்கப்படவில்லை. இரண்டு வருடங்கள் இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது. குறைந்தபட்சம் கடலோரக் கிராமங்களையேனும் திரட்டியிருந்தால், எல்லையோர ராணுவம் போல எழுந்து நின்று, அரசைப் பணியவைத்திருக்க முடியுமே?''

''அதுதான் அரசின் வெற்றி! எவ்வளவு பெரிய போராட்டமாக இருந்தாலும், அதில் பங்கேற்கச் செய்யாமல் மக்களைப் பிளவுபடுத்தி வைப்பதுதான் அரசின் முக்கியமான நோக்கம். அதை அவர்கள் வெற்றிகரமாகச் செய்துள்ளனர். மற்றபடி அணு உலையின் ஆபத்துகளை அறிவியல்பூர்வமாக தொடர்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறோம். சட்டரீதியாக உச்ச நீதிமன்றம் வரையிலும் விடாமல் போராடி வருகிறோம். அரசியல்ரீதியாக அணு உலை குறித்து அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு நிலைப்பாடு எடுக்க நிர்பந்தித்துள்ளோம்.

அரவிந்த் கெஜ்ரிவால் இங்கு நேரடியாக வரும் அளவுக்கு எங்கள் போராட்டத்தின் வீச்சு டெல்லி வரையிலும் எதிரொலித்தது. இடிந்தகரைப் பெண்கள் கொல்கத்தா, டெல்லி வரையிலும் சென்று அணு உலை அபாயம் குறித்துப் பிரசாரம் செய்துள்ளனர். ஜப்பானில் நடைபெறும் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில், இடிந்தகரை முக்கிய அம்சமாகப் பேசப்படுகிறது. ஆகவே, சம காலத்தில் அணு உலை அபாயம் தொடர்பாக இந்திய அளவில் நடத்தப்பட்ட முக்கியமான போராட்டம் இது. 'இடிந்த கரைக்குள்ளேயே இருந்து என்ன சாதித்தீர்கள்?’ என்றால், அதுதான் இந்தப் போராட்டத்தின் முக்கியமான வெற்றி என நினைக்கிறேன்.'

''அப்படியானால், இதை இதற்கு மேல் தொடர முடியாத அளவுக்குப் போராட்டக் குழுவினருக்கும் மக்களுக்கும் இப்போதுள்ள நெருக்கடி என்ன?''

''கடந்த இரண்டரை ஆண்டுகள் இல்லாத அளவில் இப்போது நாங்கள் மிகப் பெரிய அபாயம் ஒன்றில் சிக்கியிருக்கிறோம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எங்கள் மீது பத்துக்கும் அதிகமான பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. தாதுமணல் கொள்ளையர்கள், மக்களிடையே சாதியை வைத்தும், பணத்தைக் கொடுத்தும் பிரிவினையைத் தூண்டி வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் சிலருக்கு பணத்தாசை காட்டி, அவர்கள் மூலமாகவே அடக்கு முறையை ஏவிவிடுகின்றனர். இடிந்தகரையில் 5,000 நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக பொய் செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்புகிறது, காவல் துறை. எங்கள் மீது மிகப் பெரிய வன்முறை வெறியாட்டத்தை நடத்துவதற்காக காவல் துறையும், தமிழக அரசும், அணுமின் நிர்வாகமும், தாதுமணல் கொள்ளையர்களும் கூட்டு சேர்ந்துள்ளனர். நாங்கள் அடித்து நொறுக்கப்பட்டால், அதற்கு இவர்கள்தான் பொறுப்பு; தமிழக மக்கள்தான் சாட்சி. இதை ஆனந்த விகடன் மூலமாக விடுக்கும் அபயக்குரலாக எடுத்துக்கொள்ளுங்கள்!'

''அணு உலையில் இருந்து கதிரியக்கம் வெளியாகும் அபாயம் உள்ளது. ஆகவே அதை எதிர்க்கிறீர்கள். இதுவாவது எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்து. ஆனால், தாதுமணல் கொள்ளையால் ஏற்கெனவே தென் தமிழகக் கடற்கரை பெரும் கதிரியக்க அபாயத்தில் சிக்கியிருக்கிறது. அந்த அபாயத்தை உருவாக்கும் வி.வி.மினரல்ஸ் குறித்தோ, வைகுண்டராஜன் குறித்தோ... ஏன் ஆரம்பத்திலேயே வீச்சுடன் எதிர்க்கவில்லை?''

“அரசின் அசுர பலத்தை எதிர்க்க முடியவில்லை!”

''நான் தனிப்பட்ட வகையில் 2002-ம் ஆண்டில் இருந்து இந்த தாதுமணல் கொள்ளையர்களுக்கு எதிராகத் தொடர்ந்து பேசியும் இயங்கியும் வருகிறேன். ஆனால், கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டத்தில் இதுகுறித்துப் பேசாததற்குக் காரணம், இந்தத் தாதுமணல் கொள்ளையர்களின் அனுதாபிகள் எங்கள் ஊர்களில் இருக்கிறார்கள். அதைப் பேசினால், ஊர் மக்களிடையே பிளவு வரும்; சமுதாயப் பிரச்னைகள் எழும். இந்தப் போராட்டம் இவ்வளவு நாட்கள் நீடித்திருக்காது. இப்போது தாதுமணல் கொள்ளையர்களால் வரும் நெருக்கடி அப்போதே வந்திருக்கும். அதனால்தான் இதை ஆரம்பத்திலேயே பேசவில்லை. ஒரே சமயத்தில் இரண்டு பிரச்னைகளை எடுத்துப் போராடுவதற்கு நிறைய வலுவும் சக்தியும் தேவை. அது எங்களிடம் இல்லை. நாங்கள் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்தானே தவிர, அனைத்துத் தீய சக்திகளுக்கு எதிரான மக்கள் இயக்கம் அல்ல!'

''இந்தப் போராட்டத்தில் இப்போதும் நம்பிக்கை அளிக்கிற அம்சங்களாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?''

''உண்மை, ஒழுக்கம், நேர்மை, நிதானம்... ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும், சொந்த நலன்களை மறந்து முழு அர்ப்பணிப்புடன் மக்களுக்காகப் போராடுபவர்கள். 'தூய்மை, பொறுமை, நிலைத்திருத்தல்’ என விவேகானந்தர் குறிப்பிடும் மூன்று முக்கியமான அம்சங்களைக் கடைப்பிடித்து வருகிறோம். 'பைய வித்து முளைக்கும் தன்மை போல்’ என்று பாரதியாரின் வாக்குக்கேற்ப, இந்தப் பிரபஞ்சத்தைக் காப்பாற்றும் பெரும் கடமையுடன் எங்கள் பயணம் தொடர்கிறது!'