ஸ்பெஷல் -1
Published:Updated:

சரிகமபதநி டைரி 2010

சரிகமபதநி டைரி 2010

##~##
ர்னாடக இசை உலகிலும் ரஜினி, கமல் உண்டு. (யார் ரஜினி, யார் கமல் என்பதை ரசிகர்களின் யூகத்துக்கே விட்டுவிடுவோம்!) அடுத்து, சூர்யாவின் இடத்தைப் பிடித்துக்கொண்டு இருப்பவர், சிக்கில் குருசரண்! கவர்ந்து இழுக்கும் கவர்ச்சியான குரல் வளத்துடன், கச்சேரிக்குக் கச்சேரி திறமையை வளர்த்துக்கொண்டுவரும் இளம் 'சிங்கம்’ இவர்!

 முகாரி ராகப் பாடலில் தியாகராஜர் சொல்லிஇருப்பதுபோல், சங்கீத சாஸ்திர ஞானம்... அன்பும், பக்தியும், இறை அருளும், புகழும், செல்வமும் அளிக்கக்கூடியது. குருசரண் இதைப் புரிந்துகொண்டு தியாக பிரம்ம கான சபாவில் முகாரியை அனுப வித்துப் பாடினார். சோக ராகம் என்ற முத்திரை முகாரி மீது குத்தப்பட்டு இருந்தாலும், ஆலாபனையில் அழுது வடியாமல் நேர்த்தியாக அதைச் செதுக் கினார்.

சரிகமபதநி டைரி 2010

மெயினாக பூர்வி கல்யாணி. சாக்பீஸில் சரக்என்று கோடு இழுப்பதுபோல், எடுத்த எடுப்பில் பூர்வி கல்யாணியைக் கோடிட்டுக் காட்டிவிட்டு, பூர்வீகத்தில் இருந்து அதை அலசி, ஆராய்ந்து ஜாதகம் கணிப்பது மாதிரி, வெவ்வேறு கட்டங்களில் அந்த ராகத்தின் சங்கதிகளை அழுத்தமாக அமர வைத்தார். முத்துசாமி தீட்சிதரின் மாஸ்டர் பீஸ் பாடல்களில் ஒன்றான 'மீனாட்சிமே முதம் தேஹி’ பாடலை எடுத்துக்கொண்டு, 'மரகதச் சாயே... சிவஜாயே-’வில் நிரவல் செய்து, ஸ்வரங்களில் கணக்குவழக்கு வைத்து சிக்கலில் மாட்டிக்கொள் ளாமல் சிம்பிளாகப் பாடி... திருப்தி!

முடிவுப் பகுதியில், 'ஸ்ரீ கிருஷ்ணம்...’ என்று துவங்கும் நாமாவளியை விருத்தமாகப் பாடும்போது சுபபந்துவராளியில் இருந்து ஸ்வர பேதம் செய்து மோகனத்துக்கும், சுருட்டியில் இருந்து மோகன கல்யாணிக்கும் தாவிச் சென்று சரண் திரும்பி வந்தது ச்சோ ஸ்வீட்!

வயலின் எஸ்.வரதராஜன், முதல் பேதம் செய்ய முடியாமல் விருத்தத்தில் திணறியது வருத்தம்! இரண்டாவது சுற்றில், (சுருட்டி to மோகனகல்யாணி) 'இந்த விளையாட்டுக்கே நான் வரலே...’ என்பதுபோல், சுருட்டியோடு வாலைச் சுருட்டிக்கொண்டுவிட்டார்.

எல்லாம் சரி. முகாரி மற்றும் பூர்வி கல்யாணியில் பெரிய ஸ்வரங்களை நீட்டி முழக்கிப் பாடி, கைதட் டல்களை அள்ளிய குருசரண், அந்த வாய்ப்பை வயலின் வரதுவுக்குக் கொடுக்காமல்விட்டது அநீதி!

சரிகமபதநி டைரி 2010

ராசா... நீங்க பங்கு போட்டுக்கொள்ள வேண்டியது ஸ்வரங்களையும், கைதட்டல்களையும்தானே! அதுக்குப்போய் பயப்படுவானேன்?!

டி.என்.சேஷகோபாலனின் கச்சேரிகள் ஆர்ட் ஃபிலிம் மாதிரி! எடுத்தாளும் ஒவ்வொரு ராகத்திலும் பாடலிலும், அழுத்தமும் ஆழமும் இருக்கும். ஜனரஞ்சகம் என்ற போர்வையில் மசாலாக் கலப்பு இருக் காது.  சினிமாத்தனமான சீப் சங்கதிகள் இருக்காது. அதேமாதிரி, ஆர்ட் ஃபிலிம் மாதிரியே இவருடைய கச்சேரிகளுக்குக் கூட்டமும் அலைமோதுவது இல்லை!  கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸில், முக்காலே மூணு வீசம் காலி நாற்காலிகளுக்கு அவர் பாட நேரிட்டது பரிதாபமான காட்சி.

