Published:Updated:

‘லைக்’கிட்டவரை லைஃப் உள்ளவரை நினை!

அறிவு, ஓவியங்கள்: கண்ணா

##~##

இப்போதெல்லாம், பல் துலக்குவது முதல் படுக்கைக்குப் போவது வரை எல்லாவற்றும் சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் போட்டு, அவற்றுக்கு நான்கைந்து லைக்ஸ் வாங்கினால்தான் நிம்மதியாகத் தூக்கமே வருகிறது! இது இன்னும் கொஞ்சம் முற்றினால் என்னவெல்லாம் ஆகும்?

'அக்கவுன்ட் இல்லா மனிதன் அரை மனிதன்’, 'ஆள் பாதி அக்கவுன்ட் பாதி’... போன்ற பழமொழிகள் உருவாகக்கூடும்.

•  ஃபேஸ்புக், ட்விட்டர்ல மூழ்கிப்போனவங்களை, 'மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கே?’, 'என்ன நடக்குது இங்கே?’னு கேட்டா கோபப்படுவாங்க. What’s on your mind?’, ‘what’s happening here?’னு கேட்டாதான் நம்மளை லைக் பண்ணுவாங்க.

•  உணவு பற்றிப் பேசும்போது... 'நான் வெச்ச சாம்பாருக்கு நீங்க இன்னும் லைக் போடல’, 'அம்மா, இன்னிக்கு காலேஜ்ல என் லஞ்சை அஞ்சு பேர் ஷேர் பண்ணாங்க... மூணு லைக்ஸ்’, 'என்ன... இட்லி சுடுற கல்லு மாதிரி இப்படிப் பண்ணினா, ரிப்போர்ட் ஸ்பேம்னு குடுத்திருவேன் பாத்துக்கோ’, 'இன்னைக்கு நைட் டிபன் இட்லி, உப்புமா. காலையில போட்ட ஸ்டேட்டஸ்ல உப்புமானு சேத்துக்கிட்டாப் போதும்!’ - இப்படியாக மாறிவிடும் உரையாடல்கள்.

•  கல்யாணத்துக்குப் பெண் பார்ப்பதை ஆன்(ண்)லைனிலேயே முடித்துக்கொள்வார்கள். ஃபேக் ஐ.டி-யை நம்பி சிக்ஸ்பேக் வெப்பாங்க. கடைசியில் உண்மை தெரிஞ்சு, 'அவனா நீயி?’ என்று ஃபீல் பண்ணுவாங்க.

‘லைக்’கிட்டவரை லைஃப் உள்ளவரை நினை!

•  'மாப்பிள்ளை பெரிய இடம். இவருக்கு ஃபேஸ்புக், ட்விட்டர்ல எக்கச்சக்க ஃபாலோயர்ஸ். அதுக்குத் தகுந்த மாதிரி சீர் செஞ்சுடுங்க. அப்புறம் மாப்பிள்ளை போடுற ஸ்டேட்டஸுக்கு, ட்விட்டுக்கு உங்க சைடுல இருந்து குறைஞ்சது 100 லைக்ஸ், ஆர்.டி-யாவது பண்ணணும்’னு கண்டிஷன் போடுவாங்க.

•  பெண் வீட்டார், 'நூத்துக்கணக்குல ஃபாலோயர்ஸ் வெச்சிருக்கவங்ககிட்ட எப்படி சம்பந்தம் பேசுறது? நம்ம ஸ்டேட்டஸுக்கு சரிவருமா? (இந்த ஸ்டேட்டஸ் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அல்ல.) இன்னைக்கெல்லாம் அவங்க ஒரு ஸ்டேட்டஸ் போட்டா, எத்தனை லைக்ஸ் வரப்போகுது?’னு யோசிக்க ஆரம்பிப்பாங்க!

•  ஸ்டேட்டஸ் லைக் போடாததால், ட்வீட், ஆர்.டி. பண்ணாததால் விவாகரத்து! (ஒரு ஸ்டேட்டஸைக்கூடப் புரிஞ்சுக்காம, லைக் போடாம, ஆர்.டி. பண்ணாம இருக்கிறவன்கூட எப்படி குடும்பம் நடத்துறது?) - இப்படிக்கூட செய்தி வரலாம்!

•  வெளியூர் போகணும்னா, முதல்ல ஸ்டேட்டஸ்தான் போடுவாங்க. டிக்கெட் போடுறது, ரூம் போடுறதெல்லாம் அப்புறம்தான்!

•  குழந்தைகள் 'Wall’ பையன்களாக ஆகியிருப்பார்கள். அவர்களுக்கு லைக் செய்வதற்கென கட்டைவிரல் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும். பள்ளியில் அவர்களுக்கான அசைன்மென்ட்டுகள்... 'கூகுளின் பயன்கள் குறித்து 140 எழுத்துக்கு மிகாமல் ட்விட்டுக’, 'இணைய சுதந்திரம் பற்றி ஒரு ட்விட் லாங்கர் வரைக’... என்ற ரீதியில் இருக்கும்.

•  ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகளில் ஃபாலோ செய்யாமல், நேரில் ஃபாலோ செய்து கிண்டல் அடிப்பவர்களுக்கு அதிகபட்சத் தண்டனையாக அவர்களின் அக்கவுன்ட்டை ஹேக் செய்வது, டி-ஆக்டிவேட், ப்ளாக் செய்வது ஆகியவை அரங்கேறக்கூடும்.

•  கிராமப் பஞ்சாயத்துகளில், 'எல்லோரும் இவனை ப்ளாக் பண்ணிடுங்க; அன்ஃபிரண்ட் பண்ணுங்க; இவனோட ஃபேஸ்புக் ஸ்டேட்டஸுக்கு யாரும் லைக், ஷேர் பண்ணக் கூடாது; ட்விட்டர்ல ஆர்.டி-யோ, ஃபேவரைட்டோ யாரும் பண்ணக் கூடாது...’ என்று புதிதாகத் தண்டனைகள் வர ஆரம்பிக்கும். இப்படி தண்டனைகள் கடுமையானால்தான்(?!) குற்றங்கள் குறையும்.

•  'பசிக்குதும்மா... ஏதாச்சும் ஷேர் பண்ணுங்க தாயி...’ என்ற குரல்கள் ஒலிக்கக்கூடும். 'வீட்ல பிரியாணின்னு ஸ்டேட்டஸ் போட்டுட்டு இப்படி பழைய சோறு போடறீங்களே தாயி?’ என்றும் அவர்கள் சொல்லக்கூடும்!

•  இறப்புக்குப் பிறகு, ட்விட்டர் அக்கவுன்ட்டை மகனுக்கும், ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை மகளுக்கும் உயிலாக எழுதிவைத்து, 'நான் போகிறேன் மேலே மேலே... பூலோகமே காலின் கீழே’ என இறுதி ஸ்டேட்டஸ் போடுவாங்க. அதுக்கும் நம்ம ஆளுங்க லைக்ஸ் போடுவாங்கள்ல?