Published:Updated:

“சுமோவைத் தூக்கி வீசுவதும் பெண்களைக் கேலி செய்வதும் வீரம் அல்ல!”

பாரதி தம்பி, படம்: சு.குமரேசன்

##~##

 ட்டபொம்மன், ஊமைத்துரை, சின்ன மருது, பெரிய மருது... என தமிழ்நாட்டுக்கு தனி வீர மரபு உண்டு. காலனி ஆதிக்க ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க போரிட்டு மடிந்த துணிச்சல்மிக்க தியாகம் அவர்களுடையது. அந்த வீர மரபை தன் பெயரிலும் தூரிகையிலும் தாங்கி, வரலாற்று நாயகர்களுக்கு உயிர் கொடுத்தவர் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.

''இதை வேறு மாதிரியும் சொல்லலாம். தமிழ் வீர மரபுக்கு பல ஆதாரங்கள் நம்மிடம் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்துமே வெறும் வார்த்தைகளாக உள்ளன. எந்த வரலாற்று நாயகர்களுக்கும் நம்மிடம் உருவங்கள் கிடையாது. உருவமே இல்லாமல் அவர்களின் தியாகத்தை எப்படி நம்மால் கற்பனை செய்ய முடியும்? முடியாது. இதனால் ரத்தமும் சதையுமான வரலாறு வெறும் வார்த்தைகளாக நம்மிடம் சுருங்கி விட்டது. இதை உடைக்க வேண்டும். காட்சிபூர்வமான சித்திரிப்புகளை தமிழ்ச் சமூகத்தின் முன்னே கிடத்த வேண்டும். அப்போதுதான் அவர்களின் சிந்தனைப் பரப்பு விரிவடையும். வார்த்தைகளில் இருந்து காட்சிக்கு, காட்சியில் இருந்து கற்பனைக்கு, கற்பனையில் இருந்து கண்டுபிடிப்புக்கு... என அதுதான் அழைத்துச்செல்லும்'' என்ற மருது, தமிழ் ஓவிய உலகில் 50 வருடங்களைக் கடந்து தடம் பதிக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“சுமோவைத் தூக்கி வீசுவதும் பெண்களைக் கேலி செய்வதும் வீரம் அல்ல!”

தமிழில் சிறு பத்திரிகைகளுக்கும் வணிகப் பத்திரிகைகளுக்கும் இடையில் இருந்த இடைவெளியை, தங்களின் கோடுகளால் சமன்செய்த நவீன ஓவியர்களில் மருது முக்கியமானவர். எப்போதும் புன்னகையுடன் வரவேற்கும் அவரது மனைவி ரத்தினம் உடனிருக்க, மருதுவிடம் நிறையப் பேசியதில் இருந்து...

''2002-ம் ஆண்டு நான் முதன்முறையாக தமிழீழத்துக்குச் சென்றேன். என்னைப் பார்த்ததும் புலி வீரர்கள் ஓடிவந்து கட்டித்தழுவிக்கொண்டனர். 15 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்குத் தேவையான படங்களை வரைந்து அனுப்பியவன் நான். 'அந்தப் படங்களை நாங்கள்தான் வடிவமைப்போம் அண்ணா’ என்று மனம் கனிந்தனர். தன் தாய் மண்ணின் விடுதலைக்காக, உயிரையே தியாகம் செய்யத் தயாராக போர்முனையில் நிற்கும் மாவீரர்களின் எண்ணங்களில், நான் இருக்கிறேன் என்று உணர்ந்த அந்தக் கணம் மறக்க முடியாதது. அந்தப் பயணத்தில்தான் நான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தேன். அது, இப்போதும் நினைவில் நிற்கும் நெகிழ்வான சந்திப்பு.

பிறகு, 2004 டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பாதித்த சமயம், இரண்டாவது முறையாக அங்குச் சென்றிருந்தேன். வன்னியில், விடுதலைப் புலிகளின் ஊடக மையமான 'நிதர்சனத்தில்’ இருந்தேன். எல்லா இடங்களில் இருந்தும் வீடியோ பதிவுகள் வந்துகொண்டே இருந்தன. பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது. பிறகு, சுனாமி தாக்கிய கடலோரக் கிராமங்களுக்குச் சென்றோம். படகுகள் உடைந்து, வலைகள் சிதைந்து, வீடுகள் உருக்குலைந்து கோரமாகக் கிடந்தன. அப்போது புலிகள் செய்த அர்ப்பணிப்புமிக்க மீட்புப் பணிகளை இப்போதும் என்னால் மறக்க முடியாது.

