Published:Updated:

தமிழகத்தின் தங்க மின்னல்கள்!

சார்லஸ், படங்கள்: ஆ.முத்துக்குமார்

##~##

 பலதள விளையாட்டுக் களங்களில் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக மின்ன இருக்கும் இளைஞர்களைப் பற்றிய பெருமித அறிமுகம் இங்கே...

மீனாட்சி, 17

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீச்சல்

துபாயில் நடைபெற்ற உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட ஒரே தங்க மீன்! 12-ம் வகுப்பு மாணவியான மீனாட்சி, இந்திய அளவில் 25 பதக்கங்கள் வென்றிருக்கிறார். ''உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் உலகின் டாப் ஸ்விம்மர்களை நேரில் பார்க்க முடிந்ததோடு, அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளவும் முடிந்தது. இதுபோன்ற சர்வதேச அனுபவங்கள் கிடைத்தால் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும்'' என்கிறார் மீனாட்சி, விழிகளில் நம்பிக்கை ஈரம் மின்ன!

தமிழகத்தின் தங்க மின்னல்கள்!

ஸ்னேகாதேவி, 16

டென்னிஸ்

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி, ஸ்னேகாதேவிக்கு. இந்திய மேப்பிலேயே இல்லாத ஊரிலிருந்து வந்த ஸ்னேகாதான், நடப்பு ஆசிய ஜூனியர் சாம்பியன். கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய சாம்பியன் பட்டம் தட்டியதும் இவரே! அடுத்த ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் ஸ்னேகாதேவி, தற்போது 10-ம் வகுப்பு மாணவி! 'சீக்கிரமே விம்பிள்டன் சாம்பியனா விகடனுக்கு பேட்டி கொடுக்கணும்’ - இது ஸ்னேகாவின் கனவு!

இசக்கி ராஜா, 25

கிக் பாக்ஸிங்

கிக் பாக்ஸிங்கில் உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் ஒரே தமிழன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா எம்.பி.ஏ., எம்.டெக்., பட்டதாரி. ரஷ்யாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் புனேவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இசக்கி ராஜா தொடர்ந்து ஐந்து முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். ''பாக்ஸிங் போட்டிகளில் கலந்துகொள்ள ஸ்பெஷல் டயட் உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால்,  கூழ்தான் இப்போதைக்கு எனக்குக் கிடைக்கும் சத்தான உணவு. கிராமத்து இளைஞர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார்கள். அந்த சுறுசுறுப்புதான் என் மூலதனம்!'' - இது இசக்கியின் நம்பிக்கை!

தமிழகத்தின் தங்க மின்னல்கள்!

அழகு தமிழ் மொழி, 23

கூடைப்பந்து

தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் 'ப்ராமிஸிங் ப்ளேயர்’ பட்டத்தை பாக்கெட் செய்திருக்கும் அழகு தமிழ் மொழி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ''கூடைப் பந்தாட்டத்தில் உயரமானவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். என் உயரம் வெறும் 5’4 அடிதான். ஆனால், இதை விளையாட உயரமாக இருந்தால் மட்டும் போதாது, பந்தை துல்லியமாகவும் வேகமாகவும் எதிராளிக்குக் கடத்துபவர்களுக்குத்தான் அதிக செல்வாக்கு என்பது புரிந்தது. அதனால் வேகத்தில் கவனம் செலுத்தினேன். இப்போது களத்தில் நான்தான் மிகவும் வேகமான வீராங்கனை. ஆம்... வேகம் என் பலம்!'' எனும் அழகு தமிழ் மொழி தற்போது தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார்.