பெண்டாட்டி, பிள்ளைகளே சொல் பேச்சு கேட்காத இந்தக் காலத்தில் சேஷகோபாலனின் குரல், அவர் சொன்னபடி எல்லாம் கேட்கிறது! 'மேலே போ’ என்று உத்தரவிட்டால் போகிறது. 'கீழே வா’ என்று கட்டளையிட்டாலும் அடிபணிகிறது. 'மேலே கீழே மாறி மாறிப் போய் வா’ என்றால், அந்த கம்பீரமான குரல் குஷியாகிவிடுகிறது!

ஹம்சத்வனியில் வாதாபி, அசாவேரியில் சந்திரம் பஜ மானஸ, நாகஸ்வராளியில் ஸ்ரீ சங்கர குரு வரம் என்று அன்றைய பட்டியல் ஆரம்பமாகி, விஜயசரஸ்வதி ராகத்தில் மையம்கொண்டு நின்றது. புயல் மாதிரி அந்த ராகத்துக்குப் புது உருவம் கொடுத்து வழிபட்டார் சேஷகோபாலன். தன்னுடைய குருவின் குருவான ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இயற்றிய 'சரணம் விஜய சரஸ்வதி’ என்று துவங்கும் பாடலில் சிட்ட ஸ்வரங்கள் எல்லாம் சேர்த்துப் பளீரிடவைத்தார்.

பின்னர், சங்கராபரணத்தில், சேஷகோபாலன் பிராண்ட் சங்கதிகள். நடுவில், ஸ்வர பேதம் செய்து தோடிக்கு ஒரு 'ஹலோ’ சொல்ல ஆசைப்பட்டு, லைன் கிடைக்காமல் போகவே மீண்டும் ஆபரணத்தையே தொடர்ந்து அழகுபடுத்தினார்!

மிருதங்கத்துக்கு வலிக்காமல், கை விரல்களைச் சேதப்படுத்திக்கொள்ளாமல், இதமாக, இனிமையாக, மயிலிறகு வருடலாக மிருதங்கம் வாசிக்கும் டெக்னிக்கை இன்றைய இளைஞர்கள் வேலூர் ராமபத்ரனிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வளவு ஏன்? ஆவேசம் வந்த மாதிரி மிருதங்கத்தை லெஃப்ட் அண்ட் ரைட் வெளுத்து வாங்கும் ஒரு சில சீனியர்களும்கூட இவரிடம் பாடம் படிக்கலாம்!

னைவியை மரியாதையுடன் நடத்தி, அவளைக் கண் கலங்காமல் பார்த்துக் கொண்டால் ஐஸ்வர்யம் பெருகுமாம்.

'அதற்கென்று மனைவியை நிற்கவைத்து, அவளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. நமக்கு அர்ச்சனை செய்யும் வேலையை அவங்க பார்த்துப்பாங்க!' என்றார் விஜய் சிவா.

ஜெயா டி.வி-யின் மார்கழி மகா உற்சவத்துக்காக இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு: ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம்.

அன்றைய தினம் கிட்டத்தட்ட ஒரு சங்கீத உபன்யாசமே நடத்திவிட்டார் விஜய் சிவா! அதாவது, ஆயுள் என்று எடுத்துக்கொண்டு, அதுபற்றி சிறு விளக்கம் கொடுத்துவிட்டு (ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு மூச்சுவிடுகிறோம், ஒருவர் 100 வயது வாழ்ந்தால், அவர் எத்தனை கோடி மூச்சுவிட்டிருப்பார் என்பது மாதிரியான புள்ளிவிவரக் கணக்குகள்!) ஆயுள் தொடர்பான தீட்சிதர் கீர்த்தனை ஒன்றைப் பாடினார்.

அதே மாதிரி, ஆரோக்கியம்பற்றிப் பேசும்போது, சாப்பாட்டு விஷயம் அத்தனையையும் அக்குவேறு ஆணிவேறாக அலசினார். உளுந்தும் தயிரும் சேர்ந்தால் அது விஷத்துக்குச் சமம் என்று சொல்லப்பட்டு இருக்கிறதாம். (இனிமேல் ஹோட்டலுக்குப் போனால், ஒரு ஆனியன் ஊத்தப்பம், ஒரு பிளேட் விஷம் என்றுதான் ஆர்டர் செய்ய வேண்டும். விஷம் = தயிர் வடை!) பிறந்த குழந்தைக்கு முதல் தடவை வலது மார்பில் இருந்துதான் பாலூட்ட வேண்டுமாம். இடது மார்பில் இருந்து ஆரம்பித்தால், குழந்தை வளர்ந்ததும் நாத்திகனாகிவிடும் என்று சொல்லப்பட்டு இருக்கிறதாம்!

ஐஸ்வர்யம்பற்றிச் சொல்லும்போது, எப்படி மோரைக் கடையக் கடைய வெண்ணெய் திரண்டு வருகிறதோ, அதுமாதிரி ஒருவனுக்கு லட்சுமி வர வேண்டும் என்று 'பாக்யாத லக்ஷ்மி பாரம்மா’ பாடலில் புரந்தரதாசர் குறிப்பிட்டு இருப்பதை விவரித்துப் பாடினார் விஜய் சிவா.