புலிகள் என்றால் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு சண்டை மட்டும்தான் போடுவார்கள் என்ற எண்ணம், மிகத் தவறானது. மக்களோடு மக்களாக இணைந்து சிறிதும் ஓய்வின்றி புலிகள் செய்த மீட்புப் பணிகளைப் பார்த்து மனம் நெகிழ்ந்துபோனேன். எந்த மக்களுக்காகப் போராடுகிறார்களோ... அந்த மக்களுக்கு ஒரு துன்பம் என்றதும் துடிப்புடன் களத்தில் இறங்கி, ஓய்வின்றி உழைத்தார்கள். உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தனர். அந்தத் தியாகம்தான் வீரம். வீரம் என்று தனியாக எதுவும் இல்லை!''

“சுமோவைத் தூக்கி வீசுவதும் பெண்களைக் கேலி செய்வதும் வீரம் அல்ல!”

''ஆனால் சமீபகாலத் தமிழ் திரைப்படங்களில், போக்கிரித்தனம்தான் வீரமாக முன்னிறுத்தப்படுகிறது. திரைஉலகிலும் இயங்கிவருபவர் என்ற அடிப்படையில் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''இது சமகாலத்தில் நடக்கும் கேலிக்கூத்து. போக்கிரித்தனத் துக்கும் வீரத்துக்கும் தலைகீழ் வேறுபாடு உள்ளது. வீரத்தின் உண்மையான அடிக்கருத்து, தியாகம்தான். போர்முனையில், 'என் உயிர் பெரிதல்ல; நோக்கமே பெரியது’ என்று முடிவெடுத்து அதைத் தாரைவார்க்கும் அந்தக் கணம், போற்றுதலுக்குரியது. அதுதான் வீரம். டாடா சுமோவைத் தூக்கி வீசுவதும், பெண்களைக் கேலி செய்வதும் அல்ல.

“சுமோவைத் தூக்கி வீசுவதும் பெண்களைக் கேலி செய்வதும் வீரம் அல்ல!”

தமிழ் சினிமாவில் சித்திரிக்கப்படும் வீரம், போலியானது மட்டுமல்ல...  வரலாற்றுக்கு எதிரானதும்கூட. அரசர்கள் பிரமாண்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது மொகலாய அரசர் வம்சத்துக்கும், விஜயநகர சாம்ராஜ்யத்துக்கும் உரியது. தமிழ் அரசர்கள் அப்படி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கவில்லை. ஆனால் தமிழ்த் திரைப்படங்கள், 'அரசன்’ என்றாலே சிம்மாசனத்தில்தான் அமரவைக்கின்றன. ஏனெனில், மராட்டிய சினிமாவில் காட்டியதை அப்படியே இங்கும் செய்துவிட்டார்கள். அதே போல தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்படும் பெரும்பாலான ஆயுதங்கள் தமிழ்நாட்டுக்கு உரியவை அல்ல.

'பூமராங்’ எனப்படும் 'வளரி’ என்ற ஆயுதம், தமிழ் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சின்ன மருது, வேலுநாச்சியார் உள்ளிட்டவர்களும், உசிலம்பட்டி பகுதியின் மக்களும் இந்த வளரியைப் பயன்படுத்தியுள்ளனர். இதற்கான காட்சி உருவங்களை கருப்பண்ண சாமி, கள்ளழகர் போன்ற பழைய சிலைகளில் காண முடியும். அவற்றை மீட்டு, சினிமாவில் இணைக்க வேண்டும் என்று இதுவரை யாருக்கும் தோன்றவில்லை. அசலான தமிழ் மரபை, அந்த வீரத்தைக் கொண்டாடாமல்... வெறுமனே நடிகர், நடிகைகளின் நடனங்கள் மட்டுமே சினிமாவாகிவிடாது.''

''இப்போதுதான் பல எழுத்தாளர்கள் திரைத்துறைக்குள் இயங்குகிறார்களே... இந்த நிலையில் மாற்றம் வருமா?''

