Published:Updated:

கண்ணுக்கும் காதுக்கும் விருந்து!

வீயெஸ்வி, படங்கள்: செல்லா

##~##

முதல் தடவையாக அமெரிக்காவில் இணைந்து மேடை ஏறினார்கள். செப்டம்பர் மாதம் இந்தியாவில் ஆரம்ப போணி, மும்பையில்; அடுத்து பெங்களூரு. சென்ற வாரம் சென்னையில் பாட்டும் பரதமும் கூட்டணி அமைத்து மேடை ஏறி, '180 நிமிடங்களும் நமதே’ என்று அலுப்பு இன்றி ஆடி, பாடியது!

'சாயுஜ்யா’

நடனமணி பிரியதர்ஷினி கோவிந்தும் (கலாக்ஷேத்ராவின் டைரக்டர்) பாடகர் டி.எம்.கிருஷ்ணாவும் சேர்ந்து வழங்கிய நிகழ்ச்சி. முன்னவர் ஜதிகளுடன் ஆட, பின்னவர் ஸ்வரங்களுடன் பாட... கண்ணுக்கும் காதுக்கும் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு!

முதலாவதாக அலாரிப்பு. மிருதங்கம் (விஜயராகவன்), நட்டுவாங்கத்துடன் (கே.பாலகிருஷ்ணன்) பிரியதர்ஷினி நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்க, மேடையின் இன்னொரு பக்கம் கிருஷ்ணா குழுவினர் அரை இருட்டில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து, தியாகராஜர் கடைசியாகப் பாடியதாகச் சொல்லப்படும் வாகதீஸ்வரி ராகப் பாடலை (பரமாத்முடு...) கிருஷ்ணா பாட, நடனமணி க்ரீன் ரூமுக்குப் போய்விட்டார். ஜுகல்பந்தி கச்சேரிகள் மாதிரி அவர் ஒன்று, இவர் ஒன்றாக தனித்தனி பரிமாறல் செய்யப் போகிறார்களோ என்ற நினைப்பில் மண் விழுந்தது, மூன்றாவது ஆரம்பமானபோது!

கண்ணுக்கும் காதுக்கும் விருந்து!

பைரவி ராகத்தை லேசுபாசாக ஆலாபனை செய்துவிட்டு, மில்டன் நடையில் சியாமா சாஸ்திரி இயற்றிய ஸ்வர ஜதியை ஆரம்பித்தார் கிருஷ்ணா. வயலினும் (ஹெச்.என்.பாஸ்கர்) மிருதங்கமும் (அருண்பிரகாஷ்) சுவராக நிற்க, சும்மா வூடு கட்டி விளையாடின. கால்களில் சலங்கைகளுடன் பிரியதர்ஷினி உடல் சேர்ந்துகொள்ள, அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஸ்வரங்களும் ஜதிகளுமாக அன்னை காமாட்சியை கண் முன் நிறுத்தினார். தடங்கலுக்கு வருந்தும் விதமாக, இடையில் ஓரிருமுறை வலது கால் சலங்கை கழன்று விழ, சங்கடத்துடன் அதை பிரியதர்ஷினி சமாளித்ததும் அழகுதான்!

கோபிகையுடன் கிருஷ்ணன் (டி.எம்.கிருஷ்ணா அல்ல; மாயக் கண்ணன்!) நிகழ்த்திய உரையாடலை முடித்துவிட்டு, இறுதியாக தில்லானா டைப் ராகமாலிகை உருப்படி. கலைஞர்கள் வரிசைக்கட்டி மேடையில் நிற்க, எதிர்பார்த்த மாதிரியே ஸ்டாண்டிங் ஓவேஷன்!