'வெங்காயம் மிளகு சுக்குண்டு... உன் காயம் எதுக்கடி’ என்ற குதம்பைச் சித்தரின் பாடலையும் விட்டுவைக்க வில்லை அவர்!

கையில் ஒரு துண்டுச் சீட்டுகூட இல்லாமல், இரண்டு மணி நேரத்துக்குத் தனது நினைவுப் பெட்டகத்தில் இருந்து மடை திறந்த வெள்ளமென சாஸ்திர சம்பிரதாயங்களையும், சாஸ்த்ரீய சங்கீதத்தையும் நகைச்சுவையோடு பொழிந்த விஜய் சிவாவுக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் மூன்றும் கை கூடட்டும்!

கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியின் சூப்பர் சீனியர் மாணவி, எஸ்.சௌம்யா. 90-ல் இங்கே பி.எஸ்ஸி., பட்டம் பெற்றார். அதற்குப் பின் மேலே மேலே படித்து, பட்டங்கள் பல பெற்ற பின்னரும் இன்னும் படித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், பாட்டை அவரும் பாட்டு அவரையும் விடவில்லை!

மீனாட்சி சுந்தரராஜன் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் மீனாட்சியில் பாடியது இந்த புடவை கட்டிய குயில்! சுருட்டி வர்ணத்திலும், தொடர்ந்த மாயாமாளவகௌள ராகப் பாடலின்போதும் ஒலிபெருக்கி அவருக்குத் திருப்திகரமாக அமையவில்லை. அன்றைய தினம் விதிக்கப்பட்டது அவ்வளவுதான் என்று பெருந்தன்மையுடன் தீர்மானித்து, மைக்குடன் மல்லுக்கட்டுவதை நிறுத்திவிட்டார்!

சரிகமபதநி டைரி 2010

'கண்ணாடியையத்த கன்னங்களுடன் எழில் மிகுந்த உன் திருமுகத்தைக் காண ஆசைகொண்ட என்னருகில் நீ வராதது ஏன்?’ என்று ராமனைப் பார்த்துக் கேட்பார் தியாகராஜர் ('கத்தநுவாரிகி). சௌம்யா மெயினாக எடுத்துக்கொண்டது தோடி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலைத்தான். சூப்பரான தோடி அது. பூவாசம் மனதை வருட, மார்கழித் திங்களில் பனி விழும் பொன்மாலைப் பொழுதில் மொட்டை மாடியில் வானம் பார்த்து உட்காரும்போது ஏற்படும் சுகமும் குளுமையும் சௌம்யாவின் தோடியில் அனுபவிக்க முடிந்தது. கீழ் ஸ்வரங்களில் நீண்ட நேரத்துக்கு ராகத்தைத் தவழவிட்டு, ஈரேழு நிமிடங்களுக்கு சௌம்யா சொக்கவைத்தது நிஜம்!

அன்றைய கச்சேரியில் ஒரு பெரிய ரிஸ்க் எடுத்தார் அவர். அதாவது, அம்ருத வர்ஷிணி ராகத்தைப் பாடினார்! அதுவும், வறட்டு பூமியில் தீட்சிதர் பாடி மழை பொழியவைத்த 'ஆனந்தாம்ருதாகர்ஷணி’ பாடலையே பாடினார்! சௌம்யா அம்ருதவர்ஷிணியைப் பாடி முடித்ததும் வானம் பொத்துக்கொண்டு வந்திருந்தால், சென்னை என்ன கதி ஆகியிருக்கும்?!

பாக்களில் விருது வழங்கப்பட்டதும், விருது பெற்ற கலைஞர்கள் அத்தனை பேரையும் வரிசையாக நிற்கவைத்து போட்டோகிராஃபர்கள் 'க்ளிக்’குவது வழக்கம். அப்போது கலைஞர்கள் மறுபடியும் ஒருமுறை சால்வை அணிந்து, நினைவுப் பரிசுகளைக் கையில் வைத்துக் கொண்டு, கேமரா பார்த்துப் சிரித்த முகமாய் நிற்பார்கள்!

தியாக பிரம்ம கான சபாவில் விருது பெற்ற சஞ்சய் சுப்ரமணியம், போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது நினைவுப் பரிசைக் கையில் வைத்துக்கொள்ள மறுத்துவிட்டார்! இவரைப் பின்தொடர்ந்து விருது பெற்ற இன்னொரு கலைஞரான வயலின் நாகை முரளிதரனும் நினைவுப் பரிசை டீப்பாய் மீது படுக்க வைத்துவிட்டார்! அன்று விருது பெற்றவர்கள் ஐவர். போட்டோ ஆல்பத்தில் மூன்று பேரின் கையில் நினைவுப் பரிசு இருக்கும். இருவரிடம் இருக்காது!

ஸோ வாட்?!

- டைரி புரளும்...