''எழுத்தாளர்களால் சினிமாவைக் காப்பாற்ற முடியாது. சினிமா உருவாக்கத்துக்கு, காட்சியைக் கற்பனை செய்யும் பயிற்சி தேவை. ஆனால் நம் எழுத்தாளர்கள், சினிமாவை தங்களின் எழுத்துத் திறமையை வெளிக்காட்டும் இடமாகவே பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் 'சினிமா’ என்ற காட்சி ஊடகத்தை, மறுபடியும் இவர்கள் வார்த்தைகளுக்குள் பிடித்து இழுக்கிறார்கள். எழுத்தாளர்கள், எழுதுவதால் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கக் கூடாது.

“சுமோவைத் தூக்கி வீசுவதும் பெண்களைக் கேலி செய்வதும் வீரம் அல்ல!”

எழுத்தாளர்கள் முதலில் திறமைகளை அங்கீகரிக்கவும், பாராட்டவும் கற்றுக்கொள்ள வேண்டும். இயக்குநர் பரதனை உரிய காலத்தில் பாராட்ட, தமிழ் சினிமா தவறிவிட்டது. அதுபோல இப்போது மிஷ்கினை ஒதுக்குகிறார்கள். தான் இயக்கிய அனைத்துப் படங்களிலும் ஒரு தனித்துவக் காட்சிமொழியைக் கையாண்டிருக்கிறார் மிஷ்கின். எங்கே அதைப் பாராட்டினால் தன் இடம் போய்விடுமோ என்று அஞ்சி, இவர்கள் இருளிலும் கிரீடத்தைக் கழற்றிவைக்காமல் அலைகின்றனர். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வெற்றிபெற்றால், அது அளவுகோலாகக் கருதப்பட்டுவிடும். அப்புறம் கல்யாண கேசட் மாதிரி சினிமா எடுப்பவர்கள் நிறைய யோசிக்க வேண்டியிருக்கும். இதனால்தான் மிஷ்கினை இவர்கள் புறக்கணிக்கின்றனர். மிஷ்கினுக்கு ரசிகர் மன்றம் வைப்பது என் வேலை அல்ல. ஆனால், காலம் கடந்து பாராட்டுவது, ஒரு கலைஞனுக்கு செய்யப்படும் அவமரியாதை!''

''எனில், தமிழ்க் கலைஞர்கள் ஆக்கபூர்வமாக செயல்பட என்ன செய்ய வேண்டும்?''

''நவீனத் தொழில்நுட்பம், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வளர்ந்துவருகிறது. லண்டன் வீதியில் ஒரு கலவரம் என்றால், அடுத்த 10-வது நொடியில் என் ஐ-பாடில் அதை வீடியோவாகப் பார்க்கலாம். எழுத்தும் ஓவியமும் இனிவரும் காலத்தில் வெறும் மூலப்பிரதி (Manuscript) மட்டும்தான். ஆகவே, சமகாலத்தில் ஒரு கலைஞன் முழுமையடைய, காண்பியல் மொழியறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

“சுமோவைத் தூக்கி வீசுவதும் பெண்களைக் கேலி செய்வதும் வீரம் அல்ல!”

ஒவ்வொரு கலையும் முன்பு தனித்தனியாக இருந்தது. இப்போது ஒன்றிணைந்துவிட்டது. செல்போனும், தொலைக்காட்சியும், கணினித் திரையும் இனி வேறு வேறு அல்ல. உலகின் எந்த மொழியையும் இன்னொரு மொழியாக மாற்றித்தரும் மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பம் வந்துவிட்டது. எனக்கு பிரெஞ்சு தெரியாது; ஸ்பானிஷ் தெரியாது என்பதெல்லாம் இப்போது ஒரு சாக்கே அல்ல. அந்த மொழிகள் தெரிந்திருப்பது ஒரு தகுதியும் அல்ல. எனவே, காட்சிமொழிதான் இப்போது உலகத்தின் ஒரே மொழி. மகாபாரதமும் ராமாயணமும் இத்தனை ஆண்டு காலம் எப்படி வாழ்கிறது? எழுதியதாலும், சொல்லப்பட்டதாலும் மட்டுமே அல்ல... அவை நாடகமாக, ஓவியமாக, சிற்பமாக... காட்சிமொழியில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுவருகிறது. காட்சிமொழி என்பது, மொழிக்கும் முற்பட்டது என்பதை தமிழ் அறிஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!''