மகாலட்சுமி, 15

செஸ்

'என் செஸ் வாரிசு’ என்று விஸ்வநாதன் ஆனந்த் அங்கீகாரம் கொடுத்த சாதனை சாம்பியன் மகாலட்சுமி. இந்த ஜூனியர் உலக சாம்பியன் இப்போது படிப்பது 11-ம் வகுப்பு. எலெக்ட்ரிஷியன் அப்பா முகுந்தகுமாரிடம் மகாலட்சுமியின் சாதனைகள் என்னவென்று கேட்டால், ''சார் கம்ப்யூட்டர்ல மகா பேர் அடிச்சாலே, ஏகப்பட்ட விஷயம் வரும் சார். அவ்வளவு சாதனை பண்ணியிருக்கா'' என்று வெள்ளந்தியாகச் சொல்கிறார். மகாலட்சுமியின் பயிற்சி மையம், வீட்டில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறது. பள்ளியில் இருந்து நேராகப் பயிற்சி மையம், அங்கேயே கொஞ்ச நேரம் படிப்பு, பயிற்சி என இரண்டையும் சமாளித்துவரும் மகாலட்சுமியின் ஒரே குறிக்கோள்... விஸ்வநாதன் ஆனந்த் போல பல சாதனைகள் படைக்கவேண்டும் என்பதே!

தமிழகத்தின் தங்க மின்னல்கள்!

ஆர்த்தி, 19

ரோலர் ஸ்கேட்டிங்

ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆர்த்தி. மருத்துவக் கல்லூரி மாணவியான ஆர்த்தி இதுவரை தேசிய அளவில் 112 பதக்கங்களை வென்றிருக்கிறார். அதில் 95 தங்கப் பதக்கங்கள்! 2009 மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்தது ஆர்த்தியின் 'சறுக்கல்’ சாதனை! ''காலை 5.30 டு 8 வரை பயிற்சி. பிறகு கல்லூரியில் டாக்டர் படிப்பு. சாயங்காலம் ஐந்து மணியில் இருந்து மீண்டும் பயிற்சி. என் லட்சியம்... உலக சாம்பியன்ஷிப் தங்கம்!'' சிரிக்கிறார் ஆர்த்தி.

தமிழகத்தின் தங்க மின்னல்கள்!

அபராஜிதா, 19

ஸ்குவாஷ்

சர்வதேச ஸ்குவாஷ் போட்டிகளில் இதுவரை இந்தியாவின் சார்பில் 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றிருக்கிறார் அபராஜிதா. 2012, 2013 என தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கிறது அபராஜிதா அணி. தற்போது எம்.ஓ.பி. கல்லூரியில் படித்துவரும் அபராஜிதாவுக்கு உலகின் நம்பர் ஒன் ஸ்குவாஷ் வீராங்கனை ரேக்கிங்கை எட்ட வேண்டும் என்பதுதான் கனவு. ''டென்னிஸில் ஓர் எதிராளியைத்தான் சமாளிக்க வேண்டும். ஆனால், ஸ்குவாஷில் கண்ணாடியோடு சேர்த்து இரண்டு எதிராளியைச் சமாளிக்க வேண்டும். கண்ணாடியில் பட்டு பந்து எந்தத் திசையில் வரும் என்பதையே யூகிக்க

தமிழகத்தின் தங்க மின்னல்கள்!

முடியாது. இதற்கு நடுவில் எதிராளியையும் சமாளிக்க வேண்டும் என்பது கஷ்டமான சவால்!'' என்கிறார் அபராஜிதா!  

பிரபு, 23

பைக் ரேஸ் வீரர்

ரேஸ் என்பது காஸ்ட்லி விளையாட்டு என்பதை, பொய்யாக்கி இருக்கிறார் பைக் ரேஸ் சாம்பியன் பிரபு. மெரினாவில் பூ விற்பனை செய்துவரும் சுந்தரி என்பவரின் மகன் பிரபு. ''மெரினாவில் சைக்கிளில் பல வித்தைகள் காட்டுவேன். அப்போ என் மெக்கானிக் சித்தப்பா, 'இருங்காட்டுக்கோட்டையில் பைக் ரேஸ் நடக்கும். அங்கே போய் பாருடா’னு சொன்னார். பைக் ரேஸைப் பார்த்துட்டு எனக்கும் ஆசை வந்துருச்சி. சித்தப்பாதான் என் முதல் ரேஸ் ட்யூனர். அவர் ரெடி பண்ணிக் கொடுத்த பைக்கில்தான் முதன்முதலில் ஜெயித்தேன்'' என்கிறார் பிரபு.  நான்கு முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் பிரபுவுக்கு 'மோட்டோ ஜீபி ரேஸர் டேனி பெட்ரோஸா’தான் ரோல் மாடல்.