'' 'மோடி பிரதமரானால் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவேன்’ என்று கன்னட எழுத்தாளர் யு.ஜி.அனந்தமூர்த்தி சொல்லியிருக்கிறார். ஆனால், இந்துத்துவ எதிர்ப்பு மரபுகொண்ட தமிழ்நாட்டுக்கு, கடந்த ஒரு மாதத்தில் மோடி இருமுறை வந்து சென்றுவிட்டார். அறிவுத் துறையினர் யாரும் எந்தக் கருத்தும் சொல்லாமல் இருப்பது ஏன்?''

''இப்போது மட்டுமல்ல... ஈழத்தில் இனஅழிப்பு நடந்தபோதும் பல எழுத்தாளர்கள் கள்ளமௌனம் சாதித்தார்கள். மிகச் சிலரைத் தவிர பெரும்பான்மையோர், அருவருப்பான அமைதியைக் கடைப் பிடித்தனர். எழுத்தாளர்கள் என்போர், மொழியைக்கொண்டு பிழைக்கிறார்கள். அவர்கள்தான் முதலில் வினையாற்றியிருக்க வேண்டும். மாறாக, சீரழிந்துபோன அரசியல் கட்சிகளைக் குறை கூறிக்கொண்டே இவர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால், அரசியல் கட்சிகளின் அவலமான சூழல், இவர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்து ஒதுங்கிக்கொள்ள வசதியாகவும் இருக்கிறது. 'யாராவது செய்யட்டும்; நாம் பின்வரிசையில் போய் நின்றுகொள்ளலாம்’ என்று நினைக்கிறார்கள். ஆனால் இவர்கள்தான், 'எழுத்தாளர்களை சமூகம் மதிப்பதில்லை’ என்று மற்ற நேரங்களில் முன்வரிசையில் இடம்கேட்டுப் புலம்பவும் செய்கின்றனர். மற்ற மாநிலங்களில் எழுத்தாளர்களிடம் உள்ள சமூகப் பொறுப்பும் ஒற்றுமையும் தமிழ்நாட்டில் அறவே இல்லை!''

“சுமோவைத் தூக்கி வீசுவதும் பெண்களைக் கேலி செய்வதும் வீரம் அல்ல!”

''உங்கள் ஓவியங்கள் உள்பட பல நுண்கலை களை ரசிக்க நுட்பமான அறிவும் ரசனைத் தேர்ச்சியும்  தேவைப்படுகின்றன. ஆனால், மக்களின் வாழ்க்கையோ ஒவ்வொரு நாளும் பெரும் நெருக்கடிகளுடன் நகர்கிறது. இதில் எங்கிருந்து மக்கள் நுண்கலைகளை ரசிப்பது?''

'' 'நவீன ஓவியங்களை வரைந்தால் புரியவில்லை என்று சொல்வார்கள். அதையே துணியில் அச்சடித்துக் கொடுத்தால் சட்டையாகப் போட்டுக்கொள்வார்கள்’ என்று மறைந்த ஓவியர் ஆதிமூலம் சொல்வார். மக்கள் எல்லோருமே உடனடிப் பயன்பாட்டுக்குப் பழகிவிட்டனர். ஒரு பொருளாக இருந்தாலும், கலையாக இருந்தாலும் அது தனக்கு உடனே ஏதோ ஒரு விதத்தில் பயனளிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், கலையும் அறிவியலும் அப்படி உடனடி பயன்பாட்டுக்கு உரியது அல்ல. ஏனெனில், அவை உடனடியாக உருவாவது அல்ல. சாதாரண ஒரு டி.வி. பெட்டி இப்போதைய வடிவத்தையும், தோற்றத்தையும், உள்ளடக்கத்தையும் வந்தடைய, எத்தனையோ கலைஞர்களும், அறிவியல் அறிஞர்களும் தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளனர். அந்த வரலாறு ஒவ்வொரு டி.வி-யின் மீதும் உறைந்துள்ளது. இப்படி ஒவ்வொன்றையும் பாருங்கள். இப்படிப் பார்ப்பதன் வழியே, உங்கள் ரசனையின் தரம் உயரும். வாழ்க்கைக்கு வேறொரு பரிமாணம் கிடைக்கும். சரியாகச் சொல்வதானால், நுண்கலைகளை ரசிப்பதன் வழியே, நீங்கள், உங்கள் வாழ்வைதான் உயர்த்திக்கொள்கிறீர்கள